சந்தானம் நடித்து, வரும் ஜூலை 28-ம் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்.’
‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ பட நாயகி சுரபி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்க, ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் சந்தானம், ‘‘நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக டிடி ரிட்டர்ன்ஸை முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்ஸும் மக்களின் மனங்களை கவரும் என்று நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இயக்குநர் பிரேம் ஆனந்த் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும்படி இருக்கும். படத்திற்கு ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் பிரேம் ஆனந்த், ‘‘இன்று உங்கள் முன்னால் இயக்குநராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானம் அவர்களும் ராம்பாலா அவர்களும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகளாக சந்தானம் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய் படங்களில் பார்த்தது எதுவும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் இருக்காது. மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும்” என்றார்.
நடிகை சுரபி, ‘‘இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம் நான் பேய் படத்தில் முதல் முறையாக நடித்துள்ளேன்” என்றார்.
நிகழ்வில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், பாடலாசிரியர் துரை, ஒளிப்பதிவாளர் தீபக், இசையமைப்பாளர் ஆஃப்ரோ, சண்டை பயிற்சியாளர் ஹரி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் மோகன், நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, கூல் சுரேஷ், பிபின், சாய் தீனா, சேது, தங்கதுரை, மாறன், பெப்சி விஜயன், நடிகை மசூம் ஷங்கர், குழந்தை நட்சத்திரம் மானஸ்வி, பெப்சி செயலாளர் சுவாமிநாதன் என பலரும் பேசினார்கள்.