‘ஐமா’ சினிமா விமர்சனம்

‘சர்வைவல் திரில்லர்’ சப்ஜெக்டில், எளிமையான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் ‘ஐமா.’

ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் கடத்தப்பட்டு கட்டடமொன்றின் அறைக்குள் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குள் ஏதோவொரு மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த அறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.

அவர்கள் என்னென்ன செய்தால் அங்கிருந்து தப்பிக்கலாம் என ஒரு குரல் அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதன்படி நடக்கிறார்கள். அடுத்தடுத்த அறைகளின் கதவுகள் திறக்கப்பட்டு அதற்குள் நுழைகிறார்கள். ஆனாலும் தப்பிப்பது சவாலாகவே இருக்கிறது.

திடுதிப்பென ஒரு தாடிக்கார கிழவர் தோன்றி ஏதேதோ பேசி அவர்களைப் பயமுறுத்தி, மனதைக் குழப்பிவிட்டு மறைந்து போகிறார்.

‘தப்பிக்கும் முயற்சியில் வெற்றி பெறவே முடியாது’ என்கிற அளவுக்கு சூழ்நிலை சிக்கலாகிறது.

அந்த இளம்ஜோடியின் பின்னணி என்ன? அவர்களைக் கடத்தியது யார்? கடத்தலின் நோக்கம் என்ன? அவர்களுக்குள் செலுத்தப்பட்ட மருந்து எதற்கானது? அவர்களால் தப்பித்து வெளியில் வர முடிந்ததா? இப்படியான கேள்விகளுக்கு சற்றே பரபரப்பான திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா.

நாயகன் யூனுஸுக்கு குழந்தைத்தனமும் புன்னகையும் போட்டி போட்டுக் குடியிருக்கும் முகம். அதைத் தாண்டி இக்கட்டில் சிக்கிய மன உளைச்சலை, இயலாமையை, ஆவேசத்தை முடிந்தவரை வெளிப்படுத்தி தான் ஏற்ற பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகி எல்வின் ஜூலியட் நெகுநெகு உயரம், வளவள தேகம், பளபள புன்னகை என இளைஞர்களைக் கவரும் இளமையோடிருக்கிறார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்தில் மனம் படும் அவஸ்தைகளை முகத்தில் பிரதிபலிப்பதும், இக்கட்டான சுழலில் தன்னை முத்தமிட்ட நாயகன் மீது எரிச்சலடைந்து பின் தானே அவனது இதழோடு இதழ் இணைவதுமாய் துடிப்பான நடிப்பால் ஈர்க்கிறார்.

படத்தை தயாரித்திருக்கும் சண்முகம் ராமசாமி வில்லனாக வந்து அளவாக மிரட்டியிருக்கிறார். அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா பாலு, மனோகரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்போரும் கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்க, கே.ஆர்.ராகுலின் பின்னணி இசை, விஷ்ணு கண்ணனின் ஒளிப்பதிவு என மற்ற துறைகளின் பங்களிப்பும் நேர்த்தி!

பாடல்கள் ஏராளமாக தாராளமாக கடந்துபோனாலும் மனதில் பதிவதற்கு வாய்ப்பு குறைவு.

கடத்தப்படும் இளைஞனும் இளம்பெண்ணும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பவர்கள் என்பதும், நெருக்கடிக்குள் சிக்கியபின் உயிர் பிழைக்க போராடுவதுமாய் கதையோட்டம் நகர்வது,

படத்தின் சில காட்சிகள், பார்த்துக் கொண்டிருப்பது பேய்ப்படமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி, பின்னர் ‘மெடிக்கல் கிரைம்’ ஜானரில் வேகமெடுத்தோடுவது படத்திலிருக்கும் தனித்துவம். இயக்குநர் அடுத்தடுத்த படங்களை இன்னும் தரமாய் தருவார் என்பது ‘ஐமா’விலிருந்து கிடைக்கும் நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here