‘மஹா வீர்யர்‘ சினிமா விமர்சனம்
மலையாள படங்களில் கதையாழப் படங்களுக்கு குறைவில்லை. இதோ இன்னொன்று ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையாக!
பல வருடங்களுக்கு முந்தைய மன்னராட்சிக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு மன்னர் ஒருவரால் நேர்ந்த துயரச் சம்பவங்களையும் அதற்கு இந்தக்கால நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பையும் இணைத்து திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் அப்ரித் ஷைனி. மூலக்கதை கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான எம்.முகுந்தனுடையது!
சிலை திருடியதாக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏற்றப்படுகிற சன்னியாசி நிவின்பாலி தனக்காக தானே வாதாடுகிறார். கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை மையமாக வைத்து வாதாடி தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார். அவரது வாதம் இந்தக் காலத்தில் செல்லாது என்கிறது நீதிமன்றம். அதே நேரம் ஆதிகாலத்து வழக்கு ஒன்று அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர, அப்போது பதவியிலிருந்த மன்னர் மீது குற்றம் சுமத்திய இளம் பெண்ணும், மன்னரும் நிதிமன்றத்தில் ஆஜராக வழக்கில் என்னவிதமான தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதே கதையோட்டம்.
படத்தின் ஹீரோவாக, மன்னர் வேடத்தில் லால். தீராத விக்கல் பிரச்சனையில் அவதிப்படுபவராக தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற நிவின்பாலி இந்த படத்தில் ஏற்றிருப்பது கெஸ்ட் ரோல். அவரது சன்னியாசி தோற்றம் கவனத்தையும், அவர் எடுத்து வைக்கும் நீதிமன்ற வாதம் கருத்தையும் ஈர்க்கிறது! படத்தை தயாரித்திருப்பதும் அவரே!
மேன்லியாக இருக்கிறார் அமைச்சராக வருகிற ஆஷிப் அலி. அவரது புத்திசாலித்தனம் வியப்பு; ரொமான்ஸ் காட்சிகள் சிலிர்ப்பு!
மன்னர் மீது குற்றம் சாட்டிய பெண்ணை, நீதிமன்றத்தில் மன்னர் முன் அழவைக்க முயற்சிக்கும் காட்சியில் நீதிபதியாக வருகிற சித்திக்கின் நடிப்பு வியக்க வைக்கிறது!
லட்சணமான முகத்துடனும், அபாரமான வளைவு நெளிவுகளுடனும் கதைநாயகி ஷான்வி ஸ்ரீவத்சவா. கதை வலியுறுத்துவதற்கேற்ப நீதிமன்றத்தில் அரைநிர்வாணமாக இல்லையில்லை கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக நடித்திருக்கிற துணிச்சலுக்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!
திரைக்கதையோட்டத்துக்கேற்ற பின்னணி இசை, டைம் டிராவல் கதைக்கான எடிட்டிங் நேர்த்தி படத்தின் பலம்!