வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கஸ்டடி.’ தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் வரும் மே மாதம் 12-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ‘ராஜா லைவ் இன் கான்செர்ட்’ நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றுள்ள இளையராஜாவை ‘கஸ்டடி’ படக்குழுவினர் அவரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இளையராஜாவுடன் நடந்த சந்திப்பு குறித்து நாகசைதன்யாவிடம் கேட்டபோது, ”மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் அவ்வளவு பெரிய புன்னகை பிறந்தது! அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெஃபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது எனது ‘கஸ்டடி’ படத்துக்கு அவரே இசையமைத்திருக்கிறார். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்’’ என்றார்.
கஸ்டடி படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க பிரியாமணி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், பிரேமி விஷ்வநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்த படத்தை தயாரித்துள்ளார். படம் உயர்தரமான தொழில்நுட்ப தரத்துடன் உருவாகியுள்ளது. அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.