Home விமர்சனம் ஜென்ம நட்சத்திரம் சினிமா விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம் சினிமா விமர்சனம்

அமானுஷ்ய ஆர்ப்பாட்டங்கள், பரபரப்பான சம்பவங்கள், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் என காட்சிக்கு காட்சி மிரட்சி தருகிற படம்.

அரசியல்வாதி ஒருவரிடமிருந்து அவரது விசுவாசி ஒருவர் கைப்பற்றி ஒரு இடத்தில் பதுக்கி வைத்த 57 கோடி ரூபாயை கைப்பற்ற, ஐந்தாறு பேர் கொண்ட நண்பர்கள் குழு புறப்படுகிறது. அந்த பணத்திலிருந்து 40 லட்ச ரூபாயை ஒரு சிறுமியின் ஆபரேசனுக்கு செலவிடுவது, மிச்ச பணத்தை தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என்பது அவர்களின் திட்டம். அதன்படி பணம் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். கண்டுபிடித்த இடத்தில் அவர்கள் ஏதோவொரு அமானுஷ்ய சக்தியால் தாக்கப்படுகிறார்கள்; ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.

அவர்களைத் தாக்குகிற, கொல்கிற சக்தியின் பின்னணி என்ன? அவர்களால் அந்த பணத்தைக் கைப்பற்ற முடிந்ததா? சிறுமியின் ஆபரேசனுக்கு உதவ முடிந்ததா? என்ற சிலபல கேள்விகளுக்கு பதில் சொல்லி நிறைவடைகிறது ‘ஓமன்’ படத்தின் தமிழ் பதிப்பாக மணிவர்மன் இயக்கியிருக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்.’

பணத்தை தேடி போகிற குழுவிலிருக்கிற தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா ஜோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்வதும், அட்டாக்குக்கு ஆளாகி ரத்தம் சிந்துவதுமாய் வேகமெடுக்கிற காட்சிகளின் தேவைக்கேற்ப கச்சிதமாக நடித்திருக்க, மைத்ரேயா, ரக்ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி என மற்றவர்கள் நேர்த்தியான நடிப்பால் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.

சுயநல அரசியல்வாதியாக வருகிற வேல ராமமூர்த்தியின் அலட்டலும் மிரட்டலும் அவரது காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

முனீஷ்காந்த் லேசாக சிரித்து ரசிக்க உதவியிருக்கிறார். தலைவாசல் விஜய்க்கு மனிதாபிமான மருத்துவர் கதாபாத்திரத்தைக் கொடுத்த திரைக்கதை அவரை தலை’யில்லா விஜயாக்கி அதிர்ச்சி தருகிறது.

குழந்தையொன்று கதையின் மையப்புள்ளியாக சுழன்று கொண்டிருக்க, அதன் தந்தையாக, அந்த குழந்தையை நல்ல மனிதர்களிடம் சேர்க்கும் கடமையைச் சுமந்தவராக கனமான கேரக்டரில் காளி வெங்கட். தன் முதலாளியிடம் மகளின் ஆபரேசனுக்காக பணம் கேட்பது, கேட்ட பணம் கிடைக்காமல் அவமானம் கிடைக்க அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாக முதலாளியிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை திருடுவது என உணர்வுகளால் நிரம்பிய மனிதராய் கவனம் பெறுகிறார்.

ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்க, ஹாரர் திரில்லர் சப்ஜெக்ட்க்கு ஏற்ற பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சஞ்சய் மாணிக்கம்.

சாத்தான் வழிபாடு நடந்த இடம், நடக்கும் இடம் என விரியும் காட்சிகளில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

ஹாரர் திரில்லரில் தனி மனிதனின் வன்மத்தைக் கலந்துகட்டி படம் பார்ப்பவர்களின் பல்ஸை எகிறச் செய்யும் இந்த ஜென்ம நட்சத்திரத்துக்கு, மதிப்பெண்ணில் நட்சத்திர அந்தஸ்தை கணிசமாக கொடுக்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்