காதலர்கள் காதலுக்காக உயிரை விடுவது வரை எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள். இந்த கதையில் வருகிற காதல் ஜோடி தங்கள் காதலுக்கு எதிர்ப்பு உருவாக, எதிர்ப்பவர்களை ஏமாற்றி அவர்கள் முன் வாழ்ந்து காட்ட ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுகிறார்கள். அப்படி மாறும்போதும், மாறிய பின்னரும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் விறுவிறுப்பான காட்சிகளாக கடந்தோட, அந்த மாற்றம் அவர்களுக்கு பெரியளவிலான அதிர்ச்சி தருகிறது; அதில் படத்தின் மூலம் இயக்குநர் இந்த சமூகத்துக்கு சொல்லவரும் அழுத்தமான கருத்து இருக்கிறது.
காதலர்களாக புதுமுகங்கள் தர்ஷன் _ ஷர்மிஷா. பலருடைய காதலுக்கும் வருவதுபோலவே அவர்களின் காதலுக்கும் எதிர்ப்பு வர, அதையெல்லாம் சமாளித்துப் பயணிப்பது, பாலினம் மாறியதன் விளைவாக தவறான நபர்கள் என்ற அடையாளத்தோடு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு கலங்கி நின்று பதிலளிப்பது என தங்களுக்கான காட்சிகளுக்கு உணர்வுபூர்வமான நடிப்பைத்தந்திருக்கிறார்கள்.
அயோக்கியத்தனங்களை அனுபவித்துச் செய்கிற காவல்துறை உயரதிகாரியாக கவனிக்கத்தக்க நடிப்பைத் தந்திருக்கும் ஜி வி பெருமாள் (இந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்), பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் காவல்துறையில் இருக்கிற சில கேடுகெட்டவர்களால் சந்திக்கிற பிரச்சனைகளில் ஒன்றை சாம்பிளுக்கு சாட்சியாக காண்பித்திருக்கிறார்.
கதாநாயகியின் தாய் மாமனாக ஜெ மனோஜின் பங்களிப்பு மிரட்டல்.
ஷகிலாவின் வளர்ப்பு மகளாக அறியப்பட்ட மிலா வழக்கறிஞராக கெத்து காட்ட, பாலின மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக வருகிற ஷகிலாவும், அரசு தரப்பு வழக்கறிஞராக மதுமிதாவும், கதாநாயகியின் அப்பாவாக புதுப்பேட்டை சுரேஷும், நீதிபதியாக பாய்ஸ் ராஜனும் அவரவர் கேரக்டருக்கு அளவான நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார்கள்.
கதை உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருக்க, கதை நிகழ்விடங்களை ஒளிப்பதிவாளர்கள் டோர்னலா பாஸ்கர், பரணி குமார் கூட்டணியின் கேமரா கோணங்களில் பார்க்கும்போது மனம் ரிலாக்ஸாகிவிடுகிறது.
பாரதிராஜாவின் பின்னணி இசை நேர்த்தி.
படத்தின் திரைக்கதையில், மேக்கிங்கில் குறிப்பிட்டுச் சொல்ல சிலபல குறைகள் இருந்தாலும்,
‘சிகிச்சைகளால் பாலினம் மாறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் தவிர்ப்பதே மனித பிறவிக்கு நாம் செய்கிற மரியாதை’ என்பதை எடுத்துச் சொன்ன விதத்தில் பாராட்டுக்குரியவராகிறார் இயக்குநர் ஜி வி பெருமாள்!
-சு.கணேஷ்குமார்


