அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை தூண்டியபடி கடந்தோடும் சம்பவங்களின் தொகுப்பாக ‘அந்தரன்.’
நாயகி கார்த்திகாவை அவள் படிக்கும் காலத்தில் சக மாணவன் சைட் அடிக்கிறான் அதை கார்த்தியின் அப்பா பார்த்து விடுகிறார். அவனைக் கூப்பிட்டு கண்டித்து ஊரைவிட்டுத் துரத்துகிறார். வருடங்கள் கடந்தோடுகிறது. கார்த்திகாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை கார்த்திகாவை சந்தித்துப் பேசுகிறார். பேசி முடித்ததும் விபத்தில் சிக்கி மரணமடைகிறார். அடுத்தடுத்தும் அவளுக்காக பார்க்கிற மாப்பிள்ளைகள் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள்.
இந்த தொடர் மரணங்களுக்கு காரணம் என்ன என்பதை அலசி ஆராய வருகிறார் காவல்துறை உயரதிகாரி செழியன். அவர் அலசி ஆராய்வதில் கிடைக்கிற விஷயங்கள் அதிர்ச்சியில் தூக்கி வாரிப் போடுகிற அளவில் இருக்கிறது.
கார்த்திகாவாக இவானா. களையான முகத்தில் உணர்வுகள் போதுமான அளவில் வெளிப்படுகிறது. ஆண் தன்மையுடன் தன்னைத்தானே கண்ணாடியில் ரசிக்கும் காட்சி கிளுகிளுப்பாக இருக்க, இவானாவின் நடிப்பு அசத்துகிறது.
நடக்கும் கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்கும் காட்சிகள் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்டிருக்க, காவல்துறை அதிகாரியாக வருகிற பிரஜன் பொருத்தமான கம்பீரத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கும் ஹீரோயினுக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்க, அவர் உண்மையில் யார் என்பது எதிர்பாராத திருப்பம்.
பிரஜனுடன் இணைந்து மரணங்கள் சார்ந்த விசாரணையில் ஈடுபடுவது இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர் ஐஸ்வர்யா கண்ணன். அறிமுகமாகும் முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிற கேரக்டர். நடிப்பில் குறையில்லை.
அனுபமா குமார், செந்தி குமாரி, ஆதிரன், தண்டபானி என இன்னபிற நடிகர்கள் நடிப்பு அளவுக்குள் அடங்கியிருக்கிறது.
ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசை த்ரில்லர் கதைக்கு பொருத்தம். கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
கொலைகளைச் செய்து கொண்டிருப்பது யார் என்பதை துளியும் யூகிக்க முடியாத அளவில் பயணிக்கிற திரைக்கதை படத்தின் பலம். கொலையாளி யார் என்பதில் இருக்கிற ட்விஸ்ட் எதிர்பாராதது.
பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போனால் விறுவிறுப்பான ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை பார்த்த நிறைவு கிடைக்கும்.
அந்தரன் – கடைசி அரை மணி நேரத்தில் ஆச்சரியம் தருபவன்!
-சு.கணேஷ்குமார்
