தென்னிந்திய சினிமாவில் இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மலையாள சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் தமிழ் தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் பாபு ஆண்டனி. அதன் பின் 1990 – களில் மலையாளத்தில் காதாநாயகனாக, ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று போற்றப்பட்டார். இவர் கதாநாயகனாக மலையாளத்தில் நடித்த கடல், பாக்ஸர், சந்தா, பரண கூடம், நெப்போலியன், தாதா, ராஜதானி உள்ளிட்ட ஏராளமான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இன்றும் மலையாளத்திலும் பிற மொழிகளிலும் நாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர நடிகராக நடித்து கொண்டிருக்கிறார், பாபு ஆண்டனி .
பல வருடங்களுக்கு பிறகு ‘எவர்கிரீன் ஸ்டார் ‘ ரஹ்மானும் , ‘பவர்ஸ்டார் ‘ பாபு ஆண்டனியும் நேருக்கு நேர் மோதும் மலையாளப் படம் ‘பேட் பாய்ஸ்’. இந்த ஓணம் பண்டிகை காலத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இப்படத்தை ஓமர் லூலூ இயக்கியுள்ளார். இவர், பிரியா வாரியரை ‘அடார் லவ்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர். அவர் இயக்கிய இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. படம் செப்டம்பர் 13 ஓணம் தினத்தன்று வெளிவருகிறது.
இதில் ரஹ்மான் மெக்காட்டு குளம் ஆன்டப்பன் என்ற கேரக்டரிலும், வெட்டு காடு பென்சன் என்ற கேரக்டரில் வில்லனாக பாபு ஆண்டனி நடிக்கிறார்.
இருவரும் ஒன்று சேருவது மிகவும் சந்தோஷம் அளிப்பதாக கூறிய பாபு ஆண்டனி, பழைய சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
“எண்பதுகளில் நான் சென்னையில் அலைந்த காலம்… அன்று இயக்குனர் ஜாம்பவான் பத்மராஜனின் ‘கூடேவிடே’ படத்தில் மம்மூட்டி, சுஹாசினி ஆகியோருடன் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக புகழ் உச்சியில் இருந்தார் ரஹ்மான். நானும் அன்று ரஹ்மானின் ரசிகன். வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்தது. இன்னொரு ஜாம்பவானான பரதன் இயக்கத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘சிலம்பு’ என்ற படத்தில். ஏதோ சைடு ரோல் என்று எண்ணி தான் பரதன் சாரிடம் சென்றேன். ஆனால் அவரோ நீ தான் ரஹ்மானுக்கு வில்லன் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தார். ரஹ்மான் அன்று பெரிய ஹீரோ. ஆள் பந்தாவாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் புது நடிகரான என்னோடு முதல் நாளே நண்பராக மாறி எனக்கு நடிப்பு டிப்ஸ் கொடுத்தார். தினமும் அவர் காரிலேயே என்னையும் அழைத்து செல்வார். எனது முதல் படமான சிலம்பு மாபெரும் வெற்றி பெற்று நானும் புகழ் பெற்றேன். அந்த நட்பு உணர்வும் மனித நேயமும் இன்று வரை ரஹ்மானுக்கு எள்ளளவும் குறையவில்லை.
அதன் பின் ‘பிளாக்’ என்ற படத்தில் நாங்கள் இணைந்து ஒரு நாள் மட்டும் நடித்தோம். இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேட் பாய்ஸில் அவர் நாயகனாக நடிக்க, நான் வில்லனாக நடிக்கிறேன். இது எனக்கு இரட்டிப்பு மகிழச்சி அளிக்கிறது.நான் இதில் வில்லனா நல்லவனா என்பது படம் வெளியான பின் நீங்களே சொல்லுங்கள். இந்த படம் ஓணம் பண்டிகை காலத்தில் மொழி பேதமின்றி எல்லோரும் ரசிக்கும் படியான பொழுது போக்கு படமாக இருக்கும்” என்றார்.