‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.‘ சினிமா விமர்சனம்
தேர்தல் அரசியலை மையப்படுத்தி கலாய்ப்பும் கலகலப்புமாய் ஒரு படம்!
அந்த கிராமத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தொடர்ந்து எல்.எல்.ஏ. வாக ஜெயித்து, மக்களிடம் நற்பெயர் சம்பாதித்துள்ள ஆர். சுந்தராஜன் சில காரணங்களால் போட்டிலிருந்து விலகிகொள்ள, அவரது தம்பி வையாபுரியை தேர்தலில் போட்டியிடத் தூண்டி விடுகிறார்கள் சிலர். அவரும் தன் பலம் தெரியாமல் போட்டியிட்டு, தேர்தல் செலவுக்காக பணம், சொத்து என எல்லாவற்றையும் இழந்து தோல்வியைச் சந்திக்கிறார். பண பலமுள்ள படு அயோக்கிய ஆசாமி ஒருவர் தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆகிறார். அந்த எம்.எல்.ஏ. உடனடியாக படுகொலை செய்யப்பட்டு அவரது சடலம் காணாது போகிறது.
கொலையைச் செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? சடலம் காணாது போனது யாரால்? காணாது போன சடலம் கிடைத்ததா? அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதில்களே திரைக்கதை… படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பகவதி பாலா.
புதுமுக நாயகன் செல்வா இளம் ஹீரோக்களுக்கான அனைத்து அம்சங்களுடன் இருக்கிறார். போட்டோகிராபி தொழிலில் பணத்தையும் பெயரையும் சம்பாதிக்க தில்லுமுல்லு செய்து சிக்கித் தவிப்பது, ஆக்ஷன் காட்சிகளில் பறந்துப் பாய்ந்து சண்டையிடுவது, தேவையான ஏற்ற இறக்கங்களுடன் வசனம் பேசுவது என அவருக்கான நடிப்புப் பங்களிப்பில் நிறைவு.
வெற்றிலைப் பாக்கு மென்றபடி, பாவாடை தாவணியில் இளமை திமிர வலம் வருகிறார் நாயகி அனிதா. அவரது மெல்லிய ரவுடித்தனம் இழையோடும் தெனாவட்டுப் பேச்சும், கடன்காரர்களிடம்கொடுத்த பணத்துக்கு கறாராக வட்டி வசூலிக்கும் லாகவமும் ஈர்க்கிறது.
ஆதரவற்றோர் இல்லமொன்றின் நிர்வாகியாக நளினி. அவர் வருகிற காட்சியில் எம்.எல்.ஏ.வுக்கெதிராக பேசுகிற வசனங்களில் பறக்கிறது தீ.
ஆர். சுந்தராஜன், மீரா கிருஷ்ணன், வையாபூரி, கராத்தே ராஜா, பெஞ்சமின் என பரிச்சயமான நடிகர்களின் தேர்ந்த நடிப்பு காட்சிகளுக்குப் பலம் சேர்க்க, கொட்டாச்சியின் அச்சுப்பிச்சு காமெடி லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.
தேவாவின் இசையில் ‘பச்ச பச்ச தாவணி’, ‘நீ தாண்டா கெட்ட பையன்’ பாடல்களும், பாடலுக்கான காட்சியும் இதமான தென்றலாய் மனதை வருட, லஞ்சம் ‘லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்’ பாடலில் படத்தின் இயக்குநர் அதிரடியாய் ஆடுவது மெல்லிய சூறாவளியாய் நீள்கிறது!
‘ஒரு பெண் அழுதா ஆயிரம் காரணம் இருக்கும்; ஆனா, ஒரு ஆண் அழுதா அதுக்கு பெண்தான் காரணமா இருப்பா…‘ அங்கங்கே வந்துவிழும் வசனங்களின் வார்த்தைகளின் கூர்மை!
சேலத்தின் மண்மணம் மாறா இயற்கைச் செழுமையைச் சுற்றிச் சுழன்று கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறது பகவதி பாலாவின் கேமரா.
சண்டைப் பயிற்சி நேர்த்தி. எடிட்டர் தனது கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்.
விறுவிறுப்பான கதையோட்டம், பரபரப்பான காட்சிகள் என ஸ்கெட்ச் போட்டுக் களமிறங்கிய இயக்குநர் திரைக்கதைக்காகவும் சற்றே கூடுதலாய் மெனக்கெட்டிருந்தால் எம்.எல்.ஏ. அண்ணன் தியேட்டர் எனும் தொகுதியில் பெரியளவில் வென்றிருப்பார்!