Home விமர்சனம் ஆகக் கடவன சினிமா விமர்சனம்

ஆகக் கடவன சினிமா விமர்சனம்

இது ஏன் நடக்கிறது? அது ஏன் நடக்கிறது?

இது ஏன் நடந்தது? அது ஏன் நடந்தது?

இவர்கள் யார்? ஏன் அந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள்?

அவர்கள் யார்? ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள்?

பார்க்கிறவர்களின் மனதில் இப்படி பல கேள்விகள் உருவாகும்படி படத்தின் 75 சதவிகித காட்சிகளை நகர்த்திவிட்டு, அதன் பின் அத்தனை கேள்விகளுக்கும் பதில்களை பகிர்கிற சுவாரஸ்யமான திரைக்கதையில் உருவாகியிருக்கும் படம்; ஆண்கள் மட்டுமே நடித்திருக்கும் ‘ஆகக் கடவன.’

வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் சந்திக்கிறார்கள்; நண்பர்களாகிறார்கள். தங்கள் விருப்பமான மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் திரட்டுகிறார்கள். திரட்டிய பணம் திருடுபோக, மீண்டும் பணத்தைப் புரட்டுவதற்கான முயற்சியில் ஊருக்கு புறப்படுகிறார்கள். போகும் வழியில் பைக் பஞ்சராகிவிட, மெயின் ரோட்டிலிருந்து சில கி.மீ. தொலைவில் ஊருக்குள்ளிருக்கும் பஞ்சர் ஒட்டும் கடைக்குச் சென்று சேர்கிறார்கள்.

அங்கிருப்பவர்கள் உடனடியாக பஞ்சர் போடாமல் ஏதேதோ காரணம் சொல்லி நேரத்தைக் கடத்துகிறார்கள்; ஒருவழியாக பஞ்சர் ஒட்டி முடித்தபின் பைக்கிலிருந்த பெட்ரோல் திருடப்பட்டிருப்பதும், சார்ஜ் போட்ட செல்போனிலிருந்து பேட்டரி கழட்டப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. நண்பர்கள் மூன்று பேரில் இரண்டு பேரை அங்கிருக்கும் இரண்டு முரடர்கள் தாக்குகிறார்கள். மூன்று பேரில் ஒருவர் காணாமல் போகிறார்.

இப்படி தாறுமாறான சம்பவங்கள் நடக்க, ஒரு கட்டத்தில் அது எதுவுமே எதேச்சையாக நடக்கவில்லை; அத்தனையும் அங்கிருக்கும் மூன்று பேரால் திட்டமிடப்பட்டவை என்பது அந்த நண்பர்களுக்கு தெரிகிறது.

அப்படி அவர்களை திட்டமிட்டு சிக்க வைத்தவர்களுக்கும் நண்பர்கள் கூட்டணிக்கும் என்ன தொடர்பு? நண்பர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை திருடியது யார்? என்ற கேள்விகளுக்கு பரபரப்பான கடைசி 20 நிமிடங்களில் கிடைக்கிற பதில்கள் சுவாரஸ்யமானவை… ‘டைரக்டர் யாருப்பா?’ என ஆச்சரியமாக கேட்க வைப்பவை…

பல வழிகளில் கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தைப் பறி கொடுத்து மனம் உடைவது, முரட்டுப் பேர்வழிகளிடம் சிக்கி அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்துவது, எதிராளிகளை துணிச்சலாய் எதிர்த்து துவம்சம் செய்வது என நண்பர்களாக வருகிற ஆதிரன் சுரேஷ், சி ஆர் ராகுல், ராஜசிவன் கூட்டணி தந்திருப்பது வேகமும் விவேகமும் கலந்துகட்டிய உணர்வுபூர்வமான நடிப்பு.

மைக்கேலும் தஷ்ணாவும் குற்றச் செயல்களை குஷியாக செய்பவர்களாக களமாடி உருட்டலும் மிரட்டலுமான தங்கள் பங்களிப்பை கச்சிதமாக வழங்கியிருக்க, அவர்களின் பார்ட்டனரான வருகிற சதீஷ் ராமதாஸின் அலட்டிக் கொள்ளாமல் செய்கிற வில்லத்தனம் கவனம் பெறுகிறது. பயண நேரத்தில் அவர் சொல்கிற குட்டிக் கதைகள் வெரி வெரி இன்ட்ரஸ்டிங்.

மிசசமிருக்கிற ஒருசிலரின் நடிப்பும் நேர்த்தி.

தேசிய நெடுஞ்சாலை, கிளைபிரிந்தோடும் மண் சாலை, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் பஞ்சர் ஷாப், விவசாயப் பயன்பாட்டுக்கான மோட்டார், அதிலிருந்து பாயும் தண்ணீர், பாக்குமரத் தோப்பு என கதை நிகழ்விடங்களை அதன் தன்மை மாறாமல் தன் கேமராவுக்குள் சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் லியோ வி ராஜா.

படத்திற்கு பலம் சேர்த்திருப்பதில், திரைக்கதையின் ஓட்டத்துக்கேற்ப சாந்தன் அன்பழகன் தந்திருக்கும் பின்னணி இசைக்கு முக்கிய பங்குண்டு.

இது ‘உலகில் எந்த விஷயமும் காரண காரியமின்றி நடப்பதில்லை’ என்ற பிரபஞ்ச விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை என்பதை விளக்கும்படியான காட்சிகள் கிளைமாக்ஸில் விரியும்போது வியப்படையாமல் இருக்க முடியாது.

பாடம் நடத்துவது போல் இல்லாமல் போகிற போக்கில், நம் எண்ணத்திலும் பேச்சிலும் பேச்சிலும் இருக்கிற அதிர்வலைகளின் விளைவுகளை எடுத்துச் சொல்லியிருக்கிற விதமும் பாராட்டுக்குரியது.

கிரைம் திரில்லர், சர்வைவல் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் தர்மாவிடமிருந்து கிடைப்பது,

‘பெரியளவிலான பட்ஜெட்டும் பிரபலமான நடிகர் நடிகைகளும் கிடைத்தால் இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும்படியான படங்களை கொடுப்பார்’ என்ற நம்பிக்கை!

ஆகக் கடவன _ நம்பலாம் ரசிகர்களைக் கவருமென!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்