Home விமர்சனம் கம்பி கட்ன கதை சினிமா விமர்சனம்

கம்பி கட்ன கதை சினிமா விமர்சனம்

ஏமாறுறவன் இருக்கிறவரை ஏமாத்துறவன் காட்டுல அடைமழைதான். அப்படியொரு கருத்தை எடுத்துச் சொல்லும் இந்த படம் முழுக்க சிரிப்பு மழைதான்.

உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தோடு தொடர்புடைய பல கோடி மதிப்புள்ள மற்றொரு வைரத்தை நம்மூர் அரசியல்வாதி ஒருவர் அடைய நினைக்கிறார். அதற்காக போலீஸ் உதவியுடன் பிராடுத்தனத்தில் கில்லாடியாக இருக்கிற ஒருவரை தேடிப் பிடிக்கிறார்கள். அந்த நபர் பெரியளவில் ரிஸ்க் எடுத்து வைரத்தை கைப்பற்றுகிறார். கைக்கு வந்ததை அரசியல்வாதியிடம் கொடுக்க மனமில்லாமல் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார். அதை தெரிந்துகொண்ட அரசியல்வாதி தரப்பு என்ன செய்கிறது, கடைசியில் வைரம் யாருக்கு சொந்தமாகிறது என்பதையெல்லாம் சுவாரஸ்யம் கலந்துகட்டி சொல்கிறது ‘கம்பி கட்ன கதை.’

ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ‘உங்களையெல்லாம் பைசா செலவில்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன்’ என்று புருடா விட்டு கல்லா கட்டுவதிலிருந்து நித்யானந்தா போல் சாமியாராகி ஜல்சாவில் ஈடுபடுவது வரை ‘சதுரங்க வேட்டை’யரின் இன்னொரு வெர்சனாக அறிவானந்த அவதாரமெடுத்து நட்டி நட்ராஜ் அடிக்கும் லூட்டி அத்தனையும் கலகலப்புக்கு கேரண்டி.

சாமியார் என ஒருவர் இருந்தால் அவருக்கு நெருக்கமான சிஷ்யை இல்லாமலா? அப்படியொரு சிஷ்யையாக ஸ்ரீரஞ்சனி டீ, காபியில் கரைகிற ஜீனிபோல் சாமியாருடன் கலந்து பழகி காட்சிகளுக்கு சுவை கூட்டுகிறார்.

நட்டியின் மோசடி வேலைகளில் இணைந்து பணிபுரிகிற முகேஷ் ரவி இளமையாக இருக்கிறார். அதே இளமையோடு இருக்கிற ஆர்த்தி ஷாலினியுடன் காதலிலும் ஜாலியாக ஈடுபடுகிறார்.

நட்டியின் பார்ட்னராக வருகிற சிங்கம்புலி அவர் பங்குக்கு சிரிக்க வைக்க, ஏகப்பட்ட பெண்களுக்கு கணவராக வருகிற (முல்லை) கோதண்டம் சாமியாரை குழந்தை பாக்கியத்துக்காக சந்திக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.

இந்த படத்துக்கு அதிரிபுதிரியாக திரைக்கதை அமைத்து வசனங்களில் அடல்ஸ் ஒன்லி சங்கதிகளை தூக்கலாக தூவியிருக்கிற த முருகானந்தம் ரஜினி போல் பந்தாவாக வந்து நொந்துபோவது லகலக.

வழக்கு எண் முத்துராமன், டி எஸ் ஆர், ஜாவா சுந்தரேசன்(சாம்ஸ்), ஷிகான் கராத்தே கார்த்தி என மற்றவர்கள் கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.

பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு என எல்லாமும் கதைக்களத்துக்கேற்ற கச்சிதம்.

இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி எளிமையான கதையை உருவாக்கிக் கொண்டு, சுந்தர். சி படங்கள் தருகிற திருப்தியை ஆடியன்ஸுக்கு தர நினைத்து கொளுத்திப் போட்டிருப்பது சிரிப்பு சரவெடி. தியேட்டருக்கு கிளம்ப ஆர் யு ரெடி?

-சு. கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்