இதை செய், அதை செய்யாதே… இதன்படி நட, அதன்படி நடக்காதே… இப்படி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்பவர்கள் யாராக இருந்தாலும் நம்முடைய அப்பா அம்மாவாகவே இருந்தாலும் அதையெல்லாம் அப்படியே கடைப்பிடிப்பது மடத்தனம். எதையும் காலத்துக்கேற்ப அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுத்துவதே புத்திசாலித்தனம். இந்த கருத்தை வலியுறுத்தும் விதத்திலான கதையோட்டத்தில் ‘பியூட்டி.’
அழகை மையப்படுத்தி வந்திருக்கும் படங்களில் அழுத்தமான பதிவு!
கதைப்படி படத்தின் ஹீரோ தன் அப்பாவின் அழகான இரண்டாம் தார மனைவியால் சிலபல துன்பங்களுக்கு ஆளானவன். அவனுடைய அப்பாவும் அந்த மனைவியால் அவளது அழகால் மனநிம்மதியை தொலைத்தவர். அந்த பாதிப்பால் தன் மகனுக்கு அழகான பெண்ணை மனைவியாக்கிக் கொண்டால் ஆபத்து; நீ அழகில்லாத பெண்ணை கல்யாணம் செய்துகொள்’ என அறிவுரையை அவிழ்த்து விடுகிறார்.
அப்பாவின் பாசப்பிணைப்பில் இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும் அந்த மகன் அப்பாவின் ஆலோசனையை ஏற்று தீக்காயங்களால் முக அழகு சிதைந்த ஒரு பெண்ணுக்கு கணவனாகிறான். ஒருகட்டத்தில் அவள் அதிநவீன சிகிச்சை மூலம் முகத்தின் தீக்காயங்களை அகற்றி அழகான தோற்றத்தைப் பெறுகிறாள்.
அப்படியொரு சம்பவம் நடக்கும் என எதிர்பாராத நாயகன் அதிர்ச்சியின் உச்சத்துக்கு போகிறான். அவளது அழகை சிதைக்கும் முயற்சியில் இறங்குகிறான்…
அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளும் அதன் விளைவுகளுமே பரபரப்பான திரைக்கதை… இயக்கம் கோ.ஆனந்த் சிவா
வேட்டி – சட்டை, முறுக்கு மீசை என கம்பீர தோற்றத்துடன், தான் வசிக்கும் கிராமத்து மக்களின் செல்வாக்கை சம்பாதித்தவராக ஒரு வேடம், இந்தக் கால இளைஞனாக மற்றொரு வேடம் என இரண்டு கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிற நாயகன் ரிஷி இரண்டிலும் பாஸ்மார்க் போடும்படி நடித்திருக்கிறார்!
லட்சணமாக இருக்கிற கரினா ஷா பாடல் காட்சியில் கூடுதல் அழகாக வெளிப்படுகிறார். தன்னை நேசிப்பவனே தன் அழகை சிதைக்க திட்டமிடுவதை அறிந்து மனம் உடையும் காட்சியில் நெகிழ வைக்கிறார்!
காயா கபூர், மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்டோரின் நடிப்புப் பங்களிப்பு நிறைவு.
நாயகனுக்கு நண்பனாக வருகிற ஆதேஷ் பாலாவும் கவனிக்க வைக்கிறார். சிங்கமுத்துவை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்!
இலக்கியன் இசையில், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., தமிழ்முருகன் ஆகியோரின் பாடல்கள் மனதுக்கும் பாடல் காட்சிகள் கண்களுக்கும் இதம்!
ஆர்.தீபக் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம்!
கலை இயக்குநரின் பங்களிப்பில் வித்தியாசமான பொருட்களால் சைக்கோதனத்தின் வெளிப்பாடாக அலங்கரிப்பட்ட நாயகனின் வீடு கவனிக்க வைக்கிறது!
பெண்ணுடைய அழகு அவளுக்கும் அவளைச் சார்ந்தோருக்கும் எந்தெந்த விதங்களில் ஆபத்தாக மாறுகிறது என்பதை பல படங்களில் வெவ்வேறு விதமாக பார்த்துள்ள நமக்கு, அதே அழகு வித்தியாசமான ஆபத்தை உருவாக்குகிற ‘பியூட்டி’யின் கதைக்களம் புது அனுபவம்!


