படங்களை ஒடிடி.யில் ரிலீஸ் பண்ணிகிட்டிருந்தா ஹீரோவோட சம்பளத்தையும் அவங்கதான் நிர்ணயிப்பாங்க! -‘ஆன்டி இண்டியன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராதாரவி பேச்சு

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.

விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடையேற்றி கானா பாடல்களை பாடவைத்து இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியைத் துவங்கினார்கள்.

இயக்குநர் புளூ சட்டை மாறன் பேசும்போது, “.இந்தப்படத்துல ஜெயராஜ்னு நிஜமான ரவுடி ஒருத்தரை முக்கியமான வேடத்துல நடிக்க வச்சிருக்கேன்.. இந்தப்படத்தோட ட்ரெய்லர் வெளியான பின்னாடி அவருக்கு ஏழு படம் புக் ஆகிருக்கு.

விஜய் டிவி புகழ் பாலா ஒருமுறை ஏதேச்சையா என்ன சந்திச்சப்ப வாய்ப்பு கேட்டிருந்தார். இந்தப்படத்துல அவருக்கு நல்ல கேரக்டர் ஒன்னு இருந்தது. அதனால அவரை கூப்பிட்டு நடிக்க வச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினம் லேட்டாவே வந்துக்கிட்டு இருந்தாரு. ஏழு மணிக்கு வரச்சொன்னா எட்டு மணிக்கு வர்றாரேன்னு கடுப்பாகி, தம்பி நீ பின்னால சிம்பு மாதிரி பெரிய ஆளா வருவப்பா அப்படின்னு சொன்னேன். ஆனா அவரை ஒன்பது மணிக்குத்தான் வரச்சொல்லி இருக்காங்க. ஆனா அவரு எட்டு மணிக்கே வந்துருக்கார்னு அப்புறம் தான் தெரிஞ்சது.

இந்தப்படத்துல ராதாரவி சார் நடிச்சாத்தான் நல்லா இருக்கும்னு அவருகிட்ட மூணு தடவை போய் கதை சொன்னேன். அவரும் ஒத்துக்கிட்டாரு. படம் பார்க்கிறதுக்கே லைவா இருக்கணும்கிறதால அவரையும் இயல்பா காட்டணும்னு சில விஷயங்களை செய்ய சொல்லி அவர்கிட்ட சொன்னேன். அதுக்கு அவரு, அப்படின்னா முதலிரவு காட்சியையும் அப்படித்தான் லைவா பண்ணுவியான்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டார் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

ஆனா நான் சொன்னபடி நடிக்க ஒத்துக்கிட்டாரு. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரோட வசனத்துல கரெக்சன்லாம் பண்ணினாரு. ஒரு இயக்குனரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல. அதனால நீ சொன்ன மாதிரியும் எடுத்துக்க. நான் கரெக்சன் சொன்ன மாதிரியும் எடுத்துக்க, உனக்கு எது சரியா படுதோ அதை பயன்படுத்திக்க அப்படின்னு சொன்னாரு. அவரு சொன்ன மாதிரி ரெண்டு விதமாவும் எடுத்துட்டு, படத்தை எடிட் பண்ணும்போது ரெண்டையுமே மிக்ஸ் பண்ணி பயன்படுத்திட்டேன். ரொம்பவே நல்லா வந்திருக்கு.

சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன். சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின்னாடி, இந்தப்படத்துல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கிற நடிகர்கள் கூட ரசிகர்களால பெரிசா கவனிக்கப்படுவாங்க” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன். ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல சிஎம்.மா நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்.மா இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும். படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும். ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல.

இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. நிஜம் தான். அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார். நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க. திட்டத்தான் செய்வாங்க. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும்.

ஒரு படத்தை படமா பாருங்க. படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க. விஜய் பைரவான்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க.

நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும். இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது.

படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவோட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here