‘வேழம்’ சினிமா விமர்சனம்
‘சீரியல் கில்லிங்’ சப்ஜெக்டில் மற்றுமொரு படம்.
அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் காதலர்கள்; ஊட்டியைச் சேர்ந்தவர்கள். அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு முகமூடியணிந்த இருவர் கடுமையாகத் தாக்குகிறார்கள். தாக்குதலில் ஐஸ்வர்யா இறந்துபோக, தப்பிப் பிழைக்கும் அசோக்செல்வன் தன் காதலியைக் கொன்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க முயற்சிக்கிறார்.
கொலை செய்தவர்களில் ஒருவரின் குரல் மட்டுமே அசோக் செல்வனின் நினைவடுக்குகளில் பதிந்திருக்க அதை மட்டுமே வைத்து அவர் கொலைகாரர்களை நெருங்குவதும், கொலைக்கான காரணங்கள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருவதாக இருப்பதும், கொலைக்குப் பின்னே பலர் சம்பந்தப்பட்டிருப்பதும் வேழம் திரைக்கதையில் தந்திருக்கும் ஆழம்!
அசோக் செல்வனின் நடிப்பில் வரவர நல்ல மெச்சூரிட்டி. காதல் காட்சிகளில் முகபாவமும், விழிகளில் காட்டும் பழிவெறியும் ஈர்க்கிறது.
பாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடிப்பது, காட்சிகளின் தேவைக்கேற்ப இதழ்கள் துடிப்பது என ஐஸ்வர்யா மேனன் வருகிற காட்சிகளிலெல்லாம் கவனிக்க வைக்கிறார்.
காதலியைப் பறிகொடுத்த அசோக் செல்வனின் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பவராக வருகிற ஜனனியின் இயல்பான நடிப்பு கவர்கிறது!
மற்ற கதாபாத்திரங்களில் வருபவர்களின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு!
படத்தின் முதல் பாதி ஏனோதானோவென நகர்வது அயர்ச்சி தர, அதைப் போக்கும்விதமாக பின் பாதியில் சொத்துப் பிரச்சனை, பாலியல் வன்முறை என சிலபல அம்சங்களை இழுத்துப் போட்டு பரபரப்பும் விறுவிறுப்பும் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம்.
ஊட்டியின் அழகை, பசுமையை பிரமாண்டமாக காட்சிப்படுத்திய சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவு, ஜானு சந்தரின் காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசை, இதமான பாடல்கள் படத்துக்கு பலம்!