விதவிதமான குற்றப் பின்னணியில் புதுவித அனுபவம் தரும் பரபரப்பான ஆந்தாலஜி!
வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், சிம்புதேவன், ராஜேஷ்.எம்… இந்த நான்கு பிரபல இயக்குநர்கள் டீம் ஆளுக்கு அரை மணி நேரத்தைப் பங்குபோட்டு நான்கு கதைகளை பரிமாறியிருக்கும் ‘விக்டிம்.’
தம்மம்… குரு சோமசுந்தரம் விவசாயி; கடினமான உழைப்பாளி. அவர் வேலை செய்யும் நிலத்தில் இருக்கும் புத்தர் சிலை மீது, அவருடைய குழந்தை ஏறி விளையாட முயற்சிக்கிறாள். அதை கண்டிக்கும் தன் தந்தைக்கு ஒற்றை வசனத்தில் ஆன்மிகப் பாடம் நடத்துகிறாள். இது ஒருபக்கமிருக்க, கதையில் வரும் கலையரசன் ஒருசிலரால் வெட்டப்பட அதற்கு காரணம் குரு சோமசுந்தரம்தான் என கருதி அவரை கொலை செய்யத் துரத்தும் மனிதர்கள் என இன்னொரு பக்கம் கதையோட்டம் பரபரக்கிறது. கிளைமாக்ஸ் பலருக்கும் படிப்பினை. ஆதிக்க மனோபாவத்தைச் சாடுகிற, நுணுக்கமாய் அரசியல் பேசுகிற வசனங்களுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்!
கதைக்களம்; புத்தர் சிலை; அதன் மூலம் கற்பிக்கப்படும் தத்துவம்; இயல்பாக நடித்திருக்கும் நடிகர்கள் என அத்தனையும் கவர்கிறது. அந்த சுட்டிக் குழந்தை பேபி தாரணியின் நடிப்பும் ஈர்க்கிறது. இயக்கம்: பா.இரஞ்சித்
மிரேஞ்ச்… அந்த வீட்டில், அந்த இளம் பெண்ணுக்கு பலமான கறி விருந்துக்கு ஏற்பாடாகிறது. விருந்து படைக்கும் நபர் தன் குடும்பத்தினருடன் அந்த பெண்ணை அமர்ந்து சாப்பிட அழைக்கிறார். ஆனால், அங்கு தன்னையும் அந்த ஆசாமியையும் தவிர ஒருவரும் இல்லை என்பதை உணர்கிறாள். பயத்துக்குள் விழுகிறாள். அந்த நபர் கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார். பின் அவர் தனக்குத் தானே விபரீத முடிவை தேடிக் கொள்கிறார். அதையடுத்து அந்த பெண்ணுக்கு என்னவானது? முந்தைய அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் என்ன? என்பதே கிளைமாக்ஸ்.
நட்டி நட்ராஜ் தனது டெரரான நடிப்பால் மிரட்ட, பிரியா பவானிசங்கர் கண்களில் மிரட்சியைக் காட்ட, 1/ 2 மணி நேரத்தில் எளிமையான கதையாலும் திகிலும் திரில்லும் பின்னிப் பிணைந்த திரைக்கதையாலும் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ராஜேஷ்.எம்
கொட்டைப் பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்… பத்திரிகையாளர் ஒருவர் தனது வேலையில் தனித்துவ திறமை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார். அதற்காக, பல நூற்றாண்டுகளாக வாழ்கிற சித்தர் ஒருவரை நேரில் சந்தித்து பேட்டியெடுக்க முயற்சிக்கிறார். சித்தரையும் சந்திக்கிறார். அவர் நிகழ்த்தும் அற்புதங்களில் திளைக்கிறார். நிகழ்வதெல்லாம் யாரோ ஒருவரால் நிகழ்த்தப்படுவது என விரியும் காட்சிகளில் இருக்கிறது ரசிக்கவைக்கும் அம்சங்கள். இயக்கம்: சிம்புதேவன்
சித்தராக நாசர், பத்திரிகையாளராக தம்பி ராமையா. நடிப்பில் தேர்ந்த இருவரும் சந்திப்பது, உரையாடுவது என நகரும் காட்சிகளில் தம்பி ராமையாவின் அப்பாவித்தனம் கூடுதலாய் கவர்கிறது. முக்கிய காதாபாத்திரத்தில் வரும் ‘பிளாக்ஷிப்’ விக்னேஷ் காந்தின் பங்களிப்பு பக்கா!
கன்ஃபெஷன்… அந்த இளைஞன் அந்த இளம்பெண்ணை சுட்டுக் கொல்ல தூரத்திலிருந்து அதிநவீன துப்பாக்கியால் குறிவைக்கிறான். அவள் இதுவரை செய்த பாவங்களை சொல்லி மன்னிப்பு கேட்டால் உயிர் பிழைக்கலாம் என்ற சலுகை வழங்கப்பட ஆரம்பத்தில் பிடிவாதமாக இருக்கும் அவள் பின்னர் தான் செய்த தவறுகளை வரிசைப்படுத்துகிறாள். அவற்றில் சில அதிர வைப்பவை; சில ‘அந்த’ மாதிரியானவை. எல்லாவற்றையும் ஒளிவுமறைவின்றி சொன்ன அவள் தனக்கான ஆபத்திலிருந்து மீண்டாளா இல்லையா என்பது திரைக்கதையின் ஒரு பகுதி. அவளை கொலை செய்யத் தூண்டியது யார் என்ற கேள்விக்குப் பதில் இன்னொரு பகுதி. முடிவு முழுக்க முழுக்க எதிர்பாராதது.
கதையின் பிரதான பாத்திரங்களான பிரசன்னாவின் ஸ்மார்ட் வில்லத்தனம் நேர்த்தி. அமலா பாலின் அழுகை, உயிர்ப் பிச்சை கேட்டு கெஞ்சும் விதம், பேச்சோடு பேச்சாக பிராவைக் கழட்டுவதில் இருக்கும் மெல்லிய கவர்ச்சி அத்தனையும் உயிரோட்டம்! இயக்கம்: வெங்கட் பிரபு

பின்னணி இசையால் கதையோட்டத்தை பரபரப்பாக்கியிருக்கும் இசையமைப்பாளர்களுக்கு (தென்மா, பிரேம்ஜி, கணேஷ்சேகர், சாம் சி.எஸ்.) தனி பாராட்டு!
விறுவிறுப்பான (ஓவ்வொன்றும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓடும் விதத்தில் எடுக்கப்பட்ட) இந்த நான்கு படங்களையும் ஒரே தொகுப்பாக சோனி லிவ் (Sony Liv) ஓ.டி.டி. தளத்தில் இன்று முதல் (ஆகஸ்ட் 5; 2022) பார்க்கலாம். வித்தியாசமான அனுபவத்தை பெறலாம்.