டார்க் காமெடி சப்ஜெக்டில், பாலியல் தொழிலாளி ஒருவரை கதையின் மையமாக வைத்து சுழல்கிற ‘டியர் ரதி.’
ரதி பாலியல் தொழிலாளி. அவளை பணம் கொடுத்து அனுபவிக்கச் செல்கிற நம் கதையின் ஹீரோ மதன், அனுபவித்தோமா கிளம்பினோமா என்றில்லாமல், ‘உன்னுடன் ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும்; என்னுடன் டேட்டிங் வர முடியுமா?’ என்கிறான். அவள் ஒரு மணி நேரத்துக்கு 5000 கேட்கிறாள். அதை கொடுக்க அவன் தயாராக இருக்கிறான். மறுநாள் அவள் அவனுடன் ‘டேட்டிங்’கிற்காக இணைகிறாள்.
அதே நேரத்தில் போலீஸ் அதிகாரியொருவர், தன் துப்பாக்கியை தூக்கிச் சென்றுவிட்டதாக சொல்லி அவளைத் தேடி புறப்படுகிறார். தன்னை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டாலும், தன் சொல்லுக்கு மாறாக எதை செய்தாலும் அவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிற வரதன் என்கிற டெரர் ஆசாமி ஒருவனும் அவளைத் தேடி தன் அடியாளுடன் கிளம்புகிறான்.
அப்போதே அவள் வெறும் பாலியல் தொழிலாளி மட்டுமல்ல; வில்லங்கமானவள் விவகாரமானவள் என்பது புரிகிறது.
அவள் போலீஸ் அதிகாரியிடமிருந்து துப்பாக்கியைத் தூக்கியது ஏன்? அவளை வரதன் ஏன் தேடுகிறான்? டேட்டிங் என கிளம்பியவள் எங்கு போனாள்? அவளை தேடுகிறவர்களுக்கு அவள் கிடைத்தாளா? அவள் யார்? அவளது பின்னணி என்ன? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் மனதில் உருவாகிறது. அதற்கான பதில்களாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் கே மணி.
எந்த பெண் மீது ஆசைப்பட்டாலும் அவளுக்கு உடனே திருமணம் நடந்துவிடும்; யாரை காதலித்தாலும் ஏதாவது ஏடாகூடமான சம்பவம் நடந்து பிரேக் அப் ஆகிவிடும். அப்படியொரு ராசிக்காரராக, கதாநாயனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம். பாலியல் தொழிலாளியுடன் டேட்டிங் போகும்போது அவளைத் தேடுகிறவர்களால் பிரச்சனைக்கு ஆளாகி, சிறியளவில் ஹீரோயிஸம் செய்து அதையெல்லாம் சமாளித்து, அவள் மீது காதலாகி என ஒரே நாளில் ஏகப்பட்ட விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் இயல்பான நடிப்பால் நிறைவு செய்கிறார்.
பாலியல் தொழிலாளியுடன் படுத்திருக்கும்போது அவள், ‘உனக்கு இது ஃபர்ஸ்ட் டைமா?’ என கேட்க, ‘ஆமாம், உங்களுக்கு?’ என கேட்டு அந்த தருணத்தை சுவாரஸ்யப்படுத்துகிறார். தன் மனதுக்கு நெருக்கமாகிவிட்ட பெண் ‘திடீர்னு நான் செத்துப் போயிட்டா என்ன பன்ணுவே?’ என்பதுபோல் கேட்க, ‘கொன்னுடுவேன்’ என பதிலளிப்பது ரசிக்க வைக்கிறது.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அடிக்கடி குளோசப்பில் முகம் காட்டி காதல்னா என்னன்னு தெரியுமா? கணவன் மனைவின்னா என்னன்னு தெரியுமா? அப்போ என்ன நடந்துச்சுனு தெரியுமா? இப்போ என்ன நடக்குதுன்னு தெரியுமா? என்பதுபோல் கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களாய் என்னென்னவோ சொல்கிறார். ‘யய்யா ராசா, போதும்யா’ என்று குரல் கொடுக்கத் தோன்றுகிறது.
கதைநாயகியாக ஹஸ்லி அமான். பாலியல் தொழிலாளி என்றாலும் ஆபாசமாக வெளிப்படும்படியான, கவர்ச்சி காட்டும்படியான காட்சிகள் இல்லை. உற்சாகம், வலி, விரக்தி, சூழ்ச்சி என எல்லாவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கவும், சாமர்த்தியமாக, துணிச்சலாக, துப்பாக்கியால் சுடுதல் என பல விதமாக செயல்படும்படியும் பல காட்சிகள் உண்டு. எல்லாவற்றிலும் பொருத்தமான முகபாவங்களைக் காட்டி கதையின் நகர்வை பலமாக்கியிருக்கிறார்.
காட்டுத்தனமாக கத்துவது, முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, சரமாரியாக சுட்டுத்தள்ளுவது என வில்லத்தனத்தை அதற்கான கெத்துடன் செய்திருக்கிறார் ராஜேஷ் பாலச்சந்திரன்.
பசுபதிராஜ், சாய் தினேஷ், யுவராஜ் சுப்ரமணியன், சரவணன் பழனிச்சாமி, தமிழ்ச் செல்வன், விஷ்ணு சந்திரசேகர், ஹரிணி திருவேங்கடம் உள்ளிட்ட இன்னும் சிலருக்கு படம் முழுக்க பயணிக்கிற முக்கியத்துவமுள்ள கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.
ஜோன்ஸ் ரூபர்ட்டின் பின்னணி இசை கச்சிதம். டார்க் காமெடிக்கான கதைக்களத்தை அதற்கேற்ற ஒளியுணர்வையும் கோணங்களையும் அமைத்து காட்சிகளின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் லோகேஷ் இளங்கோவன்.
காமெடி கொஞ்சமாகவும், வன்முறை வெறியாட்டம் மிதமாகவும் கலந்துகட்டி காதல் தூவிப் பரிமாறப்பட்டிருக்கும் புத்தாண்டின் முதல் வரவான இந்த ‘டியர் ரதி’ ஜென்ஸி தலைமுறையின் ரசனைக்கேற்ற தீனி!
-சு.கணேஷ்குமார்


