வழக்கமான ஹரி பார்முலா படம் மிகச்சில மாற்றங்களோடு…
பெரு முதலீட்டுத் தொழில்கள் பலவற்றில் புகுந்து புறப்பட்டு, பெரும் சாம்ராஜ்யமாகப் பரந்து விரிந்த அந்த கோடீஸ்வரக் குடும்பத்தின் தலைவர் ராஜேஷ். அவரது முதல் தாரத்துக்கு சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் என மூன்று பிள்ளைகள். அடுத்த தாரமான ராதிகாவின் வாரிசாக அருண் விஜய்.
அண்ணன்கள் மூவரும் சாதிப் பற்றுடையவர்கள்; பணத் திமிரில் மிதப்பவர்கள். தம்பி எல்லோர் மீதும் பாசப்பற்றுடையவன். அண்ணன்கள் எதையும் காதும் காதும் வைத்த மாதிரி சாதிக்க விரும்புபவர்கள். தம்பி அநீதியைக் கண்டால் கொதித்துக் கொந்தளிக்கிற சூறாவளி. அண்ணன்களுக்கு தம்பியைப் பிடிக்காமல் போக வெறென்ன காரணம் வேண்டும்? மாற்றாந்தாயின் பிள்ளை என்ற இளக்காரம் வேறு!
அண்ணன்களில் மூத்தவரின் மகள் அம்மு அபிராமி மாற்று மதத்து இளைஞனைக் காதலித்து அவனோடு ஊரைவிட்டு எஸ்கேப் ஆகிவிட, அதற்கு தம்பிதான் காரணம் என அண்ணன்கள் தவறாகப் புரிந்துகொள்ள, குடும்பத்தில் புயல் வீசுகிறது. விளைவாக அண்ணன்கள் தம்பியை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்ல, அதை அப்பாவும் ஆமோதிக்க, தம்பி வீட்டை விட்டு வெளியேறும்போது அவனுக்குத் துணையாய் இணைகிறார் அம்மாவான ராதிகா!
சாதிவெறிபிடித்த அண்ணன்கள், ஓடிப்போன மகளையும் மகளைக் காதலித்தவனையும் ஆணவக் கொலை செய்ய முடிவு செய்கிறார்கள். சொத்தில் பங்கு கொடுக்காமலிருக்க தம்பியை போட்டுத்தள்ளவும் திட்டமிடுகிறார்கள். அதற்காக தங்கள் தொழில் எதிரியை நாடுகிறார்கள். அதன்பின் என்னவாகும் என்பதெல்லாம் எளிதில் யூகிக்க முடிந்தவை… ஒருசில திருப்பங்கள் ‘அட’ போட வைப்பவை…
அருண் விஜயின் அண்ணன் மகள் முஸ்லீம் இளைஞனைக் காதலித்து கலவர களேபரத்தில் சிக்கிச் சீரழிவது ஒரு பக்கம் பரபரப்பாக நடந்தேற, இன்னொரு டிராக்கில் அருண் விஜய் காதலிப்பது கிறிஸ்தவப் பெண்ணை என்பது விறுவிறுப்பைக் கூட்டுபவை…
இந்த கதையை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பரபரப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி!
பாசக்காரனாகவும், ஆக்ரோஷக்காரனாகவும் நடிப்பில் இருவேறு பரிமாணங்களைப் பந்திவைக்கும் பாத்திரத்தில் அருண் விஜய். ‘யானை’ பலத்தோடு சண்டைக் காட்சிகளில் சுனாமியாய்ப் பாய்பவரைக் கண்டால் அவரது புடைத்திருக்கும் நரம்புகள் வெடித்து எரிமலைக் குழம்பு சிதறுமோ என எதிராளிக்கு பயம் தொற்றுகிறது. சென்டிமென்ட் காட்சிகளில் நம் கண்களைக் கடலாக்குகிறது அவரது உடல்மொழி!
அருண் விஜயின் மனதுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சியாக பிரியா பவானிசங்கர். காரணமேயில்லாமல் மென்சோகம் சுமந்து திரியும் அவரிடமிருந்து ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் அழுத்தமான நடிப்பு!
ராஜேஷ், ராதிகா, சமுத்திரகனி, போஸ் வெங்கட், அம்மு அபிராமி, ஓஏகே சுந்தர், ஜெயபாலன், வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ ராமச்சந்திர ராஜு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்… எவர் நடிப்பிலும் குறையில்லை!
அப்படி திரும்பினால் வெட்டுக் குத்து, இப்படி திரும்பினால் குடும்பச் சண்டை என சீரியஸாக படபடத்துத் தடதடக்கும் திரைக்கதையில் யோகிபாபு வருகிற காட்சிகளில் தருகிற காமெடி ஆறுதல். அதிலும் தலைவாசல் விஜயை கிண்டலடிக்கிற தருணம் கண்டிப்பாக சிரித்தே தீரணும். அவரிடமிருக்கும் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தவும் ஒன்றிரண்டு காட்சிகள் உண்டு!
போகிற போக்கில் யோகிபாபு ‘சைனா பிரியாணி’ கடையை அடித்து நொறுக்குவதில் இருக்கிறது அக்கறையான விழிப்புணர்வுப் பிரச்சாரம்!
கெக்கேபிக்கே காமெடிக்கு இடமில்லாத, சற்றே கனமான பாத்திரம் ஏற்றிருக்கிற இமான் அண்ணாச்சியும் தனித்துத் தெரிகிறார்!
கோபிநாத்தின் கேமரா கதை நிகழ்விடமான ராமநாதபுரத்தின், ராமேஸ்வரத்தின் நீள அகலங்களை காட்சிப் படுத்தியதாகட்டும், பாம்பன் பாலத்திலேறி கடலுக்குள் பாய்ந்து மீள்வதாகட்டும் அத்தனையும் நேர்த்தி!
தீ பிடித்தாற்போன்ற சண்டைக் காட்சிகளுக்கு பெட்ரோல் ஊற்றுவது போலிருக்கிறது ஜி.வி. பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசை. வேல்முருகன் குரலில் ‘சண்டாளியே’ பாடல் மனதுக்குள் உற்சாக ஊற்றைத் திறந்துவிடும்!
இயக்குநர் ஹரி தனது வழக்கமான பாணியிலேயே ‘யானை’யையும் எடுத்திருக்கிறார். இந்த படத்தைப் பார்க்கும்போது அவருடைய முந்தைய படங்களின் காட்சிகள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன. காமெடி டிராக்கிலும் பழைய வாசனைதான். இருக்கட்டுமே… ஃபாஸ்ட் ஃபுட்டைவிட பழைய சோறு ஆரோக்கியம்தான்!
Movie Credits : Starring – Arun Vijay, Priya Bhavani Shankar, Samuthirakani, Yogi Babu, Ammu Abirami, KGF Ramachandra Raju, Radhika Sarathkumar, Aadukalam Jayapalan, Imman Annachi, Rajesh, Aishwarya, Bose Venkat, Sanjeev, Pugazh Story, Screenplay, Dialogue & Direction : Hari Production House : Drumsticks Productions Producers : Vedikkaranpatti S. Sakthivel Music – G.V. Prakash Kumar DOP – Gopinath Art Director – Micheal B.F.A Editor – Anthony Lyrics – Snehan, Ekadasi, Arivu Stunts – Anl Arasu Co Director : N. John Albert Choreography – Baba Baskar, Dhina Production Executive – Chinna R. Rajendran Cashier – N.G.Arjun DI, VFX & Sound Design – Knack Studios Sound Mix – T. Udhaya Kumar Chief Make-Up Artist – Muniyaraj Costumer – Rangasamy Stills – Saravanan Costume Designer – Nivetha Joseph, Geetu PRO – Sathish Aim Publicity Design – Reddot Pawan Promotions – CTC MEDIA BOY Educational Partner – Clusters Media College Music on – DRUMSTICKS PRODUCTIONS