ஓங்கி ஒரு மிதி மிதித்தால் அந்த வீடு தரைமட்டமாகி விடும். அப்படியொரு வீட்டில் தடுக்கி விழுந்தால் செத்துவிடுவார் என்கிற அளவில் அந்த வயதானவர் பக்கவாத பாதிப்பினால் படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவருடைய மனைவி கூலி வேலைக்குப் போய், கணவருக்கு சோறாக்கிப் போடுகிறார். ஒன்றிரண்டு கோழிகளையும் வளர்த்து வருகிறார். அதில் ஒன்று பத்துப் பனிரண்டு முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கிறது.
அப்படியான சூழலில் அந்த கணவருக்கு, வீட்டில் வளர்க்கும் சேவலை அடித்து குழம்புவைத்துச் சாப்பிட ஆசை உருவாகிறது. மனைவியிடம் விருப்பத்தைச் சொன்னால் அவர் மறுக்கிறார். அதற்கு காரணம் இருக்கிறது. அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதாயில்லை. அவருடைய நாக்கை கட்டும்படுத்த தயாராக இல்லை. மனைவியை கடுமையாக திட்டித் தீர்க்கிறார். பின்னர் அவரே சேவலை அடித்துக் கொல்ல முயற்சி செய்கிறார்.
படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள முடியாமல், சிரமப்பட்டு எழுந்தாலும் ஒரு அடிகூட சரியாக நடக்க முடியாத அந்த உடல் பருத்த முதியவரால் சேவலை அடித்துக் கொல்ல முடிந்ததா இல்லையா என்பது 21 நிமிடங்களில் ஓடி முடிகிற மு நவீன் இயக்கியிருக்கிற இந்த குறும்படத்தின் மீதிக் கதை…
கொடுமைக்கார கணவனாக நிதர்சனா சி காளிதாஸ். சேவலை கொல்வதற்கு எடுத்துகொள்ளும் முயற்சிகள் அடடே ரகமாக இருக்க, இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் குஞ்சு வெளிவருகிற அளவிலான அடைக்காக்கப்படும் முட்டைகளை எடுத்து வீசுவது அந்த கேரக்டர் எத்தனை கொடூரமானது என்பதன் வெளிப்பாடாக கடந்தோடுகிறது.
மனைவியாக வருகிற மணிமேகலை, பரிதாபச் சூழலில் வாழ்கிற வலியை தன்மை மாறாமல் பிரதிபலிக்கிறார். வளர்க்கும் சேவலை அடித்து சமைக்க மனம் வராமல் கோழிக்கறி வாங்க கசாப்புக் கடையில் நிற்கும்போது நெகிழ வைக்கிறார்.
அந்த இருவர் தவிர இன்னும் ஒருசிலர் ஜஸ்ட் அட்டனன்ஸ் போடுகிற மாதிரியான கதாபாத்திரங்களில் வந்து போவதை பார்க்க முடிகிறது.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, கதை நிகழ்விடங்கள் என எல்லாமே கதைக்களத்தை மெருகேற்றியுள்ளன.
கதையின் முடிவு எதிர்பார்த்ததாகவும், சற்றே மனம் கனக்கச் செய்வதாகவும், ‘வாழ்க்கை இவ்வளவுதான்’ என்ற தத்துவத்தை எடுத்துச் சொல்வது போலவும் இருக்கிறது.
இந்தியாவின் உயரிய தேசிய விருதையும் இன்னும் பல விருதுகளையும் வென்றுள்ள இந்த எளிமையான, எதார்த்தமான, மண்மணம் நிரம்பியிருக்கிற ‘லிட்டில் விங்ஸ்’ Dream Warrior Pictures யூடியூப் சேனலில் பார்க்க கிடைக்கிறது.


