விடாமுயற்சி சினிமா விமர்சனம்

கதையின் முக்கியத்துவத்தைக் கூட்டுவதற்காக ஹீரோயிஸத்தை பாதியாக குறைத்துக்கொண்டு களமிறங்கிய அஜித்; ஹாலிவுட் ஸ்டைலில் கோலிவுட் படம் தர நினைத்த மகிழ் திருமேனி; இருவரின் கூட்டு முயற்சியில் அனிருத்தும் அட்டனன்ஸ் போட அதிரிபுதிரி சம்பவங்களின் அணிவகுப்பாக ‘விடாமுயற்சி.’

12 வருட மணவாழ்க்கைக்குப் பிறகு, தன்னை சட்டப்படி பிரிய முடிவெடுத்த மனைவி கயலை அவளது ஊரில் கொண்டுபோய்விட முடிவெடுக்கிறான் அர்ஜுன். அந்த ஊருக்கு போய்ச்சேர காரில் ஒன்பது மணி நேரம் வரை பயணிக்க வேண்டும். பயணம் துவங்குகிறது. இடையில் கார் ‘பிரேக் டவுன்’ ஆகிறது. சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைமை. அந்த நெருக்கடியான சூழ்நிலையில் கயல் சிலரால் திட்டமிட்டுக் கடத்தப்படுகிறாள்.

கடத்தியது யார் என்பதில் பெரிதாக எந்த சஸ்பென்ஸும் இல்லை; அது கொஞ்ச நேரத்திலேயே அர்ஜுனுக்கு தெரிகிறது. அதற்கு முன்பே படம் பார்க்கும் நமக்கு தெரிந்து விடுகிறது.

அப்புறமென்ன… கயலை மீட்பதற்கான அர்ஜுனின் போராட்டம், அவன் சந்திக்கும் சவால்கள், கஷ்ட நஷ்டங்கள் காட்சிகளாக விரிய,

கடத்தியவர்களின் பின்னணி என்ன, அவர்களின் நெட்வொர்க் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் திரைக்கதை,

கடத்தல் எதற்காக என்பதை கிளைமாக்ஸ் வரை தக்கவைத்திருப்பது ஹைலைட்!

அர்ஜுனாக பெயருக்கு முன் ‘பத்மபூஷன்’ பெருமிதம் இணைந்திருக்கும் அஜித் குமார். மனதுக்குப் பிடித்தவளுடன் செலவிடும் தருணங்களில் வெளிப்படுத்தும் பரவசம், கடத்தல்காரர்களிடம் மனைவியை பறிகொடுத்தபின் கலக்கம், மனைவியைத் தேடி அங்குமிங்கும் ஓடுவதில் காட்டும் பதற்றம் என உணர்வுபூர்வமான நடிப்பை தந்து,

கடத்தல் குழுவினரால் அடிக்கடி தாறுமாறாய் தாக்கப்பட்டு ரத்தம் சிந்துவது, அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இயலாமைக்கு தள்ளப்படுவது என கடந்துபோகும் காட்சிகளுக்கான தன் மாஸ் ஹீரோ அந்தஸ்திலிருந்து இறங்கி வந்திருப்பது எதிர்பாராதது. அதையெல்லாம் கண்டு சற்றே சோர்வு மூடுக்கு போய்விடுகிற ரசிகர்களை உற்சாகமூட்ட, இடைவேளைக்குப் பிறகு அதிரடி ஆவேசத்துடன் இறங்கியடித்து எதிரிகளை கதறவிடும்போதும் ‘ஸவதீகா’ பாடலுக்கு உற்சாக ஆட்டம்போடும்போதும் தியேட்டர் விசில் சத்தத்தில் அதிர்கிறது.

எத்தனை வயதானாலும் இளமையும் புன்சிரிப்பின் வசீகரமும் குறையாதிருக்கும் திரிஷா அஜித்துடனான காதலில், கணவன் மனைவியான பின்னரான வாழ்க்கையில், கணவனைப் பிரிகிற சந்தர்ப்பத்தில் நடந்துகொள்ளும் விதத்தில்  அழுத்தமான நடிப்பால் தன் பாத்திரத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்.

படு ஸ்டைலாக வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லத்தனத்திலும் அதே ஸ்டைலை பரிமாறியிருக்க, அவருடைய பார்ட்னராக வருகிற ரெஜினா கஸண்ட்ராவிடம் மிரட்டலான சைக்கோதனத்தை பார்க்க முடிகிறது.

உயரத்துக்கும் வாட்டசாட்ட உடம்புக்குமான கம்பீரத்தை நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார் கடத்தல்காரர்களில் ஒருவராக வந்து அஜித்தை கதிகலங்க வைக்கிற ஆரவ்.

இன்னபிற நடிகர் நடிகைகள் கதையோட்டத்தில் சரியான விகிதத்தில் கலந்திருக்கிறார்கள்.

‘மல்லிமல்லியா’ பாடலை ஃபயர் விடுமளவு ரசிக்கவைத்து, விடாமுயற்சி பாடலையும் அதே பாடலை தொட்டுத்தொடர்கிற தீம் டிராக்காலும் பின்னணி இசையாலும் கதையின் நகர்வுக்கு எனர்ஜியை ஏற்றியிருக்கிறார் ராக் ஸ்டார் அனிருத்.

நீள…..மான சாலைகள், தப்பித்தவறியும் பசுமை தென்படாத திரும்பிய பக்கமெல்லாம் மணல்மேடுகள் சூழ்ந்த அபர்பைஜானை வியந்து பார்க்கிற விஷுவல் டிரீட்டாக மாற்றியிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் வைத்திருக்கும் கேமரா கோணங்கள்.

ஆக்சன் காட்சிகளில், குறிப்பாக காருக்குள் நடக்கும் மோதலில் ஸ்டண்ட் கோரியோகிராபர் சுப்ரீம் சுந்தரின் ஈடுபாடு நிரம்பிய உழைப்பு படத்திற்கு பலமாகியிருக்கிறது.

வெளிநாட்டில் பாலைவனமாக காட்சியளிக்கிற நிலப்பரப்பில் ஓரு பயணம், அதில் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவன் விடுபடுகிற மகிழ்ச்சியான முடிவு என்ற கதைக்களம் நிச்சயம் விறுவிறுப்பானதுதான். வில்லனின் செயல்பாடுகளில், கதாநாயகன் வில்லனை நெருங்குவதில் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் புகுத்தியிருந்திருந்தால் காட்சிகளில் சுவாரஸ்யம் பலமடங்கு கூடியிருக்கும்.

விடாமுயற்சி _ வீரியம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here