Home விமர்சனம் ரெட் லேபில் சினிமா விமர்சனம்

ரெட் லேபில் சினிமா விமர்சனம்

கிரீன், ரெட், யெல்லோ என எந்த சிக்னலையும் மதிக்காமல் வேகமெடுக்கிற வாகனங்களைப் போல் தாறுமாறான சம்பவங்களும் அதிரிபுதிரியான திருப்பங்களோடும் சீறிப்பாய்கிற ‘ரெட் லேபில்.’

அந்த கல்லூரியில் நடக்கவிருக்கும் மாணவர் தலைவர் தேர்தலில் ஜெயிக்க குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்கிறான் மாணவன் பாண்டியன். அவன் அயோக்கியன் என்றால், அந்த அயோக்கியத்தனத்தை ஊக்குவிப்பவராக இருக்கிறார் அராஜக எம் எல் ஏ’வான அவனது தந்தை.

பாண்டியனும் மோசமானவன், அவன் அப்பாவும் மோசமானவர். அவர்களை சமாளித்து, கல்லூரி தேர்தலில் போட்டியிடும் நல்ல மாணவன் ரோகித்தை ஜெயிக்க வைக்க களமிறங்குகிறார் கதையின் ஹீரோ. அதனால் அவர் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களே கே ஆர் வினோத் இயக்கியிருக்கும் ரெட் லேபிலின் மீதிக் கதை… எம் எல் ஏ’வின் மகளும் ஹீரோவும் காதலர்கள் என்பதால் கதையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

ஹீரோவாக புதுமுகம் (இந்த படத்தின் தயாரிப்பாளர்) லெனின். வாட்டசாட்டமான உடற்கட்டோடு இருக்கிற அவரது தாடியையும் மீசையையும் பார்த்தால் ஒரு நாளில் நான்குமுறை டிரிம் செய்வார் என நினைக்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு நீட் & கிளீன். கல்லூரியில் படிக்கும்போது நடந்த மாணவர் தலைவர் தேர்தலில் போலீஸுக்கு சவால்விட்டு சிலபல புரட்சிகளைச் செய்வதாகட்டும், 5 வருடங்கள் கழித்து அதே கல்லூரியின் தேர்தல் களத்தில் ரவுடியாக செயல்படுகிற மாணவனுக்கு எதிராக நிற்பதாகட்டும் நடிப்பில் மாஸ் ஹீரோக்களுக்கான உடல்மொழி அசத்தலாய் வெளிப்படுகிறது.

நாயகி அஸ்மின், வெறுமனே ஹீரோவுடன் டூயட்டுக்குஆடிவிட்டுப் போகிறவராக இல்லாமல் ஹீரோவின் நடவடிக்கைகளுக்கு தோள் கொடுப்பவராக, அவனுக்காக கொலைப் பழியைச் சுமப்பவராக கவனிக்கத்தக்க நடிப்பைத் தந்திருக்கிறார்.

எம் எல் ஏ’வாக ஆர் வி உதயகுமார். சுயநலத்துக்காக கொலை செய்யவும் தயாராக இருக்கிற கேரக்டரில் மிதமான மிரட்டலை தந்திருக்கிறார். பாண்டியனாக வருகிற இளைஞனின் ரவுடித்தனங்களில் மிகையான வெறித்தனம் வெளிப்படுகிறது.

கல்லூரி மாணவியாகவும், பேராசிரியராகவும் வருகிற யசோதா கதாபாத்திரமும் அதை ஏற்றிருப்பவரின் பங்களிப்பும் மனதைக் கவர்கிறது. கதை, திரைக்கதை, வசனகர்த்தா பொன் பார்த்திபன் விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் வந்து போகிறார். மற்றவர்களின் நடிப்பிலும் குறையில்லை.

பல மலையாளப் படங்களில் பணிபுரிந்த கைலாஷ் மேனன், மாணவர்களின் போராட்டத்தில் இருக்கும் தீவிரம் உட்பட இந்த கதையோட்டத்திலிருக்கும் முக்கியத்துவம் உணர்ந்து பின்னணி இசையைத் தந்து, ‘மிளிரா மிதந்தேனே’, ‘ராக்கு ராக்காச்சி’ பாடல்களை ரசிக்கச் செய்திருக்கிறார். சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவில் எளிமையான காட்சிகள்கூட பிரமாண்டமாக தெரிகிறது.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் ஐந்தாறு வருடங்களாக கல்லூரியிலேயே டியூட்டி பார்ப்பவர் போல காண்பித்திருப்பது, அவருக்கு ஹீரோவை ஜாமினில் வெளிவர முடியாத கேஸில் கைது செய்வதுதான் வாழ்நாள் லட்சியம் என்று நினைக்கும்படியான காட்சிகளை வைத்திருப்பது,

ஹீரோ ‘….தா, எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’ என கெத்தாக திரிந்தாலும், அவரால் நடப்பதைவிட தானாகவே சிலபல விஷயங்கள் நடப்பது, என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என புரியாமல் அவர் திணறுவது,

ஹீரோ ஒரு நபரை கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக மாற்றுவதற்காக புத்திசாலித்தனமாக ஸ்கெட்ச் போடும் ரோபோடிக் தொழில்நுட்ப ஏற்பாடுகளை கிட்டத்தட்ட அரை மணி நேரம் இழுத்துவிட்டு ‘அதுல ஒண்ணும் இல்ல, கீழே போட்டுடு’ என்கிற அளவில் முடித்திருப்பது,

புரட்சிகர கதையாக துவங்கி ஹீரோ – வில்லன் மோதல் என சராசரியாக கதையை நகர்த்தியிருப்பது என படத்தில் குறிப்பிடத்தக்க குறைகள் உண்டு.

குறைகளைத் தாண்டி ‘ஸ்டூடண்ட்ஸ் பவர்’ என்கிற ‘மாணவர்களின் ஒற்றுமையால் உருவாகிற சக்தி பலமானது; யாராலும் வீழ்த்த முடியாது’ என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டியிருப்பதற்காக ரெட் லேபில் படக்குழுவுக்கு பாராட்டுக்களை பரிசளிக்கலாம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்