சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் டி பிளாக்!
காட்டுக்குள் இருக்கும் அந்த இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகள் காணாமல் போவதும், சிலர் சிறுத்தை தாக்கி இறப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
மாணவிகளின் மரணங்களுக்கு காரணம் சிறுத்தையல்ல; சைக்கோ கொலைகாரன் என அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்கிறார் அதே கல்லூரியில் படிக்கும் அருள்நிதி. நண்பர்கள் உதவியுடன் காட்டில் தேடியலைந்து அந்த கொலைகாரனைக் கண்டுபிடிக்கிறார். அவன் காட்டெருமை தேகத்துடன் அசுரபலமிக்கவனாக இருக்கிறான். அந்த ராட்சசனை அழித்தொழித்து மாணவிகளைக் ரட்சிக்க களமிறங்குகிற அருள்நிதியும் அவருடைய நண்பர்களும் சந்திக்கிற சவால்களே மீதிக்கதை…
இயக்கம் ‘எரும சாணி‘ யூ டியூப் விஜய் குமார் ராஜேந்திரன்
அருள்நிதி முந்தைய படங்களைவிட கூடுதல் பொலிவோடு வருகிறார்; கல்லூரி மாணவர் வேடத்துக்கு பொருந்திப் போகிறார். நடிப்பு பற்றி சொல்ல வேறு ஏதுமில்லை!
ஹீரோயின் அவந்திகா மிஸ்ரா ஆரம்பக் காட்சிகளில் லட்சணமாக இருக்கிறார். பின்னர் முகம் முழுக்க அதிச்சியைச் சுமந்து திரிகிறார்.
கல்லூரி நிறுவனராக கரு. பழனியப்பன், பிரின்ஸிபலாக தலைவாசல் விஜய், வாட்ஸ்மேனாக ரமேஷ் கண்ணா, வார்டனாக உமா ரியாஸ், அருள்நிதியின் நண்பர்களில் ஒருவராக வருகிற படத்தின் இயக்குநர் என அத்தனை பேரின் நடிப்பும் நேர்த்தி. சைக்கோவாக வரும் சரண் தீப்பின் நடிப்பு சற்றே மிரட்டல்!
சீரியஸான கதைக்களத்தில் ‘ஆதித்யா’ கதிர் சற்றே கிச்சுகிச்சு மூட்ட முயற்சிக்கிறார். சில காட்சிகளில் மட்டும் அந்த முயற்சி வெல்கிறது.
ரோன் யத்தன் யோஹனின் பின்னணி இசை, அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்!
படத்தில் சைக்கோவிடம் மாட்டிய மாணவிகளைப் போல் – தெளிவில்லாத கதைக்குள், ஏனோதானோ திரைக்கதைக்குள் சிக்கித் தவிக்கிறது டி பிளாக். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படு சுவாரஸ்யமான திரில்லராக கவனம் ஈர்த்திருக்கலாம்!
நிறைவாக ஒருவரி… வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதிக்கு டி பிளாக் – பிளாக் மார்க்!