சில கதைகளைப் புரிந்து கொள்ள இன்டலக்சுவல் என்று சொல்லப்படுகிற அதிமேதாவித்தனமான மூளை தேவைப்படும். அப்படியான கதைகளில் ஒன்றாக,
சராசரி மனிதன் ஒருவனும், பல்லாயிரம் வருடங்களாக காதலை, காதலியைத் தேடியலைகிற சராசரி மனித உருவத்திலிருக்கிற விநோதப் பிறவி ஒருவருக்குமான சந்திப்பும் சிந்திப்புமாக ‘ஏழு கடல் ஏழு மலை.’
கதையின் பெரும்பகுதி சம்பவங்கள் ஓடும் ரயிலுக்குள் இடி, மின்னல், பலத்த மழைக்கிடையில் நடக்கிறது. சூரியும் நிவினும் தங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக சூரியை நிவின் கொல்லவில்லை என்பதை தவிர விதவிதமாக அடித்து, உதைத்து, தலை கீழாக தொங்கவிட்டு என பாடாய்ப் படுத்துகிறார்.
அவர் அந்தளவுக்கு கொடுமைப்படுத்த என்ன காரணம்? நிவின் காதலியைக் கண்டறிந்தாரா, இல்லையா? ரயில் பயணத்தில் இருவரும் இணைந்ததன் பின்னணி என்ன?
இதற்கான பதில்களை பரபரப்பான ரயில் பயணத்திலேயே சொல்லி முடிக்கிறார் இயக்குநர் ராம். ஒரு எலியின் உயிரையும், அதன் குட்டிகளின் உயிரையும் காப்பாற்றும் அத்தியாயங்களும் திரைக்கதையில் உண்டு.
தடித்த துணியாலான உடை, முகம் மறைக்கிற அளவு காடுபோல் தாடி மீசை என முரட்டு மனிதராக நிவின் பாலி. தன்னுடன் பயணிப்பவரை கன்னாபின்னாவென்று தாக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிடைக்கிற கேப்பில் காதல், அன்பு, கேலிகிண்டல் என மற்ற ஏரியாக்களிலும் அட்டனன்ஸ் போடுகிறார்.
நிவினை சார் சார் என்றழைத்து, அவரது மனதில் உள்ளதையெல்லாம் புரிந்து கொள்வதாகட்டும், அவரை எதிரியாக கருதி மோதுவதாகட்டும், தாக்குதலுக்கு ஆளாகி உயிர் தப்பிக்கப் போராடுவதாகட்டும் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு தன்னால் முடிந்தவரை பலம் தந்திருக்கிறார் சூரி.
அஞ்சலிக்கு காட்சிகள் குறைவு. காதல் உணர்வுகளை சரியான முகபாவங்களில் உடல்மொழியில் கடத்துகிற கடமையை கச்சிதமாக செய்து கடந்து போகிறார்.
காடு, மலை, கடல் என இயற்கையின் எல்லா பக்கமும் புகுந்து புறப்பட வேண்டும்; ரயிலுக்குள் சுற்றிச் சுழலும் காட்சிகளை ஆடியன்ஸுக்கு அலுப்பு சலிப்பு ஏற்படாதபடி காண்பிக்க வேண்டும். தனக்கான பொறுப்பை உணர்ந்து கேமராவை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்.
உணர்ச்சி வசப்படுதல், உணர்வுகளில் புதைந்து மீண்டு வருதல் என அமைக்கப்பட்ட கதை மாந்தர்களின் உலகம், காட்சிகளின் விறுவிறுப்பு இரண்டுக்கும் பலமான பாலம் அமைத்திருக்கிறது இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா – சந்தோஷ் தயாநிதி கூட்டணி. பாடல்களில் போதுமான ஜீவனிருக்கிறது.
விஷப்பரிட்சை மாதிரியான வித்தியாச முயற்சிகள் எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திபடுத்துவதில்லை. இந்த படமும் அதே ரகம்.
ஏழு கடல் கடப்பதென்பது, ஏழு மலை ஏறி இறங்குவதென்பது நிச்சயம் சிரமம்தான். கடந்து விட்டால், ஏறி இறங்கிவிட்டால் அனுபவம் சிறப்பாக இருக்கலாம்.
-சு.கணேஷ்குமார்

