‘கதைக்களம் ரவுடியிசம்; காட்சிகள், வசனங்களில் ஹீரோயிசம்’ என புகுந்து விளையாடியிருக்கும் ‘டைனோசர்ஸ்.’
வட சென்னையில் சாலையார், கிளியப்பன் என இரண்டு பெரிய ரவுடிகள். அவர்களில் கிளியப்பன் தரப்பில் ஒருவர், சாலையார் தரப்பு ஆட்கள் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தவர்கள் சட்டத்திடம் சரணடைந்து சிறைக்குச் செல்கிறார்கள்.
சிறைக்குச் சென்றவர்களில் கொலையில் ஈடுபட்ட முக்கியமான நபர் விடுபட்டுள்ளது கிளியப்பனுக்கு தெரியவருகிறது. அந்த நபர் யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். கதைக்களம் சூடு பிடிக்கிறது…
கிளியப்பன் அந்த நபரை எப்படி கண்டுபிடிக்கிறார், எப்படி சம்ஹாரம் செய்கிறார் என்பதெல்லாம் அடுத்தடுத்த சம்பவங்கள்.
கதை அத்தோடு முடியவில்லை. ஹீரோவின் என்ட்ரீ, இருதரப்பு மோதல் அது இதுவென கதை அங்கிருந்துதான் துவங்குகிறது… படு சீரியஸான கதைக்களத்தில் ஆங்காங்கே சிரிப்பு மசாலாவும் தூவப்பட்டிருக்கிறது. இயக்கம் எம் ஆர் மாதவன்
தன் வசிப்பிடத்தைச் சுற்றி வெட்டுக் குத்து, ரத்தச் சகதி என்றிருந்தாலும் ‘யார் ரெக்வெஸ்ட் வெச்சாலும் அக்யூஸ்ட் ஆகமாட்டேன்’ என்ற கொள்கையோடு ஜாலியாக சுற்றித் திரிகிற கதாபாத்திரத்தில் உதய் கார்த்திக். மனதுக்குப் பிடித்தவளின் பெயரை டூ வீலரின் டயரால் எழுதிக் காட்டும் சாகசம், சடலத்தை சுற்றிச் சூழ்ந்திருக்கும் பாட்டிகளை அழச் சொல்லி அலப்பரை கூட்டுவது என அவரிடமிருந்து வெளிப்படும் அலட்டலான நடிப்பு ரசிக்க வைக்கிறது. சீரியஸான காட்சிகளில் அலட்டலை அடக்கி வாசித்திருப்பது கச்சிதம்!
அட்டு’ ரிஷி, ‘அடிதடிப் பேர்வழிதான், ஆனாலும் பாசக்கார மனிதன்’ என கலந்து செய்த கலவையாய் செம ஃபிட்டு!
சாலையாராக வருகிற மானெக்ஷாவின் பார்வையில் அனல் பறக்கிறது!
தன் வீட்டுக்குள்ளிருக்கும் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஸ்கெட்ச் போடும் காட்சியில், கிளியப்பனாக வருகிற கவின் ஜெய் பாபுவின் நடிப்பு ஆஸம் சொல்ல வைக்கும் அட்டகாசம்!
சிங்கத்தின் குகை என தெரியாமல் சென்று சிக்கிக் கொண்ட மானின் நிலைமைக்கு ஆளாகிற காட்சியில் மிரளும்போது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், துரை என்கிற பிரதான பாத்திரத்தில் வருகிற ஸ்ரீனி மாறா!
பெரிய விழிகள் அலை பாய்வதும், பருத்த இதழ்களின் மினுமினுப்பும் அழகாக இருக்கிற கதாநாயகி சாய்பிரியா தேவாவை கூடுதல் அழகாக்கியிருக்கின்றன!
சிறிய கத்தியிலிருந்து பெரிய சைஸ் அரிவாள் வரை தூக்கிவீசி ‘உன் அப்பனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’ என ஒருவரிடம் ஆவேசம் காட்டும் காட்சியில் மிரட்டியிருக்கிறார் கதாநாயகனுக்கு அம்மாவாக வருகிற ஜானகி!
மற்ற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு படத்தின் பலம்!
காட்சிக்கு காட்சி வசனங்களில் இருக்கிற வார்த்தை ஜாலங்கள் கவனிக்க வைக்கின்றன, கலகலப்பூட்டுகின்றன!
படத்தில் ‘அல்லா கோவிந்தா அல்லேலுயா’ என ஒரு வசனம் வருகிறது. அதற்கு எழும் சிரிப்பலையால் கண்டிப்பாய் தியேட்டர் குலுங்கும்!
பரபரப்பான திரைக்கதைக்கு விறுவிறுப்பான பின்னணி இசை தந்திருக்கிறார் போபோ சசி!
காட்சிகள் சுறுசுறுப்பாக நகர உதவியிருக்கிறது ஜோன்ஸ் வி ஆனந்தின் நேர்த்தியான ஒளிப்பதிவு!
ரவுடிகளின் ரத்தம் தெறிக்கும் போர்க்களம்தான் கதைக்களம். அதை, சற்றே மாறுபட்ட திரைக்கதை மெருகேற்றியிருப்பதால் போரடிக்கவில்லை!