பிரஜின் நடிக்க, சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ள ‘சேவகர்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் பேசியபோது, “எனக்கு தமிழ் நாட்டின் மீது, திரை உலகத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு . நல்ல நல்ல புதிய முயற்சிகளை வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். படத்தைப் பற்றி நான் பெரிதாகப் பேச விரும்பவில்லை .என் படம் பேசப்பட வேண்டும் என்று தான் நான் நினைக்கின்றேன்” என்றார்.
நாயகன் பிரஜின் பேசியபோது, “ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு நல்லது செய்யும் சேவகர்கள் நாலு பேர் இருப்பார்கள்.அவர்கள் ஊருக்கு எதாவது நல்லது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். அப்படி நல்லது செய்பவர்களைத் தடுக்கும் தீய சக்திகள் இருப்பார்கள். அப்படி நல்லது செய்யும் சேவகனும் அவனை தடுக்கும் தீய சக்திகளையும் பற்றிச் சொல்வது தான் இந்தப் படம். அப்படி ஒரு பாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன்.
இதில் பலரும் படத்திற்காக உழைத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.
ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று தான் நானும் சினிமாவில் 18 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
படத்தை திரையரங்குகளில் வெளியிடும் ஆக்சன் ரியாக்ஷன்’ ஜெனிஷ், ”இந்தப் படத்தின் கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட கதையில் பிரஜின் நடித்துள்ளார். சென்சாரில் இந்த படத்தைப் பாராட்டினார்கள். இது குடும்பத்தோடு பார்க்கும்படியான படமாக இருக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ், நடிகர் போஸ் வெங்கட், வசனகர்த்தா வி. பிரபாகர், திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் மோகன் ஜி, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.