தமிழ் சினிமாவில் மற்றுமொரு பரபரப்பான கிரைம் திரில்லர்; எளிய பட்ஜெட்டில்!
கொடூரமாக கொலை செய்யப்பட்டு சில நாட்கள் கடந்த நிலையில் அந்த இளைஞனின் உடல் ஒரு வீட்டிலிருந்து கிடைக்கிறது. குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கும் காவல்துறைக்கு, அந்த இளைஞனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஆகியிருப்பதும், அவன் அந்த பெண்களை தன் சுயநலத்துக்குப் பயன்படுத்தி தவிக்க விட்டதும் தெரியவருகிறது.
அந்த பெண்களில் ஒருவர்தான் கொலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக, போலீஸ் தரப்புக்கு கிடைக்கிற தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… கொலையைச் செய்தது இவராக இருக்குமோ; அவராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியபடி நகரும் திரைக்கதையில் கொலையாளி யார் என்பதும் கொலை நடக்கும் விதமும் பகீர் திகீர்! இயக்கம்: செல்வகுமார் செல்லப்பாண்டியன்

சூழ்ச்சி செய்து பெண்களை தன் காதல் வலையில் விழ வைப்பதும், அனுபவிப்பதும், ஆதாயமடைவதும், கைவிடுவதுமாய் மைக்கேல் தங்கதுரை. வலுவான உடற்கட்டு, காதல் போர்வையில் காமப்பார்வை, கண்களில் வில்லத்தனம் என ஏற்ற பாத்திரத்தில் பொருந்திப்போய் கவனம் ஈர்க்கிறார்.
ஜிஷ்ணு மேனன் (டி.வி. சீரியல்களில் அசத்திக் கொண்டிருந்தவர்) ஐ.டி. இளைஞனாக, படு ஸ்மார்ட் லுக்கில் வருகிறார். ‘லவ்வா லைஃபான்னு பார்த்தா லைஃப்தான் முக்கியம்’ என வசனம் பேசுகிற, பேசியபடி நடக்கிற கேரக்டருக்கு உயிர் தந்திருக்கிறார்.
கதை நாயகிகளில் ஒருவரான ஷ்ரிதா சிவதாஸ் தனக்கு இழைக்கப்படும் துரோகங்களை எதிர்கொள்ளும் விதம் பரிதாபத்தை தூண்டுகிறது.

‘பப்’பில் வலம்வரும் பப்பாளியாக ஸ்ருதி ராமகிருஷ்ணா. கதைநாயகனை போதைக்கண்களால் கவிழ்க்கும் காட்சி ஜிலீர்!
சோனியா அகர்வால், சாந்தினி, வித்யா பிரதீப் மூவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்க ஸ்ரீமன், ஆதிரா, வினோத் சாகர், தீபா சங்கர், என இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு!
‘இங்கு பணம் இருக்குறவன்தான் கேள்வியும் கேட்க முடியும், பதிலும் பேச முடியும்’ வசனங்களில் யதார்த்தம் வழிகிறது.
வருண் சுனில் இசையில் ‘ஓஹோ என் உலகம் நீ’ பாடல் இதம். ஒளிப்பதிவு, எடிட்டிங் நேர்த்தி.
திரைக்கதையில் கூடுதல் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் எல்லா வார்டுகளிலும் ரசிகர்களை வென்றிருக்கலாம்!