Home விமர்சனம் என்ன விலை சினிமா விமர்சனம்

என்ன விலை சினிமா விமர்சனம்

மலையாள இயக்குநர்கள் வித்தியாசமான, புதிய புதிய கதைகளை எங்கிருந்துதான் தோண்டி எடுக்கிறார்களோ தெரியவில்லை. இந்த படத்துக்கான கதையை கடலில் மூழ்கி கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் சஜீவ் பாழூர்.

ராமேஸ்வரம் கடற்கரையின் அக்னி தீர்த்தம் பகுதி. ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள் கடலில் வீசும் நாணயங்களைச் சேகரிப்பதை தொழிலாக கொண்டிருக்கும் தவசி முத்து. அவர் கையில் விலையுயர்ந்த தங்கப் பதக்கம் ஒன்று கிடைக்க, அதை அவர் திருடியதாக பொய் வழக்கு பதிவாகிறது. நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மூலம் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் அவர், திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டு தன் மானம் பறி போனதற்கு விலையாக கேட்பதை அரசாங்கம் கொடுக்கிறது. அவர் என்ன விலை கேட்கிறார் என்பது திரைக்கதையின் முக்கியப் பகுதி.

அவர் குற்றவாளியாக்கப்படும் விதம், அனுபவிக்கும் சித்ரவதைகள், எதிர்கொள்ளும் சவால்கள் அரசாங்கத்தின் நடைமுறைகளும் சட்டதிட்டங்களும் எந்தளவுக்கு கெட்டுப் போயிருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தவசி முத்துவாக கருணாஸ். இதுவரை அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் யாரும் ஏற்காத கேரக்டர். அவர் கடலில் மூழ்கி நாணயங்களைச் சேகரிப்பது உலகில் இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பதை தெரியப்படுத்தி ஆச்சரியத்தில் தள்ளுகிறது. கிடைத்த பதக்கத்தை நேர்மையாக போலீஸிடம் ஒப்படைத்து பிரச்சனையில் சிக்கி அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்துவது நமது சிஸ்டத்தின் அவலத்தை தோலுரிக்கிறது. கேரக்டருக்கு எல்லா விதத்திலும் பொருந்தியிருப்பவரின் நடிப்பு தரம்.

கருணாஸ் சட்டப் போராட்டத்தில் ஈடுபட துணிச்சலாக துணை நிற்கும் அட்வகேட்டாக நிமிஜா சஜயன். நடிப்பில் வெரைட்டி காட்ட வாய்ப்பில்லாத கேரக்டர். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் ஆளுமையாக வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

கருணாஸின் மனைவியாக வருகிற விஜயலட்சுமி வீரமணி கடலோர கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். வேதனைகளை வெளிப்படுத்தி கலங்கிக் கதறுவதில் யதார்த்தம் தெரிகிறது.

காவல்துறையினர் எந்தளவுக்கு கேடு கெட்டவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் என்பதற்கு சாட்சியாக களமாடியிருக்கிறார் மோகன் ராம்.

‘ட்…ஆமிட்’ என வழக்கமான காமெடியில் ஈடுபடாமல் கோர்ட்டில் லெட்ப் ரைட் வாங்கும் கிரிமினல் லாயராக கெத்து காட்டுகிறார் லொள்ளு சபா சுவாமிநாதன்.

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் முதலமைச்சராக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே அரசின் கடமை என்பதற்கு முன்னுதாரணமாகிறார் ‘இளைய திலகம்’ பிரபு.

ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட சீனியர்கள் அவர்களுக்கு பொருத்தமான கேரக்டர்களில் எட்டிப் பார்க்க பூர்ணிமா பாக்யராஜ் நீதிபதியாக செட் பிராப்பர்டி போல் வந்து போகிறார்.

கொந்தளிப்பான கதையோட்டத்தில் ராமேஸ்வரத்தின் அலை குறைந்த கடல் பரப்பு, கடலோர மக்களின் வாழ்வியல் என சுற்றி வளைத்து உயிரோட்டம் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அல்பி ஆண்டனி.

உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சிப் பெருக்கோடும் பயணிக்கும் காட்சிகளுக்கு சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. ஜி.வி. பிரகாஷ் குரலில் ‘கடலாடும் சீமையிலே’ பாடலும் ‘வான் மீறு’ பாடலும் கதையில் கலந்திருக்கின்றன.

கருணாஸின் மகன் தற்கொலை முயற்சி,  தனி மனிதனின் பிரச்சனைக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிப்பதாக நீளும் காட்சிகள் உட்பட ‘சினிமாவில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம்’ என்ற உணர்வைத் தருகிற சம்பவங்கள் படத்தில் அதிகம். அதையெல்லாம் கடந்து, மனித உணர்வுகளில் மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது எந்தளவுக்கு அவசியம் என்பதை எடுத்துக் காட்டியதற்காக படக்குழுவுக்கு பாராட்டுக்களை விலையாகத் தரலாம்!

என்ன விலை – சட்டம் சாமானியன் பக்கம்!

-சு.கணேஷ்குமார்  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்