‘பேச்சிலர்‘ சினிமா விமர்சனம்
Aடாகூடகாட்சிகளால் இளம் தலைமுறையின் ஹார்மோன்களை சூடாக்கிவிட்டு, என்ட் கார்டு போடும்போது கருத்து சொல்லும் ‘பேச்சிலர்.’
ஐ.டி. துறை பணியில் பர்ஸ் நிறைய சம்பாதித்து, மனம்போன போக்கில் வாழ்கிற ஒருவன், ஒரு பெண்ணுடன் ஆண்மையைப் பகிர்ந்து ‘அப்பா’வாகி, குடும்பத்தினருக்குப் பயந்து அதிலிருந்து தப்பிக்க நடத்தும் தகிடுதத்தமே பேச்சிலரின் ‘சதை’யோட்டம் மன்னிக்கவும் கதையோட்டம்… இயக்கம் சதீஷ் செல்வகுமார்
நாயகன் ஜி.வி. பிரகாஷுக்கு பழகிப்போன பாத்திரம். பாராட்டும்படி செய்திருக்கிறார். மொத்த படத்திலும் அவர் பேசும் வசனத்தை பக்கத்தில் எழுதிவிடலாம். குடிப்பதற்கும், தோழியுடன் இன்பத்தில் திளைப்பதற்குமே நேரம் சரியாக இருக்கும்படி காட்சிகள் வைத்திருப்பதால் வசனத்துக்கு அத்தனை அவசியமில்லை என இயக்குநர் நினைத்திருப்பார் போலிருக்கிறது.
நாயகி திவ்யபாரதி அழகாக இருக்கிறார். கருத்தரிக்கும் வரை கவர்ச்சியாக தெரிபவர், தனக்கு உடல்சுகம் தந்தவன் கருவைக் கலைக்கச் சொன்ன விநாடியிலிருந்து கிளைமாக்ஸ் வரை தனக்கு நடிக்கவும் வரும் என உணர்த்துகிறார்!
வர்மக்கலை வித்தகராக மிஸ்கின். இரண்டு காட்சிகளில் வந்தாலும் அவை மனதில் நிற்கிறது.
ஊடகவியலாளர் முபஷிர் ஒரு காட்சியில் வருகிறார். ஹீரோவுடன் வசனங்களால் மோதும் காட்சியில் கவனிக்க வைக்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைக்கிற பட்சத்தில் புகழ் வெளிச்சம் அவர் மீது ஃபோகஸாக வாய்ப்பிருக்கிறது!
முனீஸ்காந்த், பகவதி பெருமாள் (பக்ஸ்) என பரிச்சயமான நடிகர்களின் பங்களிப்பு பக்கா. ‘நக்கலைட்ஸ்’ டீமிலிருந்தும் சிலரது அட்டகாச அட்டனன்ஸ் உண்டு!
பாடல்களுக்கு நான்கு பேர் இசையமைக்க அதில் ஒருவர் பின்னணி இசைக்கு உழைப்பைக் கொட்ட ‘பட்சிகளாம் பறவைகளாம்’ கும்மிப் பாட்டு மட்டும் மனதை வருடுகிறது.
படத்தின் நீளம் 175 நிமிடங்கள். எடிட்டரின் பெயரை டைட்டிலில் சேர்த்த படக்குழு அவரிடம் வேலை வாங்க மறந்திருக்ககூடும்.
தன்னால் உருவான கருவை தனதில்லை என நிரூபிக்க ஒருவன் எந்தளவுக்கு இறங்குவான் என்பதற்கான ஆண்மையிழப்பு அட்ராசிட்டிகள் படத்தின் தனித்துவம்!
அந்த நடுவிரல் காட்டும் கடைசிக் காட்சிக்காக இயக்குநருக்கு ஸ்பெஷலாய் ஒரு பாராட்டு!

