சீரியஸான விஷயங்களை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டு, சிரிப்பு விருந்தளிக்கும் ‘வசூல் மன்னன்.’
சரவணன் பலரிடமும் கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்காமல் சுற்றிக் கொண்டிருப்பவன். அதனால் ஊர் மக்கள் அவனை ‘அல்வா சரவணன்’ என்கிறார்கள். கடனில் சிக்கியிருப்பதோடு, திருட்டு அதுஇதுவென தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பதும் உண்டு. அப்படிப்பட்டவன் ஊரில் பெரிய தாதா ஒருவரின் மகளைக் காதலிக்கிறான். அவள் மூலமாக 10 லட்சத்தை அபகரிக்க திட்டமிடுகிறான். அந்த திட்டத்தின் விளைவுகள் படத்தின் மீதிக்கதை… இயக்கம் வேல் குமரேசன்
சரவணனாக ‘சிறகடிக்க ஆசை’ ஸ்ரீதேவா. கடன் வாங்கியவர்களின் டார்ச்சர்களிலிருந்து தப்பிக்க போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற்று, போலீஸை துணைக்கு வைத்துக் கொண்டே பிராடுத்தனம் செய்வது ரசிக்க வைக்கிறது. ரவுடியிஸத்தில் ஊறிப்போனவரின் மகளைக் காதலிப்பது, அவளிடமிருந்து பணம் பறிக்க ஸ்கெட்ச் போடுவது, காதலியின் அப்பாவை சாமர்த்தியமான செயல்களால் அடிபணிய வைத்து காதலிக்கு கணவனாவது என காட்சிகளில் பரபரப்பும் கூட்டுகிறார்.
போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டு அதற்கு முன்னோட்டமாக போலீஸ் யூனிஃபார்மை வாடகைக்கு எடுத்து மாட்டிக்கொண்டு, நிஜ போலீஸிடம் கெத்து காட்டி சிரிப்பூட்டுகிறார் புதுமுக நாயகி நிவேதா. காதல் உணர்வில் மிதப்பது, காதலனின் அப்பாவின் சுயரூபம் தெரிந்து வெறுப்பது என மற்ற காட்சிகளில் நடிப்பில் குறையில்லை.
கல்குவாரி வைத்திருப்பவர், டாஸ்மாக் பார் நடத்துபவர், சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாதவர், கட்டுப்படுத்த நினைப்பவர்களை கொன்று தீர்ப்பவர் என மிரட்டலான வில்லன் முகம் காட்டுகிறார் வேல ராமமூர்த்தி.
கதாநாயகன் அட்ராசிட்டி ஆசாமி என்றால் அதற்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் மாமனாக இயக்குநர் சரவண சக்தி, நாயகனின் அம்மாவாக ரிந்து ரவி, கிரைம் ஃபிராஞ்ச் அதிகாரியாக இயக்குநர் சரவண சுப்பையா என இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்கள் மீதும் கவனம் கூடுகிறது.
பரணி இசையில் ‘லவ்வுல மயங்கிட்டேன்’, ‘அசிறு பிசிறு அல்லக்கை’ பாடல்கள் பரவச உணர்வைத் தர, கதை நடக்கும் தர்மபுரியை அழகான கோணத்தில் காண்பித்திருக்கும் ஆர் என் சிவகுமார் மெயின் வில்லனை அதட்டி உருட்டுகிற அடுத்தகட்ட வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
ஹீரோ கடனில் சிக்கியதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும், கடனை திருப்பிக் கொடுக்க தவறான ரூட்டில் பயணித்து காரியம் சாதிப்பதெல்லாம் ‘வெரி ராங்க் புரோ’ என்று சொல்ல வைக்கிறது.
காதலன் பிராடு; காதலி போலீஸ் என்பதை வைத்துக் கொண்டு திரைக்கதையை இன்னும் கொஞ்சம் ரகளையாய் நகர்த்தியிருக்கலாம். அதை விட்டு, ஹீரோ – வில்லன் மோதல் என்ற டெம்ப்ளேட்டிலேயே ஸ்க்ரீன் பிளே எழுதப்பட்டிருப்பது சற்றே ஏமாற்றம். எது எப்படியிருந்தாலும் முன்பாதியிலிருக்கும் காமெடி கலாட்டாக்களுக்காகவே வசூல் மன்னனை முறை பார்க்கலாம்.
-சு.கணேஷ்குமார்

