‘அன்யாஸ் டுடோரியல்‘ ( Anyas Ttutorial ) வலைத்தொடர் (Web Series) விமர்சனம்
சற்றே வித்தியாசமான ஹாரர் த்ரில்லர்!
ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கை. நிவேதிதா தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். தனியாக என்றால் சாதாரண தனிமையில்லை. ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரேயொரு வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிற சூழ்நிலை! அது மக்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிய கொரோனா ஊரடங்கு காலகட்டம் வேறு!
நிவேதிதா சமூகவலைதளங்களில் பிஸியாக இருப்பவர். அன்யா’ஸ் டுடோரியல் என இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பக்கம் உருவாக்கி அதன் மூலம் தன்னை பின் தொடர்பவர்களை பரபரப்பாக வைத்துக்கொள்ள, ஒப்பனை செய்வது கொள்வது எப்படி என கற்றுக் கொடுப்பதிலிருந்து ஏதேதோ செய்கிறார். அந்த தருணங்களில் அவர் தனித்திருக்கும் அந்த வீட்டில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தியின் நடமாட்டம் இருப்பதை உணர்கிறார். கதவு தானாக சாத்தப்பட்டு பூட்டப்படுகிறது; பல்பு வெடித்து சிதறுகிறது. ஆனாலும்,பேய் பிசாசெல்லாம் கிடையவே கிடையாது என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பயத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறார். அடுத்தடுத்தும் அச்சமூட்டும் நிகழ்வுகள் தொடர்கிறது. கூடவே இன்ஸ்டாவுக்காக வீட்டிலிருந்த தட்டுமுட்டுப் பொருட்களை வைத்து அவர் உருவாக்கிய பேய் பொம்மையும் அசைகிறது… நிவேதிதாவின் உறுதியான மனதும் ஆட்டம் காண்கிறது!
எல்லாவற்றையும் தன் வீட்டிலிருந்து தங்கையின் போன் உரையாடல் மூலமும் லேப்டாப் கேமரா மூலமும் கவனித்துக் கொண்டிருக்கிற ரெஜினாவுக்கு, தனது தங்கையின் நிலைமை விபரீதமாவது புரிகிறது. இது தொடரின் முன்பாதி…
உண்மையிலேயே அந்த வீட்டுக்குள் என்னதான் பிரச்சனை? விபரீதத்திலிருந்து நிவேதிதா தப்பித்தாரா? ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வர இயலாத சூழலில் தங்கைக்கு அக்கா எந்தவிதத்தில் உதவினார்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் மிச்சமீதி…
இரு பெண்களை கதையின் நாயகிகளாக்கி தொடரை இயக்கியிருப்பதும் ஒரு பெண்… பல்லவி கங்கிரெட்டி
விதவிதமாக முகத்தைத் சுளித்து, சுருக்கி, விரித்து, கோணலாக்கி என பலவிதமாக முகபாவம் காட்டியபடி பத்து வார்த்தைக்கு எட்டு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசுகிற பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் ரெஜினா. தொடரின் பின்பாதி அத்தியாயங்களில் அவர் தந்திருக்கும் நடிப்பு துடிப்பு!
நாகரிகத்தின் உச்சத்திலிருக்கிற பெண்ணாக நிவேதிதா சதீஷ். மனதில் பயம் தொற்றினாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சமாளிக்கும்படியான காட்சிகளில் வெளிப்படுத்தும் அவரது நடிப்பு அழகு. கதைப்படி பெரும்பாலான காட்சிகளில் கேமரா தன்னையே சுற்றிக் கொண்டிருக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப இயல்பாக நடித்திருப்பது நேர்த்தி!
போகிறபோக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மனிதர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். அவர்களின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு!
கதையோட்டத்தில் இருள் காட்சிகள் அதிகம்; ஒரே வீட்டிலேயே சுற்றிச்சுழல்கிற கதைக்களம்… கேமராவை எப்படி சுழற்றினால் சலிப்பு தட்டாது என உணர்ந்து உழைத்திருக்கிற ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!
காதுக்கு இம்சை தராத, அளவான அதிர்வலைகளைப் பிரதிபலிக்கும் பின்னணி இசையும், கலை இயக்குநரின் மெனக்கெடலும் தொடருக்கு பலம்!
படு ஸ்லோவாக நகரும் காட்சிகள், என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என எதுவும் புரியாமல் தொடரும் சம்பவங்கள் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் பொறுமையைச் சோதிக்கும் சங்கதிகள்… ஆனாலும் கமர்ஷியல் சினிமாவுக்கான மசாலா அம்சங்களை பெரிதாய் தொடாமல் எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக திரைக்கதை அமைத்திருப்பது தனித்துவம்!
ஆரம்பத்தில் அமைதியிலும் அமைதியாக நகரும் தொடரின் பின்பாதி ரத்தக்களறிக் காட்சிகள் பகீர்; திகீர்! வித்தியாசமான, கிறுக்குத் தனமாக படங்களை, வெப் சீரிஸ்களை ரசிப்பவர்களுக்கு அன்யா டுடோரியல் அகம் குளிர்விக்கலாம். மசாலாப்பட பிரியர்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பது நலம்!
ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் ஆஹா (Aha) ஓடிடி.யில் பார்க்கக் கிடைக்கிறது. #AnyasTutorialOnAHA Screaming from July 1st