ஹாரர் சப்ஜெக்டில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாகவும் அதிரும்படி பயமுறுத்தும் விதமாகவும் உருவாகியிருக்கும் படம் ‘யாமன்.’
இந்த படம் வரும் மே மாதம் 9-ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
கதாநாயகனாக சக்தி சிவன் கதாநாயகியாக காயத்ரி ரேமா வில்லனாக சம்பத்ராம் காமெடியனாக உதயராஜ், இயக்குநர் எல்.ராஜா, ஆதேஷ் பாலா, சம்பத் ராம் திருச்சி சாதனா, ரஞ்சன், அருள் டி.சங்கர், தயாளன், கோவை உமா. பார்த்திபன், இளையராஜா, கோவிந்தராஜ் செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு மாநகரத்தையே தன்வசம் வைத்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. மிகப்பெரிய பங்களாவை வேறு ஒருவரிடம் இருந்து மிரட்டி எழுதி வாங்கியுள்ளார். அதே பங்களாவிற்கு இன்றைய ரௌடி ஒருவனும் ஆசைப்படுகிறான். இந்நிலையில் கிராமத்தில் ஒரு பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட, அவளது ஆவி இவர்களையெல்லாம் எவ்வாறு பழி வாங்குகிறது என்பதே கதை. அந்தப் பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டாள், ஹீரோவுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ளார் கே.எஸ்.மணிகண்டன்.
அவரிடம் படம் பற்றி கேட்டபோது படத்திற்கு, ”யாமன் என்னும் சொல் ஒருவர் உடலில் புகுந்து தாக்குவதாகும். பேய்க்கு இன்னொரு பெயராக யாமன் என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பயமுறுத்தும். அந்தளவுக்கு கதையும் பின்னணி இசையும் அமைந்துள்ளது. பயமுறுத்துவது மட்டுமல்லாமல் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்” என்றார்.
படப்பிடிப்பு சென்னை, கோவை, வேலூர், ஊட்டி, தூத்துக்குடி, நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் 48 நாட்களில் நடந்து முடிந்துள்ளது.
படத்தில் பேய் சார்ந்த காட்சிகள் அதிகமாக இருப்பதால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. அதிரடி சண்டை காட்சிகளை பேய் காட்சிகளுடன் இணைத்திருப்பதால் ஆக்சன் விரும்பிகளையும் இந்த படம் திருப்திபடுத்தும் என்கிறது படக்குழு.
படத்திற்கு மாதவன் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். சக்திசாம் இசையமைத்துள்ளார். உதய பாலா, சுஜய் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். சண்டைப் பயிற்சி – ரவிராஜ், தயாரிப்பு நிர்வாகம் – சசிகுமார், மக்கள் தொடர்பு – கார்த்திக்.


