வித் லவ் சினிமா விமர்சனம்

இந்தாள் காதலர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை திட்டமிட்டுச் சந்திக்கும் கதை. இந்த இன்ட்ரஸ்டிங்கான ஒன்லைனுக்கு இயக்குநர் மதன் அமைத்திருப்பது முழுக்க முழுக்க சுவாரஸ்யமான ஸ்க்ரீன்பிளே.

வெறுமனே சந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அன்று சொல்லாமல் விட்ட காதலைச் சொல்லவும் முடிவெடுத்து மூவாகும்போது ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கு போகாமலிருக்க முடியாது. அந்த விஷப்பரிட்சையின் விளைவுகளால் ‘வித் லவ்’க்கு கிடைத்திருப்பது 100% எனர்ஜி.

தமிழ்த் திரையுலகுக்கு உணர்வுபூர்வமாக, கலகலப்பாக, ஜென்ஸி தலைமுறையைக் கவர்கிற விதமாக நடிக்கத் தெரிந்தவராக கிடைத்திருக்கிறார் ‘நீ நடிடா கண்ணா’ என சூப்பர் ஸ்டாரால் ஊக்குவிக்கப்பட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த்.

மனதுக்குப் பிடித்த பெண்ணுக்காக ஆண் எவ்வளவு வேண்டுமானாலும் பணிந்து போவான் என்பது இயல்பு. இந்த கதையின் ஹீரோவுக்கு தன்னை உருட்டலும் மிரட்டலுமாக டீல் செய்கிற பெண்ணிடம் பணிந்து போவது மட்டுமல்லாது குனிந்தும் போக வேண்டிய கட்டாயம். என்னதான் பணிந்தாலும் குனிந்தாலும் அந்த பெண்ணுடைய மனதை சங்கடப்படுத்தும் சந்தர்ப்பங்கள் துரத்திக் கொண்டேயிருக்க, ‘ஐயோ பாவம்’ என உச் கொட்டியபடியே அவர் படும் அவஸ்தைகளை ரசிக்க முடிகிறது. அப்படியொரு துள்ளலான நடிப்பு. காட்சிக்கு காட்சி அப்ளாஸ் அள்ளுகிறது. காதலி இனி தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற நினைப்பு வந்தபின் உடைந்து அழுகிற தருணம் லேசாகவாவது ரசிகர்களை கண் கலங்க வைப்பது உறுதி.

அபிஷனுக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன். ‘ஐயோ கொல்றாடா’ என்று சொல்லும்படியான அழகு சுமந்திருக்கிற அந்த தேவதை ஓபீஸ், கோன்பிடன்ட் என்றெல்லாம் வார்த்தைகளில் மலையாள வாசனை வீச சொந்த குரலில் வசனம் பேசும்போது அந்த இதழ்களைத் தாண்டி பார்வையை நகர்த்த முடியவில்லை. தான் எகிற எகிற தன் காதலன் இறங்கிப் போவதை ரசிப்பதாகட்டும், முகம் திருப்பி நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதாகட்டும் மனம் முழுக்க காதலை நிரப்பிக் கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொடுக்கும் விதமாகட்டும், சரக்கடித்து மூடாகி படுக்கையில் சாய்ந்து காதலனை இழுத்துக் கடிப்பதாகட்டும்… மிதமான பெண்ணாதிக்கம் எட்டிப் பார்க்கும் கேரக்டரின் தன்மை பிரதிபலிக்கும் அந்த நடிப்புக்காக அனஸ்வராவை ‘க்யூட் குயின்’, ‘எக்ஸ்பிரஷன் எக்ஸ்பிரஸ்’ என எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்.

ஹீரோ, ஹீரோயின் படிக்கும் பள்ளியின் ஆசிரியராக சரவணன், அபிஷனின் முன்னாள் காதலியாக வருகிறவர் என இன்னபிற கேரக்டர்கள் அத்தனைக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறது திரைக்கதை. அத்தனைப் பேரும் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் ‘ஐயோ காதலே’ பாடலுக்கான இசையில் அதிகப்படியான அதிரடி காட்டி, மற்ற பாடல்களில் இனிமைகூட்டி காதலர்களில் பிளே லிஸ்டில் இணையும்படி செய்திருக்கிறார். பின்னணி இசை ஸ்ரீரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் பளிச் பளிச்.

ஒரு விதத்தில் இது ’96’ படத்தின் சாயல் தெரிகிற காதல் கதைதான். அதில் இன்றைக்கு தியேட்டர்களைத் தேடி வருகிற தலைமுறையின் பல்ஸ் புரிந்து தொகுக்கப்பட்ட காட்சிகள் நிரம்பியிருப்பதால், ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பு மசாலாவை அள்ளித் தெளித்திருப்பதால் படம் ஜென் ஸி உலகின் முழுமையான ‘வைப்’ மெட்டீரியலாகியிருக்கிறது.

வித் லவ் _ ஹவுஸ்ஃபுல்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here