Home சினிமா தந்தைக்கு வயது 92. ‘சித்ராலயா’ கோபுவின் மகன் ‘காலச்சக்கரம்’ நரசிம்மாவின் உணர்வுபூர்வ கட்டுரை

தந்தைக்கு வயது 92. ‘சித்ராலயா’ கோபுவின் மகன் ‘காலச்சக்கரம்’ நரசிம்மாவின் உணர்வுபூர்வ கட்டுரை

‘சித்ராலயா’ கோபுவின் மகன் ‘காலச்சக்கரம்’ நரசிம்மா முகநூலில் ஒர் மகனாக அன்றி, மகாரசிகனாக, சித்ராலயா கோபுவுக்கு நான் செய்யும் பதிவு என்று குறிப்பிட்டு உணர்வுபூர்வமாக எழுதியுள்ள கட்டுரை இது…
நகைச்சுவை எழுத்தாளர், பேச்சாளர், வசனகர்த்தா, இயக்குநர் சித்ராலயா கோபுவுக்கு 2.7.2023 நாளை ஞாயிற்றுக்கிமை வயது 92 தொடக்கம். (ஜூலை 2 1932 வில் பிறந்தார்.)
இயக்குனர் ஸ்ரீதர் விக்ரமாதித்யன் என்றால், கோபுதான் பட்டி!
ஸ்ரீதர், கிருஷ்ணதேவராயர் என்றால், கோபு தெனாலிராமன்.!
ஸ்ரீதர் அக்பர் என்றால், கோபு பீர்பல்.
இந்த நெருக்கம், பள்ளி வகுப்பு நான்கில் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும்போதே, ஆண்டு விழாவில் மனோகரா நாடகம் போட்டு, மனோகரனாக ஸ்ரீதர்-ம், காமெடி வேடத்தில் கோபுவும் நடித்தார்கள்.
மிமிக்ரி செய்வதில் வல்லவர் கோபு, பல திருமணங்களில், நண்பர் கடுகு அகஸ்தியனுடன் சேர்ந்து மிமிக்ரி செய்ய, ஒரு திருமணத்தில் அவரது மிமிக்ரியை பார்த்த நடிகை டி ஏ மதுரம், அவரை திரைப்பட உலகிற்கு அழைத்தார். ஆனால கோபுவுக்கு அப்போது திரைப்படங்களில் சேரும் மனநிலையில் இல்லை. காரணம், அவரது குடும்பம் வைதீக குடும்பம், தந்தை பள்ளி ஆசிரியர்.
நண்பன் ஸ்ரீதருடன், நட்பு பலப்பட, இருவருக்கும் கலையார்வம் பற்றிக்கொண்டது. பள்ளி நாடகங்களில் இருந்து ஒரு லெவல் அதிகமாக உயர்ந்து, டிராமா ட்ரூப் ஒன்றை தொடங்கி, செங்கல்பட்டில் ‘மிஸ் மைதிலி’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்கள். மன்மதனை போன்று இருந்த ஸ்ரீதர் ஹீரோ. நகைச்சுவையால் விலா நோக சிரிக்க வைத்த கோபு, காமெடியன். அப்போது புகழ் பெற்றதுதான் ஸ்ரீதர்-கோபு என்கிற பெயர்.
நடிகர் சோவின் தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் கோபுவின் மிமிக்ரி திறமைகளை பார்த்து, அவரை காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய அழைத்தார்.
காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கு எதிராக கோபு பிரச்சாரம் செய்ய, அதை அண்ணாவே அருகில் வந்து நின்று கேட்டது பெரிய காமெடி. காரணம், கோபுவின் காஞ்சிபுர திருக்கச்சி நமபி தெரு வீட்டிற்கு நான்காவது வீடுதான் திராவிட நாடு, ஆபிஸ். வாசல் திண்ணையில் அண்ணா உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்க, கோபு அவரை சென்று கலாட்டா செய்து கொண்டிருப்பார். ”நம்ம தெரு பையன்… தமாஷா பேசறான்” – என்று உதவியாளர் அரங்கண்ணலிடம் கூறினார், அண்ணா.
ரத்தபாசம் மூலம் ஸ்ரீதர் திரைப்படத்தில் நுழைந்துவிட, கோபு இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக மாறினார். அவரது முதல் பாலிசியை வாங்கியவர் யார் தெரியுமா. நடிகை ராஜசுலோச்சனா ! அப்போது கோபுவுக்கு சினிமாவில் சேரும் எண்ணம் சிறிதும் கிடையாது. அதன்பின் ஸ்ரீதர் கல்யாண பரிசு இயக்க போவதாக அறிவித்ததும், கோபுவிடம் வந்து, வலுக்கட்டாயமாக அவர் பணிபுரிந்து கொண்டிருந்த காவாலி பிரதர்ஸ் என்கிற ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியில் இருந்து அவரை ராஜினாமா செய்ய வைத்து, அவரை ஹைஜாக் செய்து கொண்டு போனார்.
கோபு முதன் முதலாக எழுதிய வசனம் கல்யாணபரிசு படத்தில் தங்கவேலு-எம் சரோஜா காமெடி. மன்னார் அண்ட் கம்பெனி, எழுத்தாளர் பைரவன். நகைச்சுவை. கோபுவின் உறவினர் ஒருவர் நெல்லூரில் மன்னார் அண்ட் கம்பெனி என்று ஒன்று வைத்திருக்க, அவர்களுக்கு கோபுவின் மீது கோபமாம். எங்கள் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி காமெடி செய்து விட்டாயே என்று.
அடுத்த படம் நெஞ்சில் ஓர் ஆலயம். சற்று செண்டிமெண்ட் படம் என்பதால் காமெடிக்கு வாய்ப்பு கம்மி என்றாலும், கோபுவும் நாகேஷும், மனோரமாவும் சந்தித்த முதல் படம். அதன் பிறகு நாகேஷ், மனோரமா இல்லாமல் சித்ராலயா கோபுவின் படங்கள் வெளிவரவில்லை.
அதன் பிறகு கோபுவின் வாழ்க்கையில் பெரும் திருப்பதையும் ஏற்றத்தையும் உண்டு செய்த காதலிக்க நேரமில்லை படம்.
ஓஹோ ப்ரோடுக்ஷன்ஸ் என்ற அவரது நகைச்சுவை பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமாகியது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை அவரையே எழுத வைத்த ஸ்ரீதர், தனது பெயருடன் ஸ்ரீதர்-கோபு என்று டைட்டில்ஸ் தொடக்கத்திலேயே போட்டு, நண்பர் கோபுவை கவுரவித்தார்.
இதற்கிடையே, கோபுவுக்கு பத்திரிக்கையாளர், எழுத்தாளர், கமலாவுடன் திருமணம் நடந்தது. தான் பத்திரிக்கையாளர் என்பதை கமலா மறைக்க, தான் திரைப்படத்தில் சேர்ந்ததை கோபு மறைக்க, இருவருக்கும் திருமணம் நடந்து, பிறகு குட்டு வெளியிட்டது. தனது திருமண வாழ்க்கையை வைத்துதான் கோபு கல்யாண பரிசு காமெடியை எழுதினர்.
சித்ராலயா நிறுவனத்தின் ஊட்டி வரை உறவு, நெஞ்சிருக்கும் வரை, உத்தரவின்றி உள்ளே வா போன்ற அத்தனை படங்களிலும் எழுதி, இணை இயக்குனராக பணியாற்றிய சித்ராலயா கோபு, ஸ்ரீதர் பணியாற்றாத வெளிப்படங்களிலும் கதை திரைக்கதை வசனத்தை எழுத தொடங்கினார். ஜெமினி நிறுவனத்தின் ஜெம் மூவிஸ் காக சாந்தி நிலையம், நில் கவனி காதலி, பாபு மூவிஸ் வீட்டுக்கு வீடு, கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, போன்ற படங்களுக்கு எழுதினார்.
ஸ்ரீதர் அவளுக்கென்று ஓரூ மனம் படத்தில் பிசியாக இருந்ததால், உத்தரவின்றி உள்ளே வா படத்தை முழுவதுமாக கதை, திரைக்கதை வசனம் எழுதி, தயாரிப்பு பொறுப்புகளை கவனித்தது சித்ராலயா கோபுதான்.
யூனிட்டி க்ளப் சார்பாக பல மேடை நாடகங்களை எழுதி இயக்கிய சித்ராலயா கோபுவின் புகழ் பெற்ற காசேதான் கடவுளடா நாடகம், ஏ வி எம்மால் வாங்கப்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட, அதில் நாடகத்தில் புகழ் பெற்ற சாமியார் வேடத்தை நாகேஷ் துண்டு போட்டு ரிசர்வ் செய்திருந்தார். ஆனால், மெட்றாஸ் பாஷை பேசி நடிக்க தேங்காய் ஸ்ரீனிவாசன்தான் சரி என்று கோபுவுக்கு தோன்றியது. உத்தரவின்றி உள்ளே வா படத்தில் நடித்த போதே தேங்காய், கோபுவின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஏவிஎம் நாகேஷை போடலாம் என்று சொல்ல, கோபு தேங்காய் பேரை சிபாரிசு செய்ய, அதை கேள்விப்பட்ட நாகேஷ்ஒரு வருடம் கோபுவுடன் பேசாமல் இருந்து, பிறகு சமாதானம் அடைந்தார்.
சித்ராலயா சார்பாக, அவர்களது இந்தி படப் பணிகளை கவனிக்க கோபுவைதான் அனுப்புவார், ஸ்ரீதர்.
ஷங்கர் ஜெய்கிஷன் இடையே பிளவு ஏற்பட, ராஜ்கபூரை அழைத்து வந்து, அவர்களிடையே ஒரு சமரச திட்டத்தை செயல்படுத்தியது, சித்ராலயா கோபுதான்.
‘ஷங்கரும் ஜெய்கிஷனும் பேச வேண்டாம். ஆனால் பிராண்ட் பெயரை அப்படியே வைத்து, ஆளுக்கு மூன்று பாடல்கள் என்கிற விதத்தில் இசை அமைக்கலாம் ”– என்று அவர்களுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு . அதன்பின்தான் தில் ஏக் மந்திர படம் இசை அமைக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதே பாணியில்தான் எம்எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி இடையே தகராறு வந்தபோது, சமரச திட்டத்தை கோபு சொல்ல, ஆனால் ராமமூர்த்தி பிரிந்து போவதிலேயே குறியாக இருந்தார்.
லட்சுமி காந்த் ப்யாரேலால், மஹ்மூத், ஓம்பிரகாஷ், ராஜ்கபூர், அவர் மனைவி கிருஷ்ணா கபூர், மீனாகுமாரி, கல்பனா, ராஜ்குமார் மனோஜ்குமார் , போன்றவர்கள் கோபுவுடன் நெருங்கி பழகினார்கள்.
‘பாட்டி சொல்லை தட்டாதே படத்திற்கு பிறகு திரைப்படங்களுக்கு எழுதுவதை நிறுத்திய சித்ராலயா கோபு, சின்ன திரையில் புகுந்து, சன் டிவிக்காக, விஆர்ஜி ராஜி நிறுவனத்துடன் சேர்ந்து, சன் டிவிக்காக பல தொடர்களை தயாரித்தார். அவர் மனைவி கமலா சடகோபனின், சுவர் நாவலை தொடராக தயாரித்தார். தூர்தர்ஷனுக்காக சாவியின் வாஷிங்டனில் திருமணம் தொடரை நாசா, வெள்ளை மாளிகை, போட்டோமாக் நதி, சுதந்திர தேவி சிலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார் சச்சு நீலு நடித்த அந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது
.
வெண்ணிறாடையில் ஜெயலலிதாவையும், ஸ்ரீகாந்தையும், வெண்ணிறாடை நிர்மலாவையும், காதலிக்க நேரமில்லையில் காஞ்சனாவையும், வெள்ளை மனசு படத்தில் ரம்யா கிருஷ்ணனையும், தென்றலே என்னை தொடு படத்தில் ஜெயஸ்ரீயையும், தேர்ந்தெடுத்ததில், சித்ராலயா கோபுவுக்கு பங்கு உண்டு.
ராஜ்கபூரின் அபிமானத்துக்கு உரிய கோபு பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, அவருக்காக தான் வரப்போவதாக சொல்லி. ஒரு விமானத்தையே தாமதப்படுத்தினார், ராஜ்கபூர்.
ராஜ்கபூர் வரப்போகிறார் என்று, பயணிகள், பரவசத்துடன், தாமதத்தை பொருட்படுத்தாமல் காலியான ஒரு சீட்டையே பார்த்துக்கொண்டிருக்க, வேட்டி சட்டையில் சாதாரணமாக ஏறி சகல மரியாதையுடன், விமான பணிப்பெண்களால் அழைத்து வரப்பட்டு, அந்த சீட்டில் அமர்த்தப்பட்ட, சித்ராலயா கோபுவை, விமான பயணிகள் கடைசி வரையில் பார்த்து பற்களை நற நற என்று கடித்து கொண்டு வந்த கதை உண்டு.
சாவித்திரி, பத்மினி தொடங்கி, ரோகிணி, ரம்யா கிருஷ்ணன் வரையில், சிவாஜி தொடங்கி பாண்டியராஜன் விக்ரம் வரையில், டி ஏ மதுரம் தொடங்கி கோவை சரளா வரையில், சாரங்கபாணி, டிஆர் ராமச்சந்திரன் தொடங்கி சின்னிஜெயந்த் வரையில் நான்கு தலைமுறை திரைப்படத்துறையினருடன் பணியாற்றி இருந்தாலும், அந்த பெருமைகள் எதைப் பற்றியும் பேசாமல் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் உலக கோப்பையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்
1992 ல் கலைமாமணி விருதை வென்றவர், தனது குடும்பத்துடன், அமைதியாக திருவான்மியூரில் வசித்து வருகிறார். 92 வயதில் தனது வேலைகளை தானே பார்த்துக்கொண்டு, கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு, பொழுதை கழிக்கிறார்.
வீட்டில் சர்ச்சைகள் வந்தால் கூட, நகைச்சுவையாக பேசி சிரிக்க வைக்கும், சித்ராலயா கோபு, தனது 92 வயதை, நாளை ஜூலை 2 தேதி கொண்டாடுகிறார்.
எல்லோரும் சிரித்துக்கொண்டே பிரச்னைகளை அணுகுவோம். பனிபோல அவை, கரைந்து போய்விடும். சிரிப்பு நமது ஆயுளை நீடிக்க செய்யும் என்பதற்கு அடையாளமாக உள்ளது, திரு சித்ராலயா கோபுவின் வாழ்க்கை.
புகழ் பெற்ற பெற்றோர்களின் மகனாக பிறப்பது ஒரு சவாலான விஷயம். புகழ் பெற்றவருக்கு பிள்ளையாக பிறக்கலாம். ஆனால் அவரை மீறி வளர வேண்டும் என்பது பெரும் சவால். நான் இரண்டு புகழ் பெற்ற ஆலமரங்கள் அடியில் தோன்றியவன். என்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, பெரும் சவாலை சந்தித்தேன்.
எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது. !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்