உயரிய விருதுகளையும் விமர்சனங்களில் பாராட்டுக்களையும் குவிக்கப்போகும் படைப்பு. பெருமாள் முருகனின் தரமான சிறு கதைகளில் ஒன்றான ‘கோடித்துணி’யின் சிறப்பான திரை வடிவம்.
அகம்பாவம் பிடித்த அம்மாவிடம் மாட்டிக்கொண்டு நிம்மதியிழக்கும் அன்பான மகன்கள்.
இப்படி ஒற்றை வரியில் சொல்லிவிட முடிகிற கதை. ஆனால், திரைக்கதையில் உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடுகிறது; வலியின் சுவடுகள் அழுத்தமாய் பதிகிறது.
அங்கம்மாள் கணவனை இழந்தவள்; பழமைவாதி; அவளுக்கு ஜாக்கெட் அணியும் வழக்கமில்லை. அவளது மூத்த மகன் சரியாகப் படிக்காததால் விவசாயப் பணியில் ஈடுபட, இளைய மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து டாக்டராக்குகிறாள். அந்த டாக்டர் மகன் ஒரு பெரிய இடத்துப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த பெண்ணின் குடும்பம், தங்களுக்கு மருமகனாக வரப்போகிறவரின் வீட்டையும், வீட்டு மனிதர்களையும் பார்க்கத் தயாராகிறார்கள்.
அவர்கள் வரும்போது தன் அம்மா ஜாக்கெட் அணியாமல் இருந்தால் அது தன் காதலியிடமும் அவளது குடும்பத்தாரிடமும் தன் மரியாதையைக் குறைத்துவிடும் என நினைக்கிறான். அம்மாவை ஜாக்கெட் அணிய கேட்டுக் கொள்கிறான். அவள் மறுக்க, கட்டாயப்படுத்துகிறான். அதனால் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் உருவாகும் பிரச்சனை பெரிதாகி, ஒரு கட்டத்தில் ஊர்ப் பஞ்சாயத்து கூடி அங்கம்மாளுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு போகிறது.
அங்கம்மாள் யாருக்கும், எதற்கும் கட்டுப்படாதவள். தான் நினைப்பதை மட்டுமே செய்பவள். அப்படிப்பட்டவள் ஜாக்கெட் அணியும் விவகாரத்தில் எடுத்த முடிவு என்ன? மகனது காதல் கல்யாணத்தில் முடிந்ததா அல்லது அங்கம்மாளின் அடாவடித்தனத்தால் நின்றுபோனதா? என்பது மீதிக் கதை.
ஜாக்கெட் அணியாத கோலம், அடிக்கடி சுருட்டும் பீடியும் பிடித்துக் கொண்டிருப்பதால் கறையேறிய பற்கள், எங்கு போவதாக இருந்தாலும் டிவிஎஸ் வாகனத்தில் வேகமெடுப்பது, உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் மருமகளை இழுத்துப் போட்டு அடிப்பது என முரட்டுத்தனம் நிரம்பிய அங்கம்மாள் கதாபாத்திரத்திற்கு கீதா கைலாசத்தின் உடல்மொழி பொருத்தமாக அமைந்து உயிரூட்டியிருக்கிறது. கல்லாக இருந்தாலும் அதற்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதற்கு சான்றாக மிகச்சில தருணங்களில் பாசக்கார பெண்மணியாகவும் எட்டிப் பார்க்கிறார்.
அம்மா மீது பாசம் காட்ட வேண்டும்; அவளது தோற்றத்தை அருவருப்பாக நினைக்க வேண்டும்; அவளை காலத்துக்கேற்றபடி மாற்ற முயற்சித்து தோல்வியைச் சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்; காதலியோடு செலவிடும் நேரத்திலும் அம்மாவின் குணத்தை நினைத்து கவலைப்பட வேண்டும்; சந்தர்ப்பம் பார்த்து இதமாக பதமாகப் பேசி அம்மாவை தன் வழிக்கு கொண்டுவர வேண்டும். இளைய மகனாக வருகிற சரணுக்கு ஏகப்பட்ட கடமைகள். அதையெல்லாம் செய்திருக்கும் விதம் இயல்பாக இருக்கிறது.
தன் மீது அவ்வளவாய் பாசம் காட்டாத அம்மாவின் அவள் விருப்பப்படியே, கிட்டத்தட்ட அவளது அடிமைபோல் வாழ்ந்து வாழ்ந்து தான் நிம்மதியிழந்த மனிதனாக, அங்கம்மாளின் மூத்த மகனாக ‘நாடோடிகள்’ பரணி. மனதுக்கு ஆறுதல் தேவைப்படும் போதெல்லாம் வயல் வெளியில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பவருக்கு ஒரேயொரு முறை மட்டுமே அம்மாவின் அராஜகப் போக்கை எதிர்த்துப் பேசும் துணிச்சல் வருகிறது. அப்போது அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.
மாமியாரின் கோபத்துக்கு ஆளாகி அடி உதை படுகிற மருமகளாக பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார் தென்றல் ரகுநாதன்.
‘உன் அம்மா ஜாக்கெட் போடாததெல்லாம் ஒரு மேட்டரே இல்லை’ என சொல்லி காதலனின் மனதுக்கு இதம் சேர்ப்பதும், ஜாக்கெட் அணியாத தன் வருங்கால மாமியாரை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சென்று சந்திப்பதுமாய் தன் இருப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார் மென் புன்னகையுடன் காதலியாக வருகிற முல்லையரசி.
பேத்தியாக வருகிற சிறுமியின், அங்கம்மாளின் சிநேகிதராக வருகிற முதியவரின் பங்களிப்பு ஆழமானது. இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிற அத்தனைப் பேருக்கும் கதையோட்டத்தில் முக்கியத்துவம் இருக்கிறது.
கதை நிகழ்விடம் நெல்லை மாவட்டம். அங்கு இப்போது எங்கு கேமரா வைத்தாலும் காற்றாலை மின்சார தயாரிப்பு மின்விசிறி (wind Mill) வந்து சிக்கிக் கொள்ளும். அதையெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்து 1990-களில் நடக்கும் கதையின் தன்மைக்கேற்ப நெல்லை மண்ணின் நீள அகலங்களை தன் கேமராவின் வழியாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அஞ்சாய் சாமுவேல்.
முகமது மக்பூல் மன்சூரின் இசையில் இரைச்சல், அதிரடி அதிர்வு என எதுவுமில்லை; கதைக்கு எது தேவையோ அதில் குறையில்லை.
ஒவ்வொரு கிராமத்திலும் அடாவடியாக வாழ்ந்து அப்படியே போய்ச் சேர்கிற அங்கம்மாள்கள் இருந்தார்கள்; இப்போதும் இருப்பார்கள். அப்படிப்பட்ட மனுஷிகளின் ஜெராக்ஸாக ஒரு மனுஷியை பார்க்க விரும்பினால் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்த அங்கம்மாளை பார்க்கலாம்; மண்மணத்துடன் புது அனுபவம் கேரண்டி!
அங்கம்மாள் – தமிழ் சினிமாவை தரம் உயர்த்தும் முயற்சி; தமிழில் இன்னொரு உலக சினிமா!
-சு.கணேஷ்குமார்

