தெருநாய் பிரச்சனை நாடு முழுவதும் பற்றியெறிகிற காலகட்டத்தில், வெறிநாய்க்கடியை கதையில் இணைத்துப் பிணைத்திருக்கிறது ‘அந்த 7 நாட்கள்.’
அந்த இளைஞனுக்கு, தன் காதலி இன்னும் 7 நாட்களில் இறந்து விடுவாள் என்பது சூரியன் மூலம் கிடைத்த விசேச சக்தியின் மூலம் தெரிகிறது. அதுபோலவே இன்னும் சிலரின் மரண நாள் தெரிந்து, அதன்படியே அவர்கள் இறந்துபோனதை பார்த்துள்ள அவனுக்கு தன் காதலியும் மரணமடைந்து விடுவாள் என்ற என்பது புரிகிறது. அதற்கேற்ப நன்றாக இருந்த காதலிக்கு பெரியளவிலான பிரச்சனை உருவாகி, அவள் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறாள்.
அப்படியான சூழ்நிலையில் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவன் எடுக்கும் முயற்சிகளும், அதனால் அந்த ஜோடி சந்திக்கும் பிரச்சனைகளுமே மீதிக் கதை. அவனது முயற்சிகள் காதலியின் உயிரைக் காப்பாற்றியதா இல்லையா என்பது கிளைமாக்ஸ். சூரியன் மூலமாக அவனுக்கு கிடைத்த சக்தியும் அதன் பின்னணியும் கதையிலிருக்கும் சுவாரஸ்யமான அத்தியாயங்கள்… இயக்கம் எம் சுந்தர்
காதலனாகஅஜிதேஜ், காதலி மரணமடையும் நாள் தெரிந்ததும் காட்டுகிற பதட்டம், அவளை காப்பாற்றவதற்கான முயற்சிகளில் வெளிப்படுத்தும் தவிப்பு அவரது கேரக்டரை உயர்த்திப் பிடிக்கிறது.
காதலியாக ஸ்ரீஸ்வேதா. கொஞ்சமே கொஞ்சம் த்ரிஷாவின் சாயல் எட்டிப்பார்க்கிற முகவெட்டு அவரது லட்சணத்தை கூடுதலாக்கிக் காட்டுகிறது. ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகி அதனுடைய உச்சகட்ட அவஸ்தைகளை அனுபவிக்கும்போது, தன்னுடையது வெறுமனே ஹீரோவை காதலித்து டூயட்டில் ஆடிவிட்டுப் போகிற கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்ந்து நடித்திருப்பது தெரிகிறது.
படக்குழு ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் தலைப்பை இயக்குநர் கே பாக்யராஜிடமிருந்து அனுமதி பெற்று பயன்படுத்தியதோடு, அவருக்கு அமைச்சர் கதாபாத்திரத்தைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது. அவரது எளிமையான நடிப்பு கவனம் பெறுகிறது.
நாயகனின் அப்பாவாக அரசியல்வாதியாக வருகிற நமோ நாராயணன், வழக்கறிஞராக வருகிற சுபாஷினி கண்ணன், முன்கதையில் ஆள் அடையாளமே தெரியாத முதியவர் கெட்டப்பில் வருகிற தலைவாசல் விஜய் என இன்னபிற நடிகர், நடிகைகள் நிறைவான பங்களிப்பைத் தந்திருக்க, பின்னணி இசையை கதையோட்டத்தில் சரியாகப் பொருந்தும்படி வழங்கியிருக்கிறார் சச்சின் சுந்தர். பாடல்கள் பரவாயில்லை ரகம்.
கோபிநாத் துரையின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பரந்து விரிந்த பசுமை கண்களை நிறைக்காமல் விடாது.
கதாநாயகனின் வானியல் ஆராய்ச்சி, ‘தொலைநோக்கி’ப் பார்வை என நீளும் காட்சிகள் படத்தின் முன் பாதியை பெருமளவில் எடுத்துக் கொண்டிருப்பது ஒருவித அயர்ச்சியைத் தந்தாலும், இடைவேளைக்குப் பிறகு ‘சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாகிடும்’ என்கிற அடிப்படையில் கதையின் வேகம்கூடி ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுபோகிறது.
-சு.கணேஷ்குமார்


