விஷ்ணு விஷால், இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள, பிரவீன் கே இயக்கியுள்ள இன்வஸ்டிகேடிவ் திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்.’ விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய விஷ்ணு விஷால் ”எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள் தான் நன்றி. க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம்.
கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப்படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் 200 சதவீத உழைப்பை தந்துள்ளனர்.
என் மனைவி ஜிவாலாவிற்கு நன்றி. ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. இந்தப்படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார். தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக, உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி.
ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார், அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் பையன் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி” என்றார்.
இயக்குநர் பிரவீன் கே ”இன்று நான் நானாக இருக்க காரணமான என் அப்பா அம்மா மற்றும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் எழுத்தாளர் மனு ஆனந்திற்கு நன்றி. எஃப் ஐ ஆர் படப்பிடிப்பின் போது உருவான கதை இது. எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாக புரிந்து கொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம். எனக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம். இந்தப்படத்தின் கதை கேட்ட தருணத்திலிருந்து அவர் இந்த கேரக்டரை, படத்தை எடுத்துச் சென்ற விதம் பிரமிப்பானது. இந்தக்கதையை ரவிதேஜா சார், அமீர் சார் என பல நடிகர்களிடம் எடுத்து சென்றோம். இதை இந்தியிலும் செய்வதாக இருந்தது. பல தடைகள் வந்த போதும் அவர் இப்படத்தை தாங்கினார். இதற்காக அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. இந்தப்படத்தை முழுதாக வேறுமாதிரி அணுகியிருக்கிறோம்.
ஷ்ரத்தா மிக திறமையானவர், அவர் தான் இந்த ரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். சிறப்பாக செய்துள்ளார். மானசா நல்ல திறமைசாலி அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் இதன் தொழில்நுட்ப கலைஞர்கள். மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்தேன், அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர். ஜிப்ரான், ஷான், ஹரீஷ், ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக செய்துள்ளனர். எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு சிறப்பான அனுபவம் தரும்” என்றார்.
இயக்குநர் செல்வராகவன் ”விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவரைச் சந்தித்ததில்லை. அவர் என்னை சந்தித்து, படம் செய்ய வேண்டும் என அணுகி, அவருடன் வேலை பார்த்த போது தான், அவரை பார்த்து பிரமித்தேன். அவர் வீட்டுக்கே போக மாட்டார். எப்போதும் சினிமா தான். சினிமாவை காதிலிக்கிற நேசிக்கிற, மதிக்கிற, ஹீரோ. அதே போல் இயக்குநர் பிரவீன், அவரும் அப்படித் தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும்” என்றார்.
எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந்த் ”எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ, அதே போல் ஆர்யன் முக்கியமான படம். பிரவீன் என் நண்பர் அவர் தான் இயக்குநர், விஷ்ணு என் முதல் ஹீரோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹீரோ அவர்தான். பிரவீனும் நானும் கௌதம் மேனனிடம் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம். சினிமாவை ஒன்றாக விவாதிப்போம். விஷ்ணு விஷால் கதை கேட்ட போது நான் தான் பிரவீனை சிபாரிசு செய்தேன். இந்தக் கதையை திரைக்கதையாக எழுத பிரவீன் அணுகிய போது மகிழ்ச்சியாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை. அக்டோபர் 31 படம் பார்க்கும் போது பிரவீன் திறமை உங்களுக்கு புரியும். எஃப்.ஐ.ஆர் படத்தை பலர் தவிர்த்த போது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால். அவர் இந்தப் படத்தையும் நம்பி தயாரித்துள்ளார். போலீசாக கலக்கியிருக்கிறார். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார்! ஷ்ரத்தாவும் சிறப்பாக செய்துள்ளார். ஜிப்ரான் சார் அருமையான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும்”என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் ”எல்லோரிடமிருந்தும் ராட்சசன் மாதிரி இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. ராட்சசன் எனக்கு முக்கியமான படம். ராட்சசனில் வில்லன் யார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கும். அது இசையில் சவாலாக இருந்தது. இதில் வில்லன் யார் எனத் தெரிந்துவிடும், ஆனால் அதன் பிறகு தான் கதை தொடங்கும். செல்வா சார் நடிப்பிற்கு மியூசிக் செய்தது சந்தோசமாக இருந்தது. மியூசிக் நன்றாக தெரியக் காரணம் எடிட்டர் ஷான் தான். எடிட்டிங்கில் இசைக்கு நன்றாக இடம் கொடுப்பார். ரொம்ப கடினமான திரைக்கதையை மிக அழகாக சொல்லியுள்ளார் பிரவீன். வாய்ப்புத் தந்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. இந்தப்படத்துக்கு ஒரு சவுண்ட் செய்துள்ளேன், ராட்சசனில் இருந்து முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இப்படம் ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும்” என்றார்.
நடிகர் கருணாகரன், நடிகை மானசா சௌத்திரி, நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத், கலை இயக்குநர் ஜெயச்சந்திரன், எடிட்டர் ஷான் லோகேஷ் உள்ளிடோரும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள்.

