கிராமத்து வாழ்வியலை நல்லவிதமாக ஒருங்கிணைத்துப் பரிமாறிய படைப்புகளின் வரிசையில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்.’
தன்னுடைய ஏழெட்டு வயது நிரம்பிய மகன் ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சூழ்நிலையில், தான் வளர்த்துவரும் ஆட்டுக்குட்டியை தான் வணங்கும் ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார் நல்லபாடன். மகன் உயிர் பிழைக்கிறான். அதற்கு நன்றியாக நேர்ந்து விட்ட ஆட்டின் உயிரை ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க வேண்டும். அந்த நிகழ்வை ஒண்டிமுனி கோவிலில் நடத்த ஊரிலுள்ள இரண்டு பெரிய மனிதர்கள் மனது வைக்க வேண்டும். அந்த பெரிய மனிதர்கள் சிறிய மனதுக்காரர்களாக இருப்பதால், அவர்களுக்குள் பகை பற்றியெறிவதால் கிடாவெட்டு நடத்தவிடாமல் தடையாக நிற்கிறார்கள். வருடங்கள் கடந்தோடுகிறது. நல்லபாடனின் மகன் வளர்ந்து இளைஞனாகிறான். அதன்பிறகாவது வேண்டுதல் நிறைவேறி கிடாவெட்டு நடந்ததா இல்லையா என்பது திரைக்கதை…
கடுமையான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வியர்வையை குடம் குடமாக சிந்துகிற, ஊர்ப் பெரிய மனிதர்களிடம் கோவிலில் பூஜை நடத்த அனுமதி கேட்டு வருடக்கணக்காக கெஞ்சி கண்ணீர் சிந்துகிற, மகன் கசாப்புக் கடைக்கு கிடாவை விற்றது தெரிந்து அது வெட்டுப்படும் முன் மீட்பதற்காக தன் உயிரை பலிகொடுக்க முன்வருகிற, கிடாவெட்டுக்கான சூழ்நிலை உருவானதும் உற்சாகமாகி ஊரைக் கூட்டி கறி விருந்து வைக்கத் தயாராகிற மிகமிக கனமான நல்லபாடன் கதாபாத்திரத்தைச் சுமந்திருப்பவர் பரோட்டா முருகேசன். அவரது இயல்பான தோற்றமே பாவப்பட்ட மனிதரைப் போல் அமைந்திருக்க பரிதாபத்திலும் பரிதாபமான வெள்ளந்தி மனிதர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். காடுமேடுகளில் செருப்பின்றி நடந்து, அடிபட்டு மிதிபட்டு கட்டாந்தரையில் புரண்டு உடலை வருத்திக் கொண்டு ஏற்ற பாத்திரத்துக்கு உயிர் தந்திருப்பவர் பாசக்கார மனிதராக நெகிழ வைக்கிறார். உயரிய விருதுகள் தருகிற அமைப்புகள் அவரது ஈடுபாடான உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தைத் தந்து கெளரவிக்கும் என நம்பலாம்.
நல்லபாடனின் மகனாக வருகிற விஜயன் தியா, தன் தந்தை வளர்க்கும் சேவல்களை திருடிப்போய் சமைத்து சைடிஸாக வைத்துக்கொண்டு நண்பர்களுடன் குடித்துக் கூத்தடிக்கும்போது பொறுப்பற்ற நபராகவும், போகப்போக அப்பாவின் மனதறிந்து நடக்கும்போது பக்குவமான இளைஞனாகவும் எளிமையான நடிப்பில் போதுமான அளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார். அவரது ஜோடியாக வருகிற வித்யா சக்திவேல் கிராமத்துப் பெண்கள் காதல் வயப்படும்போது எப்படியெல்லாம் நடந்துகொள்வார்களோ அப்படியே வலம் வருகிறார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு போவதும் அங்குள்ள சூழ்நிலையைப் பார்த்து எடுக்கும் முடிவு படத்தின் அழுத்தமான காட்சிகளில் ஒன்று.
கார்த்திகேசனும் அவரது பகையாளியாக வருகிறவரும் ஊரில் விவசாயம், சொத்து பத்து, சாதி என எல்லாவற்றிலும் பலமாக இருந்துகொண்டு அடித்தட்டு மக்களை அடிமையாக நடத்துபவர்களாக குறைசொல்ல முடியாத நடிப்புப் பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
முதன்மை பாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் மட்டுமல்லாது நல்லபாடனின் மகளாக வருகிற சித்ரா நாகராஜன், அவரது கணவராக வருகிறவர், கசாப்புக் கடைக்காரராக வருபவர், ஊர் மக்கள் என அத்தனைப் பேரையும் கதை நிகழும் மண்ணின் மைந்தர்களாகவே பார்க்க முடிகிறது. நடிகர் நடிகைகள் தேர்வுக்காகவே இயக்குநரை தனியாகப் பாராட்ட வேண்டும். அந்த ஆட்டுக் கிடாவின் கம்பீரமும் அசத்துகிறது.
பாடல்கள் ஒன்றிரண்டு இருந்திருக்கலாம். இல்லாததும் ஒரு விதத்தில் வசதியாகி, கதை சரசரவென நேர்க்கோட்டில் பயணிக்கிறது. நடராஜன் சங்கரனின் பின்னணி இசை இந்த கதைக்களத்துக்கு இது போதும் என்கிற அளவில் காட்சிகளில் கலந்திருக்கிறது.
காடுமேடு, விவசாய நிலங்கள், வைக்கோல் போர், கோயில் விழா, கரும்பு சாறிலிருந்து வெல்லம் தயாரிப்பு என ஒரு எளிய கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சுற்றிப் பார்த்து ரசித்த உணர்வைத் தருகிறது ஜெ டி விமலின் ஒளிப்பதிவு.
கொங்கு வட்டார வழக்கில் வசனங்கள் கூர்மையாகவும் இருக்கின்றன; பல காட்சிகளில் குபீர் சிரிப்புக்கும் உத்தரவாதம் தருகின்றன.
‘தெய்வங்கள் முன் பலியிட வேண்டியது ஆட்டையல்ல; வாழத்தகுதியற்ற கேடுகெட்ட மனிதர்களை’ என்பதுபோல் முடிகிற கிளைமாக்ஸ் எல்லோரிடமிருந்தும் பெறுகிறது அப்ளாஸ்.
என்னதான் உழைத்தாலும் வறுமைக்குள்ளேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவன், தன் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை படையலிட படாதபாடு படுகிற சிம்பிளான கதைக்கு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு யதார்த்தமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சுகவனம் தரமான படைப்புக்கான பாராட்டுக்களைக் குவிப்பதும், விருதுகளால் நிரம்புவதும் கேரண்டி!
-சு.கணேஷ்குமார்

