திரைப்படங்கள் எடுப்பதே சவால் என்றால் வெளியிடுவது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலகட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர்.
’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புமே 29; 2025 அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் மே 30; 2025 மாலை 3 மணி வரை நடைபெறும். 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள்.
இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறவுள்ளது.
இப்படத்தின் அறிமுக விழா கடந்த மே 28; 2025 அன்று சென்னை பிரசாத் ப் தியேட்டரில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது புதிய முயற்சி மற்றும் 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முழுமையாக முடித்து திரையிடும் சாத்தியக்கூறுகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.
இயக்குநர் பிக்கய் அருண் பேசுகையில், “7 வருடங்களாக மீடியாவில் பணியாற்றியிருக்கிறேன். அதை சொல்வதற்கு நான் பெருமைக் கொள்கிறேன். இரண்டு தொலைக்காட்சிகளில் நேர்காணல் செய்யும் பணியை செய்து வந்தேன். அந்த விசயங்கள் இப்போது என் முன்பு நிற்கும் போது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. எனவே பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதை நிச்சயம் செய்து முடிப்போம்.
இதற்காக நான் ஒரு வருடமாக உழைத்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராஜ்குமார் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் முதலீடு செய்துள்ளார். இப்படி ஒரு படத்தை தயாரிக்கும் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கமலகுமாரி ஆகியோருக்கு நன்றி. இப்படிப்பட்ட ஒரு புரொஜக்ட்டை பற்றி அவரிடம் நான் சொன்ன போது, என்னிடம் கதையை பொறுமையாக கேட்டார். அப்போது அவர் வேறு ஒரு படம் தொடங்கி விட்டார். அதன் பிறகு நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. பிறகு இந்த படம் குறித்து அவரிடம் சொன்ன போது, ஒரு நாள் டைம் கேட்டார். அதன் பிறகு பட்ஜெட் கேட்டார், அவர் ஒரு பட்ஜெட் சொன்னார், அதில் பண்ண முடியும் என்று சொன்ன, உடனே எனக்கு ஊக்கம் கொடுத்து பெரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவர் இல்லை என்றால், இந்த படம் இல்லை.
இந்த படத்திற்காக நான் நிறைய ஆய்வு செய்திருக்கேன். 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடிப்பது என்பது சாத்தியமே இல்லை. அப்படி என்றால் நான் எப்படி செய்வேன்? என்ற கேள்வி தோன்றும். அதற்கு தான் ஆய்வு மேற்கொண்டேன். பல துறைகளில் பணியாற்றினேன், பல வேலைகளை எப்படி குறுகிய காலக்கட்டத்தில் செய்யலாம், என்று ஆய்வு செய்தேன். பாடலாசிரியாக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். பாடல்கள் பாடியிருக்கேன், ராப் பாடகாரானேன். பிறகு ஐடி துறையில் பணியாற்றினே. பிறகு படிக்க தொடங்கினேன். ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து கத்துக்கிட்டேன். ஒளிப்பதிவாளரிடம் இருந்து எப்படி வேலை வாங்கலாம், லைட்டிங் உள்ளிட்ட பல விசயங்களை அவர்களுடன் என்னால் ஆலோசிக்க முடியும்.
இந்த மேடையில் நான் சொல்ல விரும்புவது, செய்ய முடியாத ஒரு விசயத்தை செய்து முடித்து சாதிக்கப் போகிறோம். அது எப்படி? என்பதற்கான அனைத்து பணிகளையும் தயார் செய்து வைத்திருக்கிறோம். நான் முழு கதையையும் என் மூளையில் வைத்திருக்கிறேன். பிராம்டிங் மூலம் காட்சிகளை விவரிக்கப் போகிறேன். டப்பிங் பண்ண முடியாது, என்பதால் பூம் மைக் போட்டு லைவாக சவுண்ட் ரெக்கார்டிங் பண்ண முடிவு செய்திருக்கிறோம். சவுண்ட் ரெக்கார்டின் பண்ணும் போது நாய்ஸ் வந்தால், அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம், என்று யோசித்து அதற்கான சில வேலைகளை செய்ய உள்ளோம். அதுபோல் ஒளிப்பதிவும் தான். 3 கேமராக்களை வைத்து எடுக்க இருக்கிறோம். லைட்டிங், எப்படிப்பட்ட கேமரா என்று அனைத்திலும் சரியான தெளிவோடு இருக்கிறோம். இதை கின்னஸ் ரெக்கார்ட்ஸிடம் எடுத்துச் செல்லும் போது, அவர்கள் இப்படி ஒரு கேட்டகிரி இல்லை, என்று சொன்னார்கள். அதனால் தான், நோபல் விருதுக்கு எடுத்து சென்றோம். அவர்கள் இதை கேட்டதும், இது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருக்கிறது, இதை செய்யலாம் என்று சொன்னார்கள். அதே சமயம், இது சாத்தியமா, இதை எப்படி செய்யலாம் என்று கேட்டார்கள். அதேபோல் அவர்கள் இந்த துறை சார்ந்தவர்களிடம் இது குறித்து கேட்டு இது சாத்தியம், நீங்க சொன்னது உண்மை, ஆனால் இதை செய்ய முடியுமா தெரியவில்லை. நீங்கள் முடித்தால் உங்களுக்கு சான்றிதழ், வழங்குகிறோம், என்று சொல்லியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடத்தப்படும் அதே நாளில் எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கே வரவைத்து அனைத்து பணிகளையும் அங்கேயே செய்ய முடிவு செய்திருக்கிறோம். இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்டால், சாத்தியம் முடியும், என்று இன்று சொல்கிறேன். இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு உங்களை சந்திக்கிறேன், நன்றி” என்றார்.
படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சீகர் ராஜ்குமார், “தூவல் மற்றும் எக்ஸ்ட்ரீம் படங்கள் மூலம் உங்களை சந்தித்திருக்கிறேன். எக்ஸ்ட்ரீம் படம் முடிந்த பிறகு அருண் என்னை சந்தித்தார். இந்த படம் பற்றி சொன்னார். நாங்கள் டிரையினிங் கம்பெனி நடத்துகிறோம். கார்ப்பரேட் பணியாளர்களுக்கு மெண்டார் செய்வோம். எனவே, எங்களுக்கு எதாவது ரிஸ்க் எடுக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் அருண் இந்த கதையை சொன்ன போது, நானும் என் மனைவியும் ஆலோசனை செய்துவிட்டு அவரிடம் பேசினேன். அப்போது எதை எப்படி செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது, அவர் சில விசயங்களை மிக தெளிவாக கூறினார். மேலும், சிலரை சந்திக்க வைத்தார், அவர்களிடம் பேசும் போது சிலர் பயந்து விட்டார்கள். ஆனால், இளைஞர்களுடன் இணைந்த போது அவர்கள் செய்யலாம் என்று எங்களுடன் தைரியமாக இணைந்தார்கள். அதேபோல் நடிகர்களும் செய்யலாம் என்று எங்களுடன் இணைந்துள்ளனர். தூங்காமல் வேலை செய்யப் போகிறோம்.
இதை எப்படி செய்யப் போகிறோம், என்று எங்களுக்கும் இதுவரை தெரியவில்லை. கடவுளிடம் தான் இருக்கிறது. ஆனால், எங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குழுவினரும் உற்சாகமாக இருக்கிறார்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் செய்யலாம் சார், என்று சொல்கிறார்கள். உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் நிச்சயம் செய்வோம். ஏற்கனவே இரண்டு படங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தீர்கள். அதேபோல், இப்படி ஒரு சாதனை முயற்சிக்கு நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம்” என்றார்.
ஒரு நாளில் படப்பிடிப்பு முடித்து, அடுத்த நாள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிப்பது சாத்தியமா? மற்றும் எடிட்டிங் செய்து ரெண்டரிங் ஒரு நாளில் முடியுமா? உள்ளிட்ட பல கேள்விகளை நிருபர்கள் படக்குழுவினரிடம் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு இயக்குநர் பிக்கய் அருண் பதில் அளிக்கையில்,
”நீங்க சொல்வது உண்மை தான். எடிட்டிங் செய்து விடலாம், ஆனால் அதை அவுட் எடுக்க ரெண்டரிங் போட்டால் நேரம் அதிகம் ஆகும். அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளை ரெண்டரிங் எடுப்பதும் அதிகம் நேரம் பிடிக்கும். ஆனால், அவற்றை குறுகிய நேரத்தில், வேகமாக செய்வது எப்படி, அதற்காக எத்தகைய சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டும், என்பதை நாங்கள் ஆராய்ந்து, அதற்கான சரியான தொழில்நுட்பங்களை தேர்வு செய்து வைத்திருக்கிறோம். அது என்ன? என்பதை இங்கு சொல்ல முடியாது. காரணம், இதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த இடத்தில் அதை சொல்லிவிட்டு, பிறகு வேறு யாராவது அதை பயன்படுத்தி விட கூடாது அல்லவா அதற்காக தான்.
இது சாத்தியம் இல்லாத விசயம் தான், ஆனால் அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை சரியான முறையில் திட்டமிட்டிருக்கிறோம். திகில், ஃபேண்டஸி, மிஸ்டரி என மூன்று ஜானர்களைக் கொண்ட படமாக இருக்கும். திகிலில் தொடங்கி ஃபேண்டஸியாக உருவெடுத்து மிஸ்டரியாக முடிவடையும். படத்தில் ஒரு பாடல் இருக்கிறது, முடிந்தால் அதை படமாக்குவோம், இல்லை என்றால் அது படத்தில் இருக்காது. படத்திற்கு சென்சார் கேட்டோம். ஆனால், அவர்கள் அரசு துறை சார்ந்தவர்கள் என்பதால், உங்களுடன் பணியாற்ற முடியாது. நீங்கள் படத்தை முடித்து, தணிக்கை சான்றிதழுக்கானபணிகளை செய்யுங்கள், எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறோம், என்று சொன்னார்கள். அதே சமயம், படக்குழுவுக்கு திரையிட சென்சார் சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் நோபல் சாதனை அமைப்பும், நீங்கள் படத்தை முழுமையாக முடித்து திரையிட்ட உடன் உங்களுக்கு சான்றிதழ் வழங்குவோம். திரையிடுவது மிக அவசியம் என்று சொன்னார்கள். அதனால், பிரசாத் லேபில் அவர்களுக்கு திரையிட இருக்கிறோம்.” என்றார்.
இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பிக்கய் அருண், “நான் நிறைய கதைகளை எழுதி வைத்து அதை வேறு சிலர் படமாக எடுத்து விட்டார்கள். அனைத்தும் பெரிய பெரிய படங்கள். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் யார் என்பது இப்போது சொல்ல முடியாது, ஆனால் நிச்சயம் ஒரு நாள் சொல்வேன். அதனால் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நல்ல கதை, அதை நல்லபடியாக எடுத்து முடித்தாலும் கூட புதியவர்கள் என்பதால் அந்த படங்களை வாங்க மறுக்கிறார்கள். அதுபோல் பல படங்கள் இருக்கிறது. நல்ல படமாக இருந்தாலும் புதியவர்கள் என்பதால் அந்த படங்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை. இதுபோன்ற ஒரு புதிய முயற்சி என்றால் நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள், பிறகு படம் நன்றாக இருந்தால் அது மக்களிடம் எளிதில் சென்றடையும். அதற்காக தான் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டேன். இது மிகப்பெரிய ரிஸ்க்கான முயற்சி தான் என்பது எனக்கு தெரியும், ஆனால் அதை நிச்சயம் வெற்றிகரமாக செய்து முடித்து சாதிப்பேன், என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி.பி, ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குநர் பிக்கய் அருண் இயக்குகிறார். இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஃபெடரிக், ஆனந்தி விஜயகுமார், குழந்தை நட்சத்திரம் டோர்த்தி எஸ்.ஜே, கிருதேவ்.கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கமல்ஜித் சிங் இசையமைக்கிறார். பிரவின்.எம் படத்தொகுப்பு செய்கிறார். ஒலி வடிவமைப்பாளராக கரண் மற்றும் ஷிபின் பணியாற்றுகிறார்கள். பெருதுளசி பழனிவேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

