Home விமர்சனம் லீடர் சினிமா விமர்சனம்

லீடர் சினிமா விமர்சனம்

இன்னும் கொஞ்சம் விட்டால் திரையில் தீ பிடித்துவிடும். அந்தளவுக்கு பட்டாசான ஆக்சன் காட்சிகளுடன் தெறிக்க விடுகிற ‘லீடர்.’

கார் மெக்கானிக்கான சக்திவேல் (லெஜன்ட் சரவணன்) தனக்கெதிராக சதி செய்வதாக சந்தேகப்பட்டு, அவரை மிரட்டுகிறார் தூத்துக்குடி ஹார்பரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சால்ட் என்கிற தாதா. சக்திவேல் எந்த மிரட்டலுக்கும் பயப்படுவதாக இல்லை. பதிலாக சால்ட்டின் சமூக விரோதச் செயல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். அதனால் சர்வதேச பயங்கரவாதி ஒருவருக்கு எதிரியாகிறார். அவர் சக்திவேலை பார்த்துப் பயந்து, அவரை ஒழித்துக்கட்ட ஸ்கெட்ச் போடுகிறார்.

சாதாரண கார் மெக்கானிக்கை பார்த்து சர்வதேச பயங்கரவாதி பயப்படுகிறான் என்றால், உண்மையில் அந்த கார் மெக்கானிக் யார்?

இந்த கேள்விக்கு பதில் தரும் விதமாய் விரியும் ஃபிளாஷ்பேக்கில் எதிர்பாராத ஆச்சரியங்கள் அணிவகுக்கின்றன…

மனைவியை இழந்தவர்; மகளோடு வசிப்பவர், மகளுக்காகவும் ஏற்றுகொண்டிருக்கும் பணிக்காகவும் எதையும் இழக்கத் தயராக இருப்பவர், சர்வதேச பயங்கரவாதிகளை அழிக்கும் உளவாளிக்குழுவில் முதன்மையானவர், எதிராளிகளை புத்திசாலித்தனமாக வேட்டையாடுபவர், சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கச் செய்பவர், நேசம் பொழியும் காதலன், பாசக்கார கணவன் என லெஜண்ட் சரவணனுக்கு கனமான கதாபாத்திரம்.

உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் தேர்ச்சி தேவையென்றாலும் கடந்த படத்தைப் போல் நடிப்பில் வெறுப்பேற்றும் விதமாக ஏதுமில்லை. ஆக்சனில் அவர் எதிராளிகளை அலற விடுவது நம்பும்படியாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் நடிப்பில் லெஜண்ட் தாண்டியிருப்பது ஒரு படி இரு படியல்ல பல படி. அதனாலேயே வெற்றிப்படியைத் தொட முடிந்திருக்கிறது. படம் பிரமாண்டமாக உருவாவதற்காக தயாரிப்பாளராக இருந்து பணத்தை கொட்டிக் குவித்திருப்பதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.

பயங்கரவாதியாக வருகிற சந்தோஷ் பிரதாப் முறுக்கேறிய உடற்கட்டும் விறைப்பேறிய முகமுமாக வந்து கார்ப்பரேட் வில்லன்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அதை ஜெராக்ஸ் எடுத்துச் செய்திருக்கிறார்.

ஷாமும் ஆண்ட்ரியாவும் நேர்மையான காவல்துறை உயரதிகாரிகளாக காட்டியிருக்கும் கம்பீரம் கச்சிதம்.

கதாநாயகனுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத், காதல் காட்சிகளை அழகாக்கியிருக்கிறார். வி டி வி கணேஷுக்கு காமெடி பங்களிப்புக்கான வாய்ப்பு குறைவு என்றாலும் தன் இருப்பைக் காட்ட லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.

பாகுபலி பிரபாகர், லால், அமிர்தா ஐயர், ஜார்ஜ் மரியன், ஐஸ்வர்யா பாஸ்கரன் என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் வந்து போகிறார்கள்.

புயல் வேகத்தில் பாய்ச்சலெடுக்கும் காட்சிகளுக்கு பின்னணி இசையால் சுறுசுறுப்பு தந்திருக்கும் ஜிப்ரான், ‘முத்தைத்தரு’ பாடலுக்கு அளித்திருக்கும் இசை சிலிர்ப்பூட்டுகிறது.

உள்நாட்டு துறைமுகத்தில் சாகசம், வெளிநாட்டு ஏர்போர்ட்டில் அதிரடி, வந்தே பாரத்தில் ஆக்சன் பிளாக் என தாறுமாறாய் தாவும் கதையோட்டத்தை  ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ் தன் கேமரா வழி உள்வாங்கி பிரமாண்ட விஷுவல் டிரீட்டாகியிருக்கிறார்.

படத்தின் வேகத்துக்கு உதவியிருக்கிறது பிரதீப் ஈ.ராகவ்வின் நறுக் சுறுக் படத்தொகுப்பு.

மாஸ் ஹீரோக்களுக்கான ஆக்சன் கதையை எடுத்துக் கொண்டு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு திரைக்கதையில் சுவாரஸ்யங்களையும் திருப்பங்களையும் இணைத்துப் பிணைத்திருக்கும் இயக்குநர் துரை செந்தில்குமார் லெஜண்ட் சரவணனை முழுமையான ஆக்சன் ஹீரோவாக தகுதி உயர்த்தியிருக்கிறார்.

லீடர் – எனர்ஜிடிக் ரன்னர்!

-சு.கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்