அந்த இளம் ஜோடிக்கு திருமணமாகி, ‘மொத ராத்திரி’ அறைக்குள் போய் அமர்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் பெண் மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பாக முயற்சிக்கிறாள். அவருக்கு விவரம் தெரிந்து விடுகிறது. ‘ஏன் இப்படி?’ என விசாரிக்கிறார். அவள் ஒருவனை காதலிக்க, அதை எதிர்த்து கட்டாயமாக நடத்தப்பட்ட கல்யாணம் இது என்பது தெரிகிறது.
‘இதெல்லாம் காலம் காலமாக நிஜத்திலும் சினிமாக்களிலும் நடக்கிற கதைதானே? என சலிப்படையத் தேவையில்லை. மேட்டரே இனிமேல்தான்…
ஆமாம், இந்த கதையில், அந்த மாப்பிள்ளைக்கு அன்று காலைதான் தனக்கு கல்யாணம் என்பதே தெரியும். யார் பெண், என்ன விவரம் என ஒரு வார்த்தைகூட அவருக்கு சொல்லாமல் அவரது வீட்டார் ஏற்பாடு செய்த கல்யாணம். ஆக, அவருக்கும் அது கட்டாய கல்யாணம். அதற்கான காரணம் சிம்பிளாக இருக்கிறது. இருக்கட்டும்…
மாப்பிள்ளை, ‘சரி நடந்தது நடந்து விட்டது. உன் காதலனுடன் நானே சேர்த்து வைக்கிறேன்’ என அவளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார்.
நடந்த விஷயங்கள் இரு வீட்டாருக்கும் தெரிந்து, சண்டை சச்சரவாகி, அடிதடியாகி சூழ்நிலை மோசமாகிறது.
அதையெல்லாம் கடந்து அந்த பெண் காதலனுடன் சேர்ந்தாளா இல்லையா என்பது கதையின் மீதி…
காதுகுத்துக்கு என கூப்பிட்டு மணமகனாக்கியதில் அதிர்ச்சி, தன் கையால் தாலி கட்டிக் கொண்டவள் முதலிரவில் தப்பியோட தயாரானதைக் கண்டு அடுத்த அதிர்ச்சி, அவளை அவளது காதலனுடன் சேர்த்து வைக்கப் போனதில் அந்த காதலனின் நிலைமை தருகிற அதிர்ச்சி… ஒரு ஆள் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்க முடியும்? அப்படியெல்லாம் அதிர்ச்சியடைகிற பாத்திரத்தை ஏற்றுள்ள ரிஷிகாந்தின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. நடிப்பு கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது.
மணமகளாக அனிஷ்மா. தனக்கு நடக்கிற எதையும் தடுக்க முடியாமல் இருக்கிற நிலைமையை கச்சிதமான முகபாவங்களில் பிரதிபலிப்பதாகட்டும், தனக்கு கணவனாகிவிட்ட ஆணை ப்ரோ என்றழைத்து அதிர வைப்பதாகட்டும், தன் காதலன் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும் துணிச்சல் இல்லாதவன் என்கிற உண்மை தெரிந்து மிரள்வது என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
கவனம் ஈர்க்கக்கூடிய தோற்றத்தில், கனமான பூசாரி கேரக்டரை ஏற்று கம்பீரமான நடிப்பைத் தந்திருக்கிறார் சேத்தன்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, சங்கீதா பாலன், சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌசிக் கபிலன் என இன்னபிற கதாபாத்திரங்களில் கூட்டம் கூட்டமாய் நடிகர் நடிகைகள் நிறைந்திருக்க எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.
என்னைவிட உன்னை யாரும் இந்தளவுக்கு காதலிக்க முடியாது என்பது போல் வசனம் பேசுபவன்; பொருளாதார ரீதியாக பலமில்லாதவன்; காதலியிடம் ‘எது நடந்தாலும் பார்த்துக்கலாம், உனக்கு நான் இருக்கிறேன்’ என்று சொல்லும் துணிச்சல் இல்லாதவன். அப்படிப்பட்ட காதலனாக வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைப்பவர் இந்த படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி.
மேரேஜ், ஃபர்ஸ்ட் நைட் என மங்களகரமான கதை என்பதால் பின்னணி இசையில் தவிலிசையை அதிகரித்திருத்திருக்கிறார் பரத் சங்கர். ‘முதலா முடிவா’ பாடல் வைப் தருகிறது.
கிராமம், அதன் சுற்று வட்டாரம் என பல பகுதிகளை பயங்கர வேகத்தில் ஒரு இரவுக்குள் சுற்றிக் காட்ட வேண்டியிருக்கிறது. அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்ஜோதி.
உறவுகளுக்குள் நடக்கும் பேச்சு வார்த்தைக் கலவரங்கள் அதிகம். எடிட்டர் அதை சற்றே சுருக்கி, படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். இயக்குநர் அனுமதிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை.
கிட்டத்தட்ட முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிற அத்தனைப் பேரும் தேவைக்கதிகமாய் கத்திக் கத்திப் பேசுவது எரிச்சலடையச் செய்கிறது.
கதை என்னவோ சீரியஸ்தான். அதை இடைவிடாத காமெடி கலகலப்பு சம்பவங்களால் நிரப்பி ஆடியன்ஸுக்கு உற்சாக அனுபவம் தந்திருப்பதற்காக இயக்குநருக்குப் பாராட்டுக்கள்.
படத்தின் மூலம் ‘காதலிப்பது பெரிய விஷயமில்லை. காதலனுக்கு தன் காதலியை மனைவியாக்கிக் கொண்டு நல்லபடியாக குடும்பம் நடத்த முடியும் என்ற உறுதி இருக்க வேண்டும். காதலிக்கு, தன் காதலன் தன்னை மனைவியாக்கிக் கொண்டு நல்லபடியாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த காதலர்கள் மணவாழ்க்கையில் இணையாமலிருப்பதே நல்லது’ என்ற ஊர் உலகம் ஏற்கத்தக்க அறிவுரை கிடைக்கிறது.
மொத ராத்திரி – சிரிப்புக் கச்சேரி!
-சு.கணேஷ்குமார்

