‘கடாவர்‘ சினிமா விமர்சனம்
ஹீரோயின் கதையின் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எப்போதாவது வருவதுண்டு. இப்போது ‘கடாவர்.’ கதைநாயகி ஏற்றிருப்பது இதுவரை எந்த ஹீரோயினும் ஏற்காத பாத்திரம் என்பது இந்த படத்தின் தனித்துவம்!
அமலாபால் தடயவியல் துறை நிபுணர். பிணங்களை போஸ்ட் மார்ட்டம் செய்கிற, அது குறித்து மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கிற (Pathologist) டாக்டர். அவர் போஸ்ட் மார்ட்டம் செய்யும் அந்த இளம்பெண்ணின் உடலில் இதயம் இல்லாமலிருப்பதைக் கண்டு அதிர்கிறார். ‘குற்றம்; நடந்தது என்ன?’ என ஆராய்கிறார்.
இதயம் இடம் மாறியதன் பின்னணியில் இருப்பவர்களை தனது மூளையாலும் போலீஸின் ஒத்துழைப்பாலும் கண்டறிகிறார். இது கதையின் முன்பாதி…
குற்றவாளிகள் யார், அவர்களுக்கு அமலாபால் அருள்கிற தண்டனை என்ன என்பதெல்லாம் மிச்சம்மீதி. கதை: அபிலாஷ் பிள்ளை, இயக்கம்: அனூப் பணிக்கர்
ஆண்களைப் போல் கிராப் ஹேர் ஸ்டைல்; சிம்பிளான பேண்ட், சர்ட், டாப்ஸ் என படு ஸ்மார்ட்டான லுக்கில் அமலா பால். பிணவறையின் துர்நாற்றத்துக்குப் பழகிக் கொண்டு அங்கேயே சாப்பிடுவது, குற்றவாளிகளை கண்டறியும் விஷயத்தில் காவல்துறைக்கே ஆலோசனை சொல்லி வழிநடத்துவது, குற்றவாளியைக் கண்டறிய தான் நியமித்த பெண் அசம்பாவிதத்தில் சிக்கியபின் குற்றவுணர்ச்சியில் துடிப்பது, ஆவேசப்படுவது என சுற்றிச் சுழல்கிறார். தேர்ந்த நடிப்புக்காக அமலா பாலுக்கு பாராட்டுக்கள். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகியிருப்பதற்கு வாழ்த்துகள்!
கதையின் மையப்புள்ளிகளாக வருகிற திரிகுன் – அதுல்யா ரவி ஜோடியின் காதலும் காதல் சார்ந்த காட்சிகளும் ஈர்க்கிறது.
‘ராட்சசன்’ வினோத் சாகருக்கு கனமான பாத்திரம். கவனிக்க வைக்கிறார்.
ரித்விகாவின் பங்களிப்பும் பலம்; அவரது முடிவு பரிதாபம்.
ஹரீஷ் உத்தமன், இயக்குநர் வேலு பிரபாகரன் என இன்னபிற பாத்திரங்களில் வருபவர்களும் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
நடக்கும் சம்பவங்களுக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கும் ரஞ்சன் ராஜ், பிணவறையை தத்ரூபமாக உருவாக்கியிருக்கும் கலை இயக்குநர் என தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டு!