எந்த இந்திய மொழியிலும் இதுவரை ஆராயப்படாத, தனிப்பகுதியாக விளங்கும் ஆன்மீக சிந்தனை வடிவம். எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணனின் விஸ்வரூபத்தின் பிரம்மாண்டத்தை குருஷேத்திர யுத்த பூமியில் ஸ்ரீ கிருஷ்ண பெருமான் அர்ஜீனனுக்கு, அளித்த பிரமாண்ட தரிசனத்தின் வடிவாம்சமும், விளக்கமும் ஆகும்.
இந்த ‘விஸ்வரூப தரிசனம்‘ என்ற 30 நிமிட பாடல் ஆல்பம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய இசைக் கலை பங்களிப்பு மற்றும் புகழ் மிகுந்த இசைப் பயணம் என்னும் மகுடத்தில், விலைமதிப்பிட முடியாத உயர்ந்த வைரக்கல் போன்றது.
இந்தப் பாடலைத் தயாரித்து வழங்கிய பாடகர் ஸ்ரீஹரி பேசும்போது, ”சிம்போனி நிறுவனத்தின் சார்பில் 500 ஒலி மற்றும் காணொளி ஆல்பங்களை வெளியிட்டுள்ளோம்.
இந்த பிரமாண்டமான ‘விஸ்வரூப தரிசனம்’ பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் பாடவேண்டும் என்பது இறைவனின் கட்டளை போலும்.
மார்ச் 2020 கோவிட் நோய் பரவலுக்குப் பிறகு (முதல் அலை) பாடல் வரிகளை குருநாத சித்தர் அவர்கள் எழுதியபின், பக்தி உணர்ச்சி பாவங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தவல்ல சிறந்தகுரலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணினேன். திரு. எஸ்.பி. பி. அவர்கள் தான் பொருத்தமானவர் என உணர்ந்து முடிவு செய்தேன். இந்தப் பாடலுக்கான பிண்ணனி இசை தயார் நிலையில் இல்லாதிருந்தும், திரு.எஸ்.பி.பி. அவர்கள் குரலில் இந்தப் பாடலை தாமதமின்றி உடனே ஒலிப்பதிவு செய்து முடிக்க விரும்பினேன்.
இந்த நிலையில் பெருமதிப்பிற்குரிய 86 வயதான நடமாடும் இசை நூலகம் திரு.கே.எஸ். ரகுநாதன் அவர்களிடம் இசை இல்லாமல் எஸ்.பி.பி. அவர்களைப் பாடவைத்துப் பதிவு செய்ததற்கான வலுவான காரணங்களை எதுவும் என்னால் கூற இயலவில்லை.
அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும் மற்றும் நான் அவருக்க ஒரு செல்லப்பிள்ளை போல் என்பதால், திரு.எஸ்.பி. பாலசுப்ரமண்யம் பாடவிருக்கும் பாடலை பின்னணி இசை இல்லாமல் டெம்போ கிளிக் டிராக் (TEMPO CLICK TRACK) என்னும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்ய உற்சாகமாக சம்மதித்தார். எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலின் சிந்தனை வடிவத்தையும், பாடல் வரிகளையும் வெகுவாக ரசித்து மகிழ்ந்தார். ‘இந்நாள் வரை, இத்தகைய சிந்தனை வடிவத்தையும், பாடல் வரிகளையும், இசையமைப்பையும் எந்த ஒரு இந்திய மொழியிலும் அமைக்க முயற்சித்ததாகத் தெரியவில்லை’ என்றார்.
எல்லாம் இறைவன் ஆணையில், நடக்கின்ற செயல்! இந்தப் பாடல் எஸ்.பி.பி. அவர்கள் பாடி மிகச்சிறந்ததாக வெளிவரவேண்டுமென்பது இறைவனின் திருவுள்ளம்!
நான் மட்டும் அன்று அவர் பாடிய இந்தப் பாடலை அடம் பிடித்து. பின்னணி இசை இல்லாமல் பதிவு செய்யாமல் இருந்திருந்தால் இன்று இந்தப் பாடலை நாம் இழந்திருப்போம். அவருடைய அற்புதமான. வசீகரமான. தெய்வீகமான இனிமையான மாயக்குரலை இந்த அற்புத படைப்பு இழந்திருக்கும்.
திரு. எஸ்.பி.பி. அவர்கள் பாடிய கடைசிப் பாடலான விஸ்வரூப தரிசனம் என்னும் தலைப்பில் இந்த 30 நிமிடப் பாடலை சிம்போனி வெளியிடுவதில் பெருமையும். பெருமகிழ்ச்சியும் அடைகிறது. இணையற்ற விதத்தில் இந்தப் பாடலை திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய விதம், நம்மை உருகவும் நெகிழவும் வைக்கிறது. உலகெங்கிலும் உள்ள எஸ்.பி.பி. அவர்களின் ரசிகர்களுக்கு இந்தப் பாடலை எஸ்.பி.பி. அவர்களின் கடைசிப் பரிசாக அளிக்கிறோம்” என்றார்.
பாடல் உருவாக்கத்தில் பங்களிப்பு…. பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை: திரு கே.எஸ். ரகுநாதன் பாடல்: குருநாத சித்தர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்: ஸ்ரீஹரி கூடுதல் இசை நுணுக்கங்கள்: R.குருபாத் ஒலிப்பதிவு: R.குருபாத் Dolby Atmos கலவை: ராகுல் ராமச்சந்திரன்