விஜய் சேதுபதி ஜாலியாக நடித்துள்ள, ரசிகர்களையும் அதே மூடுக்கு கொண்டு போகிற படம். காதலிக்காக எதையும் செய்யும் காதலன் என்ற வழக்கமான ஒன்லைனில் இயக்குநர் ஆறுமுககுமார் உருவாக்கியிருக்கிற ‘ஏஸ்.’
முதல் காட்சியில், ‘கேங்ஸ்டராக இருந்து திருந்தியவர்’ என நாமாக புரிந்துகொள்ளும்படி அறிமுகப் படுத்தப்படுகிறார் கதை நாயகன் ‘போல்ட்’ கண்ணன். அவருக்கு ஒரு பெண் மீது காதல் தீ பற்றிக்கொள்கிறது. அந்த காதலி மாபெரும் பிரச்சனையில் இருக்கிறார். அவரை அந்த பிரச்சனையிலிருந்து மீட்க பல லட்சம் தேவைப்படுகிறது. தனக்கு வேலை கொடுத்திருக்கும் முதலாளி பெண்மணிக்கும் லட்சக்கணக்கில் பணத் தேவை இருக்கிறது. கண்ணன், அவர்களின் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார். அதற்காக சூதாட்டம், பேங்க் பணத்தைக் கொள்ளையடிப்பது என அதிரிபுதிரி அமர்க்களத்துக்கு தயாராகிறார். அதில் அவருக்கு கிடைக்கிற பலன்களும், கஷ்ட நஷ்டங்களுமே மீதிக்கதை…
விஜய் சேதுபதியால் மிக சாதாரணமாக செய்ய முடிந்த, ஏற்கனவே செய்து பழகிய கதாபாத்திரம். காதல் உணர்வில் மிதக்கும் தருணங்களில் கண்களால் நடிக்கிறார்; சூதாட்டத்தில் ஆக்சன் காட்சிகளில் அதிரடி ஆவேசத்துடன் வில்லன்களை அடித்து நொறுக்குகிறார். பக்கத்து வீட்டில் எகிறிக்குதித்து கோழி திருடுவதுபோல் மலேசியாவின் பரபரப்பான இடத்திலிருந்து 40 கோடி ரூபாயை வளைத்துச் சுருட்டுகிறார்; யோகிபாபுவுடன் சேர்ந்து கலகலப்பூட்டும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார். அனைத்தையும் ரசிக்க முடிகிறது.
ருக்மணி வசந்த் வளர்ப்புத் தந்தை’யிடம் சிக்கிக் கொண்டு அவதிப்படுவதையும், விஜய் சேதுபதியுடன் காதலாகித் திரிவதையும் அந்தந்த உணர்வுகளோடு செய்திருக்கிறார்.
கதாநாயகனின் நண்பனாக வந்து, அவர் யாருக்கும் தெரியாமல் செய்கிற அதிரடி அட்டகாசங்களை யாருக்கெல்லாம் தெரியக்கூடாதோ அவர்களுக்கு தெரியப்படுத்தும் வெகுளித்தனத்தால் சிரிப்பூட்டுகிறார் யோகிபாபு.
சூதாட்ட மையத்தின் அதிபராக வருகிற கே ஜி எஃப் அவினாஷின் வில்லத்தனம் இன்னும் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கலாம்.
மலேசிய போலீஸ் ஆஃபீஸராக, கதாநாயகியின் வளர்ப்புத் தந்தையாக, காமவெறியராக வருகிற பப்லு பிரித்விராஜ் தன் கேரக்டருக்கேற்ற அயோக்கியத்தனத்தை அசத்தலாக செய்திருக்கிறார்.
கதாநாயகனுக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக திவ்யா பிள்ளை கச்சிதமான நடிப்பையும், பொங்கித் ததும்பும் இளமையின் கவர்ச்சியையும் சரிவிகிதத்தில் கலந்து தந்திருக்கிறார்.
மலேசியாவின் அழகை விவிதமான கோணங்களில் பார்க்க வைக்கிறது ஒளிப்பதிவாளர் கரண் பி. ராவதின் கேமரா.
ஏனோதானோ காட்சிகளைக்கூட தன் பின்னணி இசையால் சரவெடியின் சீற்றமாக்கியிருக்கிறார் சாம் சி எஸ்.
தாமரையின் வளமான தமிழும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் சங்கமிக்கும் ‘உருகுது உருகுது’ பாடலில் மனம் கரையலாம்.
லாஜிக் பார்க்கும் மூளையை ‘கம்னு கிட’ என அதட்டி அடக்கிவிட்டுப் பார்த்தால், காதலிக்காக எதையும் செய்யும் காதலனை ஒருமுறை ரசிக்கலாம்.
ஏஸ் _ ஜஸ்ட் பாஸ்!
-சு.கணேஷ்குமார்