முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த படத்தில் கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்து மதத்தினரின் புனித நகரான காசி நகரத்தின் பின்னணியில் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் ‘பனாரஸ்’ நவம்பர் மாதம் 4-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடவிருக்கிறது.
தொடர்ந்து திரைப்பட வெளியீட்டில் வெற்றிகளை குவித்து வரும் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம், பான் இந்திய படமான ‘பனாரஸ்’ படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால், இந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

