Home சினிமா நம்பிக்கையினால் எந்தளவுக்கு அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இந்த படம் சொல்கிறது! -டி என்...

நம்பிக்கையினால் எந்தளவுக்கு அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இந்த படம் சொல்கிறது! -டி என் ஏ பட விழாவில் நடிகர் அதர்வா பேச்சு

அதர்வா நடித்திருக்கும் ‘டி என் ஏ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ” இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அளித்ததற்காக நன்றி.

‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ என்ற படத்திற்காக ஏற்கனவே ஐந்து இசையை பாடல்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஐந்து பேரிடமும் பணியாற்றும்போது ஐந்து வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. இது ஒரு கிரைம் ஆக்சன் டிராமா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது.

இந்தப் படத்திற்கு வலிமையாகவும் உறுதியாகவும் ஒரு பின்னணி இசை தேவைப்பட்டது. அதற்காக ஜிப்ரானினை தொடர்பு கொண்டோம். அவருடைய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய முந்தைய மூன்று படங்களுக்கு மாறுபட்டதாகவும், ஒரு இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும் டி என் ஏ இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார் .

கதாநாயகன் அதர்வா பேசியபோது, ”இயக்குநர் நெல்சன் இயக்கிய படங்களில் எமோஷனலை நிறுத்தி நிதானமாக சொல்லி இருப்பார். அதனால் அவர் என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலாக இருந்தேன்.‌

கதையை சொல்ல தொடங்கும் போது இந்த படத்தின் டைட்டில் டி என் ஏ என்றார்.‌ உடனே டி என் ஏ என்றால் ஜெனிடிக் தொடர்பான சயின்டிபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் டி என் ஏ என்றால் திவ்யா அண்ட் ஆனந்த் என சொன்னார்.

திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருந்தார். ஆனந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.

ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த படத்தில் நடிக்கும் போது எதையும் நினைக்காமல் திறந்த மனதுடன் சென்றேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை மேம்படுத்தினார்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்தில் நானும், நிமிஷாவும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தோம்.‌ அந்த காட்சி 15 வினாடிகள் தான் இருக்கும். 15 வினாடிகளில் அந்த காட்சிக்கான உரையாடல்கள் நிறைவடைந்து இருக்கும். அதன் பிறகும் நிமிஷா நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இணையாக நானும் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இது 40 விநாடிகள் வரை நீடித்தது.‌ அதன் பிறகு அந்தக் காட்சியை நாங்கள் பார்க்கும் போது அழகாக இருந்தது. நெல்சன் அந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார். அது முன்னோட்டத்திலும் இடம்பிடித்து இருக்கிறது. இரண்டு பேரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் காட்சி அது. சில படங்களில் தான் இது போன்று அமையும்.

இந்தப் படத்தின் இசை யாரென்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு நான் பண்பலை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அதனால் ஐந்து புதிய திறமையான இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு உடனடியாக ஏனைய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். இரண்டே மாதத்தில் படப்பிடிப்பு பணிகளை தொடங்கி விட்டோம். இதற்கு தயாரிப்பாளரும் முக்கியமான காரணம்.‌ சினிமா மீது அவருக்குள்ள காதலால் இது சாத்தியமானது.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கதையை அனைவரும் எளிதாக எழுதலாம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதுவது கடினமானது. இதற்கு நிறைய யோசிக்க வேண்டும். எல்லா கதாபாத்திரத்தையும் சிறப்பாக இயக்குநர் நெல்சன் எழுதி இருந்தார்.

இந்த படம் ஒரு நல்ல படம். உங்களுடைய திரை உலக பயணத்தில் சிறந்த படமாக இது இருக்கும் என்று என்னிடம் சொன்னார். இந்த வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

பொதுவாக ஒரு படம் வெளியாகும் போது அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பயம் கலந்த பதட்டம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் எங்களுக்கு பயம் இல்லை. பதட்டமும் இல்லை .சிறிய அளவில் நம்பிக்கை இருக்கிறது . நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பொதுவாக நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.‌ நண்பர் மீது வைக்கும் நம்பிக்கை… ஒரு காதலன் காதலி மீது வைக்கும் நம்பிக்கை… இந்த படத்தை பொறுத்தவரை மனைவி என்பவர் தன் கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.. அந்த நம்பிக்கையினால் எந்த அளவிற்கு தங்களின் அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இப்படம் சொல்கிறது. அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.‌

ஜூன் இருபதாம் தேதி அன்று திரையரங்குகளில் டிஎன்ஏ வெளியாகிறது. இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன், அறிமுக இசையமைப்பாளர் சத்ய பிரகாஷ், அறிமுக இசையமைப்பாளர் பிரவீண் சைவி, அறிமுக இசையமைப்பாளர் அனல் ஆகாஷ், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, பாடலாசிரியர் முத்தமிழ்,
நடிகர் ரமேஷ் திலக், பாடலாசிரியர் உமாதேவி, நடிகை மானசா சௌத்ரி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் ராஜூ முருகன், இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகை நிமிஷா சஜயன், சிறப்பு விருந்தினர் கவின் மொழி, சிறப்பு விருந்தினர் நிலா பாரதி, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிடோரும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்