சமூக விழிப்புணர்வுக்கான சரியான படம்; சரியான நேரத்தில்! கல்விக்கடன் கிடைக்காமல் பாதிக்கப்படுகிற, கிடைத்தும் வாழ்க்கையைத் தொலைக்கிற மாணவ, மாணவிகளின் வலிகளை கண்ணீரோடு பதிவு செய்துள்ள ‘காலேஜ் ரோடு.’
பெரும் பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடிகிற கல்லூரியில் மாணவனாக சேர்கிற லிங்கேஷ், அங்கு கிடைத்த நண்பர்களோடு ஜாலியாக பொழுதைக் கழிக்கிறார். வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான மென்பொருள் கண்டுபிடிக்கும் முயற்சியையும் தொடர்கிறார். அதில் வெற்றியையும் எட்டுகிறார்.
இது ஒருபுறமிருக்க, சுற்றுவட்ட வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவம் நடக்க பரபரப்பாகிறது கதைக்களம்.
கொள்ளையர்கள் யார்? கொள்ளைக்கான காரணம் என்ன? விடை தெரியும்போது இதயம் அதிரக்கூடும்; கண்கள் கலங்கக்கூடும்!
சொகுசு கார், காஸ்ட்லியான ஹாஸ்டல் ரூம் என பணவசதியில் மிதப்பதாகட்டும், அதற்கு நேர்மாறான சூழலில் வசதியற்ற வாழ்க்கையில் கல்விக்கடன் கிடைக்காமல் நட்பு வட்டத்தில் சிலரைப் பறிகொடுத்து மனம் நொறுங்குவதாகட்டும், மாணவச் சமூகத்துக்கு நேரும் அநீதிக்கெதிராக கொதித்துக் கொந்தளித்து புதுவழியில் தீர்வு காண்பதாகட்டும் அத்தனை ஃபிரேமிலும் லிங்கேஷின் நடிப்பில் நல்ல தேர்ச்சி; முதிர்ச்சி!
கிளைமாக்ஸ் காட்சியில் நண்பனை காப்பாற்றத் துடிப்பதில் நட்பின் ஆழத்தை உணர்த்துகிறார் ஆனந்த் நாக்.
‘என்ன இவன் வேலிலேருந்து ஓணான் எட்டிப் பார்க்கிற மாதிரி பார்க்கிறான்’, ‘பாடிய விட தாடி பெருசாகிட்டே போவுது’, ‘நாம நாசமா போகப்போறோம்; சார் நாசாவுக்கு போகப்போறார்’ என வசனங்களால் நாடி நரம்புகளுக்கு கலகலப்பு மூட்டுகிறார் நண்பர்களில் ஒருவராக வருகிற அந்த தாடிக்கார தம்பி!
மோனிகா, பொம்முலெஷ்மி என கதாநாயகிகள் இருவர். அவர்களை சதைக்கு பயன்படுத்தாமல் கதைக்குப் பயன்படுத்தியிருக்கிறது திரைக்கதை!
தாடி வைத்த காவல்துறை உயரதிகாரி, மினிஸ்கர்ட்டில் வருகிற லேடி போலீஸ்… சினிமாவில் மட்டுமே அத்தனையும் சாத்தியம். அந்த காவல்துறை உயரதிகாரி ‘இமிடியட்லி’ என எத்தனை முறை சொன்னார் என படம் பார்ப்பவர்களுக்கு போட்டி வைத்து பரிசு கொடுக்கலாம்!
அலட்டலற்ற பின்னணி இசையை தந்திருக்கிற ஆப்ரோ, ‘இந்த இளமை’, ஏதேதோ ஆச்சே என்னுள்ளே’ பாடல்களில் இதம் சேர்த்திருக்கிறார்!
இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் கதைக்களம் அமைத்ததற்காக, அந்த களம் ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்வுக்கான அடித்தளமாக இருப்பதற்காக, கல்வி நம் உரிமை எனஅடித்துச் சொல்லியிருப்பதற்காக இயக்குநர் ஜெய் அமர்சிங்கை கட்டியணைத்துப் பாராட்டலாம்!
காலேஜ் ரோடு – கல்விக்கடனுக்கு முயற்சிக்கிற அனைவரும் பார்க்க வேண்டிய படம்; பாடமும் கூட!