‘திரைப்படங்களைத் தணிக்கை இல்லாமல் இயக்கினால் நாட்டின் தலைவிதியை மாற்றலாம்.’ ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேரறிஞர் அண்ணாவை நினைவு படுத்திய எஸ். ஏ. சந்திரசேகர்  

‘திரைப்படங்களைத் தணிக்கை இல்லாமல் இயக்கினால் நாட்டின் தலைவிதியை மாற்றலாம்.’ ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேரறிஞர் அண்ணாவை நினைவு படுத்திய எஸ். ஏ. சந்திரசேகர்  

இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில், ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் பாடல்கள்வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில்,

”டிசம்பர் 3-ம் தேதி இப்படம் வெளியாகிறது. சமூக அக்கறை கொண்ட படம் என்பதால், சமூகத்தின் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு, வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை அழைத்தேன்.

இந்தப்படத்தில் அண்மைக்காலமாக யாரும் சந்திக்காத சமுத்திரகனியைப் பார்க்கலாம். அழகான ஹீரோ அமைதியான ஹீரோ. இனிமையான ஹீரோ. அவருக்குள் ஒரு கமர்சியல் ஹீரோ ஒளிந்து கொண்டிருக்கிறார். ஒரு கமர்சியல் ஹீரோவிற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கின்றன. இந்தப் படத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் புதிது புதிதாக நடிகர்களை உருவாக்கி, வாய்ப்பளித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் இருந்த உத்வேகம் இப்போது இல்லை. இயக்குநர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதில் சில வசதிகள் இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல், உதவி இயக்குநராகவும், வசனத்தில் உதவி செய்பவராகவும், காட்சிகளை சுவாரஸ்யமாக மேம்படுத்துவதிலும், படப்பிடிப்புத் தள நிர்வாகத்திலும் உதவுவார்கள்.

நான், இயக்குநர் அமீர், சமுத்திரகனி போன்றவர்கள் சினிமாவை ஒரு வாழ்வியலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். அந்த வழியில் நாங்கள் சினிமாவை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, இந்த. சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல முடியுமா… என்று பயணப்படுகிறோம். ஏனெனில் சினிமா என்பது ஒரு வலிமையான ஆயுதம். ஊடகம் என்று சொல்ல மாட்டேன். ‘மூன்று திரைப்படங்களைத் தணிக்கை இல்லாமல் இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நாட்டின் தலைவிதியை நான் மாற்றி காட்டுகிறேன்’ என்று பேரறிஞர் அண்ணா அன்றே சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு சினிமா ஒரு வலிமையான ஆயுதம். அதனால் சினிமாவை சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் கொடுக்க வேண்டும் என திரைத்துறைக்குள் வந்தேன். அதை தற்போது வரை செய்து கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு 80 காலக்கட்டத்துப் பாணியில் மனதிற்கு நிறைவாக ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன்.

சினிமாவில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். ரஜினி கூட நெகட்டிவ் கேரக்டரில் அறிமுகமாகி பிரபலமானவர். இந்தப்படத்தில் நாயகனை விட பல இடங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் சரவணன் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு நடிகர் சரவணன் பக்கம் குழந்தைகள் வரமாட்டார்கள். வருவதற்குப் பயப்படுவார்கள்.

‘நான் கடவுள் இல்லை’ படம் எனக்குத் திருப்தியாக அமைந்திருக்கிறது என மகிழ்ச்சி அடைவதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் இசை அமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டு உழைப்பு தான் .

இந்தப் படத்திற்கு முதலில் பாடல்களே வேண்டாம் என்று தான் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உறவை – ஆழமான புரிதலை காட்சிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இடத்தில் பாடல்கள் வந்தால் பொருத்தமாக இருக்குமென படத்தொகுப்பாளர் சுட்டிக்காட்டினார். அதன்பிறகு அங்கு ஒரு பாடலை வைத்தோம். பாடலுக்கு இடையில் ஒரு தந்தையின் அழுகுரல் இடம் பெற வேண்டும் என எண்ணினேன். அதனை நானே பாடினேன். நான் பாடினேன் என்பதைவிட அந்த இடத்தில் ஒரு தந்தையின் அழுகுரலைப் பதிவு செய்தேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here