தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத கதை.
‘எத்தனை பிரச்சனை வந்தாலும் நான் நினைத்ததை செய்து முடிக்காமல் ஓய மாட்டேன்’ என்ற மன உறுதியோடு இருப்பவர்களை ‘எமகாதகன்’, ‘எமகாதகி’ என்றெல்லாம் சொல்வதுண்டு. இந்த கதையின் நாயகி அப்படியொரு எமகாதகி.
அவள் இறந்தபின்னும் ‘எமகாதகி’யாக இருக்கிறாள் என்பது படத்தின் ஹைலைட்.
மக்களின் செல்வாக்கைப் பெற்ற அந்த ஊர்த் தலைவர் வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைகிறார். அவர் மனம் முழுக்க ஏதோவொரு கோபம் ஆக்கிரமித்திருக்கிறது. அதை அவருடைய மனைவி பரிமாறிய சாப்பாட்டின் மீது காட்டுகிறார்; ‘ஏன் இத்தனை கோபம்?’ என சூடான மனைவியின் கன்னத்தையும் பதம் பார்க்கிறார். ‘அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள்?’ என உணர்ச்சிவசப்பட்ட மகளையும் ஓங்கி அறைகிறார். அவ்வளவுதான், மகள் தூக்கில் தொங்கி உயிரை விடுகிறாள். விஷயமறிந்து ஊர் கூடிவிடுகிறது.
ஊர்மக்களிடம் அவள் தற்கொலை செய்ததை மறைத்து, மூச்சுத்திணறி உயிரிழந்ததாக சொல்கிறார்கள். உறவினர்களுக்கு தகவல் சொல்லி விடுவது, இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் செய்வது என அடுத்தடுத்த காட்சிகள் முழுக்க பரபரப்பு.
பாடையெல்லாம் தயாராகி, சடலத்தை தூக்கும்போது கனம் அதிகமாகி தூக்க முடியாமல் போகிறது. நான்கு பேர், எட்டு பேர், பத்து பேர் என எத்தனை பேர் தூக்கினாலும் உம்ஹூம் சடலத்தை அசைக்கக்கூட முடியாத நிலை. கயிறு கட்டி இழுக்கிறார்கள்; சடலத்தை கிடத்தியிருக்கும் கட்டிலின் கால்தான் உடைகிறதே தவிர சடலத்தை கட்டிலை விட்டு வர மறுக்கிறது. போலீஸாரின் முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. ஏதேதோ சம்பிரதாயங்கள் செய்தும் பலனில்லை.
ஊர் மக்கள், ‘இறந்தவள் இந்த ஊர் உலகத்துக்கு எதையோ சொல்ல நினைக்கிறாள்; அதை சொல்லாமல் அவளது சடலம் வீட்டிலிருந்து வெளியில் வராது’ என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இப்படி படு வித்தியாசமாக மிரட்டும் கதையில், அடுத்தடுத்து நடப்பதெல்லாம் ஆச்சரியமூட்டுகிற, அதிரவைக்கிற சம்பவங்கள்; சடலம் பாடையிலேற மறுத்து கனத்துக் கிடப்பதன் காரணம் என்ன என்பது கிளைமாக்ஸில்…
கதையின் நாயகியாக ரூபா கொடுவாயூர். பிணமாக இருந்தாலும் புன்னகை மாறாத அவரது தோற்றம் கவனம் ஈர்க்கிறது. காதலிப்பதாக சொல்லி உடல்சுகத்தை தீர்த்துக்கொள்ள துடிப்பவனை கண்டிப்பது, காதலனிடம் தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தவிப்பது, அண்ணன் செய்த தவறுகளை துணிச்சலுடன் சுட்டிக்காட்டுவது என நீளும் கனமான காட்சிகளில் அலட்டிக்கொள்ளாத ‘உயிரோட்டமான’ நடிப்பைத் தந்திருக்கிற இவரை நம்பி, நடிப்பதற்கு வாய்ப்புள்ள உணர்வுபூர்வமான வேடங்களை இயக்குநர்கள் தாராளமாய் தரலாம். அந்தளவுக்கு அசத்துகிறது அம்மணியின் முகபாவங்கள்!
அவரை 20 நாட்கள்வரை பிணக்கோலத்தில் படுக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினார்களாம். அத்தனை சிரமப்பட்டு நடித்ததற்காக ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
பெரும்பாலான படங்களில் ஹீரோயினுக்கு ஹீரோவை காதலிப்பதும், அவருடன் பாடல் காட்சியில் ஆடுவதையும் தவிர வேறெந்த வேலையும் இருக்காது. இந்த கதையில் ஹீரோவுக்கு அப்படிப்பட்ட வேலை. ஆனால், அதை உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார் என் பி என்கிற நாகேந்திர பிரசாத்.
நாயகியின் அம்மாவாக கீதா கைலாசம். மகள் இறந்தபின் பித்துபிடித்தது போல் அமர்ந்திருப்பவர், மகளுக்கு நடந்த கொடுமைகள் தெரிந்தபின் வெடித்து அழும்போது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகிக்கு அப்பாவாக ராஜு ராஜப்பன். மகள் பற்றி யாரோ எதையோ சொல்லப்போக அதுபற்றி தீர விசாரிக்காமல் கோபப்படும்போது அனலாக கொதிப்பவர், தன் தவறை நினைத்து வருந்தும்போது உருக்கமான உணர்வை பிரதிபலித்திருக்கிறார்.
நாயகிக்கு அண்ணியாக வருகிற ஹரிதாவுக்கு நாத்தனாரின் இழப்பைக் கண்டு குடம்குடமாக கண்ணீர் வடிக்கிற வேலை. தாய்மையடைந்த வயிறோடு அதை செய்கிறபோது பரிதாபமாக இருக்கிறது. கொஞ்சம் அதிகப்படியாக அழுவதுபோல் தோன்றினாலும் நடிப்பில் குறையில்லை.
சாதி வெறியன், கோயில் நகையை களவாடுபவன் என கவனிக்கத்தக்க பாத்திரத்தை ஏற்று எளிமையான நடிப்பை தந்திருக்கிறார் நாயகிக்கு அண்ணனாக வருகிற சுபாஷ் ராமசாமி.
பாட்டி, கோயில் தர்மகர்த்தா, வெட்டியான், போலீஸ் அதிகாரி, ஊர்ப் பெரிய மனுஷி, குடிகாரன் என மற்றவர்கள் கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருக்க, பின்னணி இசையால் திகிலூட்டியிருக்கிற ஜெஸின் ஜார்ஜ் பாடலில் பரவச உணர்வை பரிமாறியிருக்கிறார்.
முற்றம் அமைத்த வீடுகள், ஏராளமாய் விழுதுகள் அசைந்தாடும் ஆல மரங்கள், பசுமையடர்ந்த வயல்வெளி, தார் வாசனையற்ற தெருக்கள் என இன்னமும் தன் இயல்பைத் தொலைக்காத தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்று கதைக்களமாகியிருக்க அந்த ஊரின் நீள அகலங்களை தன் கேமராவில் நேர்த்தியாக சிறைப்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க்.
முன்கதை, நிகழ்காலக் கதை, இடைச்செருகல் என அப்படியும் இப்படியுமாய் பயணிக்கும் திரைக்கதையில் குழப்பங்கள் ஏற்படாதபடி எடிட்டிங் பணியைச் செய்திருக்கிறார் ஸ்ரீஜித் சாரங்க்.
இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்டு நடக்கும் அமானுஷ்யமான, விசித்திரமான சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. அதை மையப்படுத்தி, தன்னைச் சுற்றியிருக்கும் சிலரால் சிக்கல்களைச் சந்தித்து உயிரிழக்கும் பெண்ணை கதைநாயகியாக சித்தரித்து வித்தியாசமான படைப்பொன்றை தந்திருக்கும் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலனை, தனித்துவமான இயக்குநர் வரிசையில் அமரவைத்துப் பாராட்டலாம்.
-சு.கணேஷ்குமார்

