வசந்தபாலன் இயக்கி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் ஜூலை 21-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘அநீதி.’
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டியக் கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் வசந்த பாலன், “வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும்” என்றார்.
படத்தை வெளியிடும் ‘எஸ் பிக்சர்ஸ்’ இயக்குநர் ஷங்கர், “உழைக்கும் வர்க்கத்தின் குரலை ‘அநீதி’ படம் ஓங்கி ஒலிக்கிறது. தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை வசந்த பாலன் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் முதலாளிகளும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “என் மீது நம்பிக்கை வைத்து மிகவும் இள வயதிலேயே இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலன் அவர்களுக்கும் ஷங்கர் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. விரைவில் இசையமைப்பாளராக நூறாவது படத்தை தொட உள்ளேன். வசந்த பாலன் ஒரு மிகச் சிறந்த இயக்குநர், நான்கு படங்களில் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ‘அநீதி’ மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவை தாருங்கள்” என்றார்.
இயக்குநர் கே பாக்யராஜ், “வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர். ‘அநீதி’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கு வசந்தபாலனின் முந்தைய திரைப்படங்களே சான்று. படம் மாபெரும் வெற்றி பெற்று அதன் வெற்றி விழாவிலும் நான் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
நடிகர் சித்தார்த், “இந்த படத்தை பணம் செலவிட்டு நீங்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று கட்டாயம் பார்க்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு படத்தை இயக்குநர் ஷங்கர் வழங்குகிறார் என்றாலே அது மிகவும் சிறந்த படமாகத் தான் கட்டாயம் இருக்கும். வசந்தபாலன் இயக்கத்தில் உருவான படம் என்றால் அது சொல்லப்பட வேண்டிய கதையாக தான் இருக்கும். ஜிவி பிரகாஷின் இசையை பற்றி நிறைய பேசலாம். இவ்வாறு ‘அநீதி’ படத்தை பார்ப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வசந்த பாலனுடன் ‘காவியத்தலைவன்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்” என்றார்.
இயக்குநர் என். லிங்குசாமி, “இயக்குநர் வசந்த பாலனும் நானும் சாலிகிராமத்தில் ஒரே அறையில் தங்கி இருந்தது முதல் இப்போது வரை நண்பர்கள். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வசந்த பாலனுக்கு உண்டு. ஆகையால் இந்த விழாவை இந்த மேடையை எனது விழாவாகவும் எனது மேடையாகவும் தான் நான் பார்க்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் ஏ. வெங்கடேஷ், “ஷங்கர் சாரிடம் பணியாற்றிய காலத்தில் இருந்தே வசந்த பாலனும் நானும் நண்பர்கள். வசந்த பாலனுக்கு நண்பர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதன் காரணம் என்னவென்றால் நண்பர்களின் மீது அவர் மிகவும் பாசம் காட்டுவார். ‘அங்காடி தெரு’வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி நான் தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது அன்புக்கு கட்டுப்பட்டு நான் அப்படத்தில் நடித்தேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் காட்டுவது அனைவருக்கும் கைவந்ததல்ல, வசந்த பாலனுக்கு இது மிகவும் அழகாக வருகிறது. தொடர்ந்து பல்வேறு மிகச் சிறந்த படங்களை அவர் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “‘வெயில்’ படத்திலிருந்தே வசந்தபாலன் அவர்களின் எழுத்துக்கு நான் ரசிகன். ‘அநீதி’ திரைப்படத்தை காணும் வாய்ப்பை சமீபத்தில் நான் பெற்றேன். மிக மிக விறுவிறுப்பான படம். வசந்த பாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் எப்போதும் வெளிப்படும். அது இந்த படத்திலும் உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. காளி வெங்கட்டின் மிகச் சிறப்பான பங்களிப்பு ‘அநீதி’ படத்தில் பேசப்படும். இப்படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் அறிவழகன், “இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. நாங்கள் இரண்டு பேருமே ஷங்கர் சாரிடம் பணிபுரிந்த பின்னர் எங்களது முதல் படத்தை அவரது தயாரிப்பிலேயே இயக்கியவர்கள். மக்களின் வாழ்வியலை திரையில் பிரதிபலிப்பதில் வசந்த பாலன் வல்லவர். இப்படத்திலும் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்” என்றார்.
படக்குழு:-
தயாரிப்பு: ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ சார்பில் எம். கிருஷ்ணகுமார் முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி. வசந்த பாலன்
ஒளிப்பதிவு: எட்வின் சகாய்
கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி
படத்தொகுப்பு: M.ரவிக்குமார்
வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா
நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்
சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு ஒலிக்கலவை: எம் ஆர் ராஜாகிருஷ்ணன்
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்


