யெல்லோ சினிமா விமர்சனம்

இன்பத்தை தட்டிப் பறிக்கும் சூழ்நிலைகளில் சிக்கி, இயற்கையை ரசித்து மீண்டெழுகிற பெண்ணாக கதைநாயகியை படைத்திருக்கும் ‘யெல்லோ.’

இளம்பெண் ஆதிரை அப்பாவின் உடல்நிலை பாதிப்பால், காதல் தோல்வியால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல்களில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க கேரளாவுக்கு டிரிப் போகிறாள். போன இடத்தில் தனது தோழியை சந்தித்துப் பேசி மகிழ்கிறாள்; அவளது யோசனையைக் கேட்டு வேறொரு இடத்துக்கு போய் சேர்கிறாள். அங்கு, காதலியைப் பிரிந்து சுற்றிக் கொண்டிருக்கிற ஒரு இளைஞனை சந்திக்கிறாள். இருவரும் நட்பாகிறார்கள். ஆதிரையின் பயணத்தில் அவனும் சேர்ந்து கொள்கிறான். அவனுடனான அந்த பயணத்தில் உற்சாகமும் சில சிக்கல்களும் உருவாகிறது. அப்படியே தொடரும் அந்த பயணம் அவர்களுக்கு எதை கொடுத்தது, எதை கெடுத்தது என்பது கதையின் மீதி…

ஆதிரையாக வருகிற பூர்ணிமா ரவியின் முகத்தில் மென் சோகமும் மெல்லிய புன்னகையும் இணைந்து குடியிருக்கிறது. அது காதல், காதல் தோல்வி, அப்பா மீது பாசம், தோழியின் நடவடிக்கைகளால் மனதில் உருவாகிற குழப்பம், திடீர் நண்பனின் அக்கறையால் ஏற்படுகிற நெகிழ்ச்சி, இயற்கையை ரசித்தல் என காட்சிகளுக்கு தேவையான உணர்வை கச்சிதமாக பிரதிபலிக்கிறது.

பூர்ணிமாவின் மனதளவில் இடம்பிடித்து நண்பனாகி, கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் உடலாலும் கலக்கிற வைபவ் முருகேசன் ‘எது நடந்தாலும் பாத்துக்கலாம்’ என்ற மனநிலையில் இருப்பவராக பிரதிபலித்திருப்பது துறுதுறு நடிப்பு!

ஆதிரையின் தோழியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி. சிக்ஸ் டேஸ் பழகிய ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்பவராக, ‘லைஃப் என்ஜாய் பண்றதுக்கானது’ என்பதற்கான உதாரணமாக வலம் வருகிறார்.

வினோதினி வைத்தியநாதன், இயக்குநர் பிரபு சாலமன், லீலா சாம்ஸன், விக்னேஷ்வர், அஜய், லோகி, சாய் பிரசன்னா என இன்னபிறர் ஏற்ற கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பைத் தர,

கிளிபி கிரிஸின் இசையில் பாடல்கள் இதம் தரும் இசையால் காட்சிகளில் கரைகிறது; மனதில் நிற்க மறுக்கிறது.

ஆரம்பக் காட்சியில் அளவுக்கதிக அதிரடியுடனும் போகப்போக கதையின் தன்மைக்கேற்பவும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஆனந்த் காசிநாதன்.

தமிழகத்தின் மார்த்தாண்டம், கேரளாவின் சிலபல பகுதிகள், பிரமாண்ட ஏரிகள், போட் ஹவுஸ், அதையும் தாண்டி வெவ்வேறு மாநிலங்கள் என கதைநாயகி பயணப்படும் சாலையோரங்களில் பரந்து விரிந்த பசுமை, அருவிகள், மலைகள் என அத்தனையும் கொள்ளை அழகு. அந்த ஒட்டுமொத்த அழகையும் தன் கேமராவில் இழுத்துப் பிடித்து திரையில் இறக்கியிருக்கிறார் அபி ஆத்விக்.

ஹீரோயினை வானவில் காதலியாக்கி, திரைக்கதையை கவிதைபோல் அமைத்திருக்கும் இயக்குநர் ஹரி மகாதேவன், மெல்லமாக நகரும் ‘யெல்லோ’வின் காட்சிகள் எல்லோரையும் கவரும் என கருதியிருந்தால் அது தவறென படத்திற்கான வரவேற்பு உணர்த்தும்!

-சு.கணேஷ்குமார்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here