Home Uncategorized மம்பட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

மம்பட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

நீட் & கிளீன் ஸ்க்ரிப்டில் விறுவிறுப்பு சிக்ஸர் அடிக்கும் ‘மம்பட்டியான் ஸ்டார்ஸ் .’

சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த தீவிரமான கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்குப் மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரரின் கடைசிப் போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் நோக்கி பயணத்தை தொடர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அந்த கிரிக்கெட்டர் அவர்களின் ஹீரோ; அது அவர்களின் கனவுப் பயணம். அந்த பயணம் முழுக்க சுவாரஸ்யங்களும் எதிர்பாராத சம்பவங்களும் அணிவகுக்க, தங்கள் ஹீரோ விளையாடுவதை நேரில் பார்த்து ரசிக்க முடிந்ததா இல்லையா என்பது ஆறு அத்தியாயங்களாக விரிகிற மம்பட்டியான் ஸ்டார்ஸ் சீரிஸின் மீதிக் கதை.

சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலைச் செல்வன், வினு கார்த்திகேயன் குழுவாக கதை, திரைக்கதையில் பங்களிக்க, சவிர் சுதாகர் இயக்கியிருக்கிறார்.

வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன் கூட்டணியின் நடிப்பு பங்களிப்பு கவனம் ஈர்க்கிறது.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், விவேக் பிரசன்னா காமெடி கலகலப்புக்கு உதவ, வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி என பலருக்கு கதையில் முக்கியத்துவமும் நடிப்பில் தரமும் இருக்கிறது.

கதையின் முதல் பாதி கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள், கிராமப்புற வாழ்வியல் சூழல் என சுற்றிக் கொண்டிருக்க அதற்கேற்ப பின்னணி இசையில் நாட்டுப்புறக் இசைக் கருவிகளை பயன்படுத்தியிருக்கும் பரத் தனசேகர் கிரிக்கெட் போட்டிகள் சார்ந்த காட்சிகளில் வேறொரு பரிமாணத்துக்கு தாவி அதிரடியான இசையில் புத்துணர்ச்சி தருகிறார்.

கிரிக்கெட் விளையாட்டு, கிராமத்து நண்பர்களின் நட்பு, சென்னை பயணத்தின் உற்சாகம் என சிலவற்றை கலந்து கட்டி விவரிக்கும் டைட்டில் பாடல், சாலைப் பயணத்தின் மகிழ்ச்சிப் பெருக்கில் கடந்தோடும் மாண்டேஜ் பாடல், உணர்வுபூர்வமான மற்றொரு பாடல்… அத்தனையிலும் உயிரோட்டமிருக்கிறது.

பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் கிரிக்கெட் போட்டிகளை ஸ்டேடியத்தில் அமர்ந்து ரசிக்கிற உணர்வைப் பெற முடிகிறது. கிராமத்து அழகையும் அதன் தன்மை குறையாமல் திரையில் நிரப்பியிருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இதுவரை எத்தனையோ திரைப்படங்கள், தொடர்கள் வந்திருந்தாலும் இந்த தொடரில் இருக்கிற வித்தியாசம் ஆர்வமாக பார்க்கத் தூண்டுகிறது.

கிரிக்கெட் பிரியர்கள், வெறியர்களுக்கு நிச்சயமாய் கொண்டாட்டமான அனுபவம் கேரண்டி.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்